மே 12, 2018 அன்று, அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகளின் 11வது ஆண்டு நிறைவு நாள், டேரியன், இல்லினாயிலுள்ள இன்ஸ்டெல் பள்ளி வளாக அரங்கத்தில் நடந்தேறியது. டேரியன், டெஸ்பிளெய்ன்ஸ், கெர்ணி, மில்வாக்கி, நேப்பர்வில் மற்றும் ஷாம்பர்க் ஆகிய இடங்களில் செயலாற்றிவரும் அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகளில் பயின்றுவரும் மாணாக்கர்களும், இல்லத்தவர்களும் கலந்துகொண்டனர். பல்சுவை நிகழ்ச்சிகளைக் கொண்ட இந்த ஆண்டு நிறைவு நாள், தமிழ்ப்பள்ளியின் வழக்கமான தமிழறிஞர்களுக்கு நினைவஞ்சலியுடனும், தமிழ்மண் காத்த மாவீரர்கட்கு வீர வணக்கத்துடனும் அமைந்த தலைமை உரையுடன் தொடங்கியது. குறட்பாக்கள், ஆத்திசூடி, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுடன் நிகழ்ச்சியை ஆரம்பித்தனர்.
எல்லா நிகழ்வுகளையும் தமிழோடு, தமிழ்ப் பண்பாட்டையும் மையமாக கொண்டே அமைத்திருந்தனர். டெஸ்பிளெய்ன்ஸ் பள்ளியின் 'தமிழின் பெருமை' நிகழ்ச்சி தமிழின் மேன்மையை உணர்த்துவதாக இருந்தது. வில்லுப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு ஷாம்பர்க் மற்றும் டேரியன் பள்ளிகள் நடத்திய நிகழ்ச்சிகள் அரிய கருத்துகளைக் கூறின. விவேகானந்தரின் அருமை பெருமைகளை ஷாம்பர்க் பள்ளி மாணவர்கள் நயம்பட எடுத்துரைத்தார்கள். பட்டிமன்றம் 'மின்னணு சாதனம்' என்ற தலைப்பில் நேப்பர்வில் மாணாக்கர்கள் வழங்கினர். 'நேற்று - இன்று' எனக் கெர்ணி தமிழ்ப்பள்ளியும், 'ஊக்கமது கைவிடேல்' என ஷாம்பர்க் தமிழ்ப்பள்ளியும், 'பாரதியார்' என நேப்பர்வில் தமிழ்ப்பள்ளியும் நாடகங்களை வழங்கிக் கண்டோரின் கருத்தைக் கவர்ந்தனர். இவை தவிர தத்துவப் பாடல்கள், 'வான் சிறப்பு' மற்றும் 'எங்கள் தமிழ்' பாடல்கள் விருந்தாக அமைந்தன.
திருக்குறள் ஒப்பித்தல், 'சொல்லாட்சி', 'சொல் ஒன்று-பொருள்' எனத் திருக்குறள் சார்ந்த போட்டிகள் நடத்தப்பட்டன. அதிக எண்ணிக்கையில் திருக்குறள் கூறிய மாணாக்கர்களுக்கும் அவர்தம் பெற்றோர்க்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இவற்றோடு பழமொழி மற்றும் சொற்சிலம்பம் போட்டிகளும் நடந்தேறின.
முதன்மையாக வந்தோருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. அன்னையர்க்கு 'அன்னையர் தின' நன்றிக் காணிக்கை வழங்கப்பட்டது.
ப்ரியா பாலசந்திரன், சிகாகோ, இல்லினாய் |