சிகாகோவில் இயங்கி வரும் லாபநோக்கற்ற CAIFA மற்றும் GC Vedic அமைப்புகள் இணைந்து, ஆதிசங்கரரின் வாழ்க்கையை 'சர்வம் பிரம்மமயம்' என்ற தலைப்பில் தமிழ் நாடகமாக வழங்க இருக்கிறது. இது வருகிற ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி, சனிக்கிழமை மாலை 5.30க்கு சிகாகோ லெமாண்ட் நகரில் அமைந்துள்ள ஸ்ரீராமர் ஆலயத்தின் கலை அரங்கில் நடக்க இருக்கிறது.
மகான் ஆதிசங்கரரின் பிறப்பிலிருந்து அவர் பிரம்மத்தில் கலக்கும்வரை, அவர் வாழ்வில் நடக்கும் முக்கிய நிகழ்ச்சிகள் இந்த நாடகத்தில் சித்திரிக்கப்பட்டுள்ளன. ஆதிசங்கரரின் அவதார நோக்கம், பிறப்பு, இளமையில் சன்யாசம் பெறுவது, வியாசருடன் விவாதிப்பது, மண்டனமிஸ்ரருடன் வாதப் போரில் ஈடுபட்டு, அவரைத் தம் சீடராக்குவது போன்ற சம்பவங்களை இந்த நாடகம் சுவைபடக் காண்பிக்கிறது.
இதில் இருபதுக்கும் மேற்பட்ட நண்பர்கள் நடிக்கிறார்கள். அரங்க நிர்வாகத்தை ரவிகுமார், கணேஷ் குழுவும், அரங்கப் பொருட்களை ஸ்ரீராம், ப்ரியா, இந்துவும், ஒப்பனை மற்றும் ஆடை அலங்காரங்களை சுபஸ்ரீ, அனிதா ஆகியோரும் பொறுப்பேற்று நடத்துகிறார்கள்.. இந்த நாடகத்தை எழுதி இயக்கியவர் சேகர் சந்திரசேகர்.
போன வருடம் இதே குழு ஸ்ரீமத் ராமானுஜரின் ஆயிரமாவது விழாவை முன்னிட்டு ஸ்ரீதுஷ்யந்த் ஸ்ரீதர் முன்னிலையில் நடத்திய 'ஏற்றம் தந்த யதிராஜர்' என்னும் ராமானுஜரைப் பற்றிய நாடகம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
ப்ரியா நாராயணன், சிகாகோ, இல்லினாய் |