ஜூன் 2, 2018 அன்று சான் ஹோஸே C.E.T. சோடோ அரங்கில் செல்வன் கணேஷ் சங்கரன் பாட்டு அரங்கேற்றம் நடைபெற்றது. கணேஷ் ஃப்ரீமான்ட் ஸ்ரீ லலிதகான வித்யாலயாவில் 12 வருடம் கர்னாடக இசையை குரு லதா ஸ்ரீராமிடம் கற்றுவந்த மாணவர்.
நிகழ்ச்சியை ஸ்ரீராக வர்ணத்தில் துவங்கி இரண்டு முத்துஸ்வாமி தீக்ஷிதர் பாடல்களுடன் தொடர்ந்தார். முதலாவது மிகவும் ரசிக்கப்படும் "வாதாபி கணபதிம்" (ஹம்சத்வனி). இரண்டாவதாக "பாலாம்பிகையாபரம்" (கானடா) என்ற அரிதான பாடலை ஸ்வரங்களுடன் பாடினார். "ஸ்ரீ ரகுவரா" (காம்போஜி, தியாகராஜர்), "சந்திரம் பஜ மனசா" (அசாவேரி) என்ற முத்துஸ்வாமி தீக்ஷிதரின் நவகிரஹ கிருதியையும் பாடினார்.
கோபாலகிருஷ்ண பாரதியாரின் "சபாபதிக்கு வேறு தெய்வம்" என்ற பாடலை ஆபோகி ராகத்தில் ஆலாபனை, கல்பனா ஸ்வரங்களுடன் அருமையாகப் பாடினார். "ஏதா உனரா" என்ற தியாகராஜ கிருதியை ராக ஆலாபனை, கல்பனா ஸ்வரம், நிரவலுடன் பாடி மனம் கவர்ந்தார். "மா ரமணன்" (ஹிந்தோளம், பாபநாசம் சிவன்), "வந்தே வாசுதேவம்" (ஸ்ரீராகம், அன்னமாச்சார்யா), "வடவரையை மத்தாக்கி" (ராகமாலிகை, இளங்கோ அடிகளார்), "வந்தேஹம் குருவரம்" (பேஹாக்), "மறிவேறெதிக்கே" (ஷண்முகப்ரியா, பட்ணம் சுப்ரமண்ய ஐயர்) ஆகிய பாடல்களை அடுத்து, ஆனந்தபைரவி தில்லானாவை சிறப்பாகப் பாடினார். ரேவதி ராகத்தில் அமைந்த திருப்புகழைப் பாடி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
திரு. ரவீந்திர பாரதி ஸ்ரீதரன் மிருதங்கத்திலும், திரு. விக்ரம் ரகுகுமார் வயலினிலும் கணேஷுக்குப் பக்கபலமாக வாசித்தனர். நிகழ்ச்சியின் இறுதியில் திருமதி. லதா ஸ்ரீராம், வெள்ளியில் செய்யப்பட்ட சான்றுப்பதிவைக் கணேஷுக்கு அளித்தார். நன்றி உரையில் கணேஷ் தனது இசைப்பயிற்சியில் குருவின் பங்கு மிகையானது என்று கூறினார்.
ரமாதேவி கேசவன், ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா |