மே 12, 2018 அன்று நியூ ஜெர்சி மாநிலத்தின் எடிசன் நகரில் நடந்துவரும் திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளியின் எட்டாவது ஆண்டுவிழா எடிசன் உயர்நிலைப்பள்ளி அரங்கத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்தப் பள்ளி 570 மாணவர்கள் மற்றும் 75 தன்னார்வலர்களுடன் இயங்கி வருகிறது
காலை 9 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் அமெரிக்க நாட்டுப் பண்ணுடன் விழா தொடங்கியது. தொடக்கத்தில் ஆசிரியர் திரு. வெங்கடேசன் பக்கிரிசாமி விழாவிற்கு வந்திருந்தோரை வரவேற்றார். எடிசன் நகர மேயர் திரு. தாமஸ் லேங்கி (Mr. Thomas Lankey) சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். அவர் தமது உரையில் பள்ளி மாணவர்களையும், ஆசிரியர்களையும் வெகுவாகப் பாராட்டி, இப்பணி மேலும் தொடர ஊக்குவித்தார். அவருக்கு நன்றி தெரிவித்து நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. காண்க: youtube.com சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்த முனைவர் மற்றும் மருத்துவர் அருள் வீரப்பன், மருத்துவர் சுந்தரம் பழனிசாமி (நிறுவனர், நியூ ஜெர்சி தமிழ்ச்சங்கம்), திரு. கல்யாண் முத்துசாமி (தலைவர், நியூ ஜெர்சி தமிழ்ச்சங்கம்), திரு. சசிகுமார் ரங்கநாதன் (வள்ளலார் தமிழ்ப்பள்ளி), திரு. மணிகண்டன் மற்றும் திரு. ராஜசேகர் (தமிழ் ஜெர்சி பள்ளி), திரு. மோகன்தாஸ் சங்கரன் (குருவாயூரப்பன் தமிழ்ப்பள்ளி) ஆகியோருக்கு மலர்க்கொத்து கொடுத்து கௌரவித்தனர்.
தொடர்ந்து மழலையரின் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தித்திமி, எங்க ஊரு வண்டி, எங்க மொழி நல்ல மொழி மற்றும் தமிழுக்கும் அமுதென்று பேர் போன்ற பாடல்களுக்கு நடனமாடினர். ஓடிவிளையாடு பாப்பா போன்ற பாடல்கள் பாடினர். ஆத்திசூடி, தமிழ் பழமொழிகளை ஒப்புவித்து பார்வையாளர்களைக் கவர்ந்தார்கள். மேடையில் 3, 4 வயது மழலை மொட்டுக்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டது மிக அழகு.
அடிப்படை நிலை மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளில், உழவர்களின் இன்றைய நிலை மற்றும் ஜல்லிக்கட்டு, இனா மீனா டிக்கா, பொங்கல், காக்கை இல்லா சீமையிலே போன்ற பாடல்களுக்கும், அச்சமில்லை அச்சமில்லை என்ற பாரதியார் பாடலுக்கும் நடனமாடினர். இந்தியாவில் விடுமுறை கழிப்பது பற்றிய சிறு நாடகமொன்றும் அரங்கேறியது.
முதல்நிலை மாணவர்கள், சங்க காலத்தில் ஐந்திணைகள் பற்றிய அறிமுகமும் இன்று தமிழ் நாட்டில் நிலங்களின் நிலையும் என்ற வீதி நாடகம், மரபணு மாற்றப்பட்ட உணவுகள் குறித்த நாடகம், செந்தமிழ் நாடெனும் போதினிலே என்ற சிறு நாடகம், 'கிராமமா? நகரமா?' நகைச்சுவை நாடகம் ஆகியவற்றை வழங்கினர். மேலும் பரதநாட்டியம், கரகம் ,கும்மி, குறத்தி குறவன் ஆட்டம், மயிலாட்டம் போன்ற நடனங்களைச் சிறப்பாக ஆடினார்கள். 'சங்கே முழங்கு' என்ற எழுச்சிமிக்க பாடலைக் காண பாரதிதாசனே நேரில் தன் உருவப்பட வடிவில் வந்திருந்தது சிறப்பு.
அடுத்து தமிழ் இலக்கியங்களில் புதைந்து கிடைக்கும் சிறப்புகளை விளக்கியும், உறுப்பு தானம் பற்றியும் நாடகங்கள் அரங்கேறின. 'பணம் எங்கே?' என்ற துப்பறியும் நாடகம் புதுமையாக இருந்தது. தொடர்ந்து வள்ளுவரும் பாரதியும் இன்றைய தமிழ் மொழியின் நிலையைக் காண வருவதாகவும், ஹார்வர்டு தமிழ் இருக்கை குறித்தும், 1950லிருந்து 2018வரை தேர்ந்தெடுத்த திரைப்படப் பாடல்களும், காவல் தெய்வ வழிபாட்டுப் பாடல்களுக்கு நடனங்களும் யாவும் வெகுசிறப்பு.
பள்ளி முதல்வர் திருமதி சாந்தி தங்கராஜ் மற்றும் துணைமுதல்வர் திரு. லஷ்மிநாராயணன் தன்னார்வ தமிழ் ஆசிரியர்களுக்கு மேடையில் சிறப்புச் செய்தனர்.
நாள்முழுவதும் விழாவினை திரு. பிரசன்னா ராவ், திரு. குணசேகரன் செல்லப்பன், திருமதி. நித்யா வேலுசாமி, திரு. மகாராஜன் ராஜரெத்தினம், திருமதி. கரோலின் செபஸ்தி, திரு. பாலாஜி ஹரிஹரசுந்தரம், திருமதி. கனிமொழி ம.வீ, திரு. வெங்கடாச்சலம் ராஜகோபாலன் ஆகியோர் சிறப்பாகத் தொகுத்து வழங்கினர். ஒலி-ஒளி அமைப்பினைச் சிறப்பாக வழங்கிய திரு. இளங்கோ சௌந்தர்ராஜன், திரு. கார்த்திக் காவேரிசெல்வன், திரு. ஜவகர் ஆகியோரின் சீரிய பணி பாராட்டத்தக்கது. பின்மேடை நிர்வாகம் மற்றும் நிகழ்ச்சி-வரிசை ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. இதில் பள்ளி மாணவர் சூர்யா செந்திலின் சிறப்பான பணி, வரும் நிகழ்ச்சிகளில் மாணவர்களையும் தன்னார்வலர்களாக அழைக்கத் தூண்டுகிறது. நடன ஆசிரியர் திரு. பாலாஜி பல வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பாகப் பயிற்சி அளித்தார்.
திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளியின் நிறுவனர்களில் ஒருவரான திரு. முத்துசாமி செந்தில்நாதன் நன்றியுரை வழங்க விழா நிறைவுபெற்றது.
வலைமனை: www.jerseytamilacademy.org
கனிமொழி ம.வீ, குரு ராகவேந்திரன் - தமிழ்ப் பள்ளி ஆசிரியர்கள் |