சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கம்: தமிழ்ப் புத்தாண்டு விழா
மே 19, 2018 அன்று டெக்சஸ் மாநிலத்தின் சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கம் சான் ஆண்டோனியோ இந்துக் கோவில் வளாகத்தில் உள்ள மஹாலக்ஷ்மி ஹாலில் 'விளம்பி' புத்தாண்டின் வரவைக் கொண்டாடினார்கள். விழா நிகழ்ச்சிகளை நஃபீஸா அப்பாஸ், ஷீலா ரமணன் மற்றும் சங்கீதா சுந்தரம் தொகுத்து வழங்கினர்.

சான் ஆண்டோனியோ தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்துக்களுடன் விழாவைத் துவக்கிவைத்தனர். குழந்தைகளின் நடனங்கள் விதவிதமான பெயர்களில் - தமிழ் பாய்ஸ், தமிழ் பசங்க, குட்டீஸ் சுட்டிஸ், லிட்டில் சார்மர்ஸ், தெறி பேபி, லிட்டில் ராக்கர்ஸ், ஜல்லிக்கட்டுப் பட்டாளம், ரோசாக் கூட்டம், ரிதமிக் ராக்கர்ஸ், ஜில்-ஜங்-ஜக், மலரும் மொட்டுக்கள், கிராமத்துச் சிட்டுகள் என! வீட்டில் ரைம்ஸ் பாடிக்கொண்டிருக்கும் குட்டிப் பிள்ளைகளா இவர்கள் என ஆச்சரியப்படும் வகையில் அசத்திவிட்டனர்.

பெரியவர்களின் நடனங்களும் பிரமாதம். இயற்கையை அழிப்பதால் பறவைகளுக்கும் எவ்வளவு பாதிப்பு என்று ஒரு நடனத்தின் மூலம் உணர்ச்சி பூர்வமாக வெளிக்காட்டினர் ஒரு நடனக் குழுவினர். ஐந்து வயதுச் சிறுமி, ஔவையாரின் 'மூதுரை'யை மழலையில் அழகாகச் சொன்னாள். ஒரு மெலடி கேட்பதற்கு இனிமையாகவும், ஒரு துள்ளல் பாட்டு அரங்கத்தை அதிர வைப்பதாகவும் இருந்தது. நாட்டியத் தாரகைகளாக வந்த அழகிய சிறுமிகள் நடேச கௌத்துவத்தைச் சிறப்புடன் ஆடினர்.

தமிழ்ப்பள்ளிச் சிறுவர்கள் பங்கேற்ற சிறப்புப் பட்டிமன்றம் "விடுமுறையைக் கொண்டாட குழந்தைகள் அதிகம் விரும்புவது" அமெரிக்காவில் என ஓர் அணியினரும், இந்தியாவில் என மற்றோர் அணியினரும் விவாதித்து கைதட்டலை அள்ளிச் சென்றனர். அதே பள்ளி, பெரியவர்களும், குழந்தைகளும் சேர்ந்து 'சான்றோர்கள் அறிமுகம்' என்னும் நிகழ்ச்சியில் அப்பர், அருணகிரிநாதர், மாணிக்கவாசகர் போன்றோரை அவர்களைப்போலவே உருவமேற்று வந்து சிறப்பித்தது பாராட்டுக்குரியது.

இறுதியில் 'ப்ரியாவின் கூத்துப் பட்டறை' குழுவினர் இதிகாச காலம் முதல் இக்காலம் வரையிலான நிகழ்வுகளை, காதல், அரசியல், காவேரிப் பிரச்சனை எனப் பலரசமும் கலந்த நாட்டிய நாடகமாக அரங்கேற்றினர்.

ஜூன் 9ம் தேதியன்று சான் ஆண்டோனியோவில் நடக்கவிருக்கும் 4வது சர்வதேச யோகா நாளைப் பலவித பயிற்சி வகுப்புகளுடன் கொண்டாட இருப்பதால், எல்லா வயதினரும் வந்து கலந்துகொள்ளுமாறு நற்குணன் அழைப்பு விடுத்தார். பின்னர், ஜூன் மாதக் கடைசியில் நடக்கவிருக்கும் 31வது வடஅமெரிக்கத் தமிழ்சங்கப் பேரவையின் மூன்று நாள் மாநாட்டு நிகழ்ச்சிகளைப் பற்றி ஷீலா ரமணன் ஒரு தொகுப்பை வழங்கினார்.

இறுதியில் தமிழ்ச்சங்க உறுப்பினர் குமார் நன்றியுரை ஆற்றினார். சங்கத் தலைவர் இராஜகுரு மற்றும் செயலாளர் கார்த்திகேயன் இருவரும் விழாவிற்கு உழைத்த தங்கள் குழுவிற்கும், வந்திருந்தோருக்கும் நன்றி கூறினர்.

ஷீலா ரமணன்,
சான் ஆண்டோனியோ

© TamilOnline.com