44 வருடங்களாக தமிழகத்திற்குச் சேவை செய்துவரும் தமிழ்நாடு அறக்கட்டளை (TNF) ஆயுள் உறுப்பினர்களின் எண்ணிக்கை இவ்வாண்டு ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இதன் 44வது ஆண்டு மாநாட்டினை நியூ ஜெர்ஸி மாநிலத்தில் மே 26-27 தேதிகளில் 'ஊரு நம்ம ஊரு' என்ற மையக்கருத்தில் கொண்டாடியது.
தமிழகத்தின் கிராமங்களிலும் நகரங்களிலும் 600க்கும் மேற்பட்ட திட்டங்களைச் செயல்படுத்தியுள்ள TNF, 32 மாவட்டங்களிலும், பாண்டிச்சேரியிலும் கல்வி, பெண்கள், கிராமப்புற முன்னேற்றம், சுகாதாரம் மற்றும் உடல்நலம் தொடர்பான திட்டங்களை நிதித் தடையின்றி ஆண்டுதோறும் செயல்படுத்த 'மண்வாசனை' என்ற புதிய திட்டத்தைத் துவக்கியுள்ளது. இதை அறிமுகப்படுத்திப் பேசிய தலைவர் முனைவர் சோமலெ சோமசுந்தரம், தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும், பாண்டிச்சேரிக்கும் தலா $250,000 வைப்பு நிதியை அடுத்த மூன்று வருடங்களில் திரட்டி, அதன் வட்டியிலிருந்து திட்டங்களைச் செயல்படுத்த உள்ளதாக விளக்கினார். தற்போது அரசுப் பள்ளிகளில் சிறப்பாக இயங்கிவரும் TNF-ABC திட்டத்தை நிதித் தட்டுப்பாடின்றி எப்படித் தொடர்வது என்ற கேள்வியும், தாம் பிறந்த மாவட்டங்களில் TNF திட்டங்கள் செயல்படுத்த வேண்டுமென்ற அமெரிக்கத் தமிழர்களின் ஆர்வமும் 'மண்வாசனை' என்ற தொலைநோக்குத் திட்டத்துக்கு வித்திட்டதுள்ளதாக பலத்த கரவொலிக்கிடையே அறிவித்தார்.
"TNF நியூ ஜெர்ஸி கிளை, நியூ ஜெர்ஸி தமிழ்ச் சங்கம், அமெரிக்கத் தொழில்முனைவோர் சங்கம், அமெரிக்க மருத்துவர் சங்கம் ஆகியோர் துணையுடன் நடத்திய இரண்டு நாள் மாநாட்டில் 1400க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, 'மண்வாசனை'க்கும், காரைக்குடி அருகேயுள்ள 'கனவகம்' என்ற ஆதரவற்ற சிறுமிகளுக்கான அமைப்பிற்கும் $150,000 நன்கொடையை வாரி வழங்கியுள்ளனர்" என்கிறார் மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் திரு. பாலாஜி பிரகாஷ் ராவ்.
நான்கு குடும்பங்களால் தொடங்கப்பெற்ற TNF தற்போது வருடத்திற்குக் கிட்டத்தட்ட 1 மில்லியன் டாலர் அளவில் தமிழகத்தில் பல திட்டங்களைச் செயல்படுத்தும் ஆலமரமாக வளர்வதற்கு முன்னோடியாக விளங்கிய நிறுவனர்களில் ஒருவரான, மிச்சிகனில் பல்லாண்டு வாழ்ந்த, காலஞ்சென்ற முனைவர் பி.ஆர். பெருமாள்சாமி அவர்களுக்கான 'வாழ்நாள் சாதனையாளர்' விருதைத் திருமதி வடிவு பெருமாள்சாமி பெற்றுக்கொண்டார். அவை எழுந்து நின்று இதைப் பாராட்டியது.
TNF மேனாள் தலைவர் திரு மோகனம் அவர்களின் துணைவியார் திருமதி பத்மா மோகனம் குத்து விளக்கேற்றி மாநாட்டைத் துவக்கி வைத்தார். கலைமாமணி நித்யஸ்ரீ மகாதேவன் அவர்களின் தமிழிசை விருந்து, திருமதி பாரதி பாஸ்கர், ராஜா ஆகியோரின் பட்டிமன்றம், ஸ்டேஜ் ஃப்ரெண்ட்ஸ் குழுவினரின் நகைச்சுவை நாடகம், திருமதி சுமித்ரா ராம்ஜியின் பெண்மையைப் போற்றும் 'சக்தி' நாட்டிய, நாடக நிகழ்ச்சி, திரு. மதுரை முரளிதரனின் 'கர்ணன்' நாட்டிய நாடகம், அமெரிக்கத் தமிழ் இளையோர் பங்குபெற்ற விவாதமேடை, சத்யபிரகாஷ் மற்றும் பூஜாவுடன் மெல்லிசை விருந்து, சித்த மருத்துவர் செல்வ சண்முகம் மற்றும் ஆயுர்வேத மருத்துவர் பிரியா பாலா ஆகியோரின் தனிப்பிரிவுக் கருத்தரங்குகள் எனப் பல்சுவை விருந்துக்குக் குறைவே இல்லை.
நியூ ஜெர்ஸியைச் சேர்ந்த அமைப்பாளர் திருமதி சுசித்ரா ஸ்ரீநிவாஸ். தமிழகத்தில் சேவை செய்வதற்கான வாய்ப்புகள், Teach For America போன்ற சேவை தொடர்பான தலைப்புகள் 'இளைஞர்கள் மாநாட்டில்' இரண்டு நாட்களும் விவாதிக்கப்பட்டதாக TNF ஓஹையோவைச் சேர்ந்த இளையோர் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த் பத்மநாபன் தெரிவித்தார்.
TNF ஹூஸ்டன் கிளை ஹார்வி புயலில் பாதிக்கப்பட்டோருக்கு செய்த சேவை, தமிழகத்தில் சிறுநீரக நோய் விழிப்புணர்வு முகாம், ABC கல்வித்திட்டத்தின் முன்னேற்றம், கோடை விடுமுறையில் அமெரிக்கத் தமிழ் இளையோர் தமிழகத்தில் செய்த, செய்யப் போகின்ற திட்டங்கள் எனப் பல திட்டங்களைப் பற்றிய செய்திகளைப் பகிர்ந்து கொண்டது. TNF சென்னை மையத்தின் சார்பாகப் பேசிய அறங்காவலர் திரு. அருள்முடி, அமெரிக்கத் தமிழர்களின் கடின உழைப்பினால் சேரும் நன்கொடையை இடைத்தரகர் இல்லாமல் நேராக நலிவுற்ற தமிழர்கள் பயன்பெறச் செய்வதே சென்னை மையத்தின் நோக்கம் என அறிவித்தார்.
அறக்கட்டளையின் அடுத்த ஆண்டு மாநாடு அட்லாண்டா மாநகரில் மே, 25-26, 2019ல் நடைபெற உள்ளது.
உங்கள் மாவட்டத்திற்கான வைப்பு நிதிக்கு நன்கொடை வழங்க: tnfusa.org/donate திட்டங்கள்பற்றி அறிய: tnfusa.org மின்னஞ்சல்: president@tnfusa.org தொலைபேசி: 781.486.3872
டாக்டர் வரலட்சுமி நிரஞ்சன் |