சாகித்ய அகாதெமி 35க்கு வயதுக்குட்பட்ட இளம் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வகையில் யுவபுரஸ்கார் விருதும், குழந்தை இலக்கிய எழுத்தாளர்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில் பாலசாகித்ய புரஸ்கார் விருதும் வழங்குகின்றது. 2018ம் ஆண்டுக்கான இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன் இவ்வாண்டுக்கான யுவபுரஸ்கார் விருது பெறுகிறார். அவர் எழுதிய 'அம்புப் படுக்கை' என்னும் சிறுகதைத் தொகுப்புக்காக இவ்விருது வழங்கப்படுகிறது. எழுத்தாளர் நாஞ்சில் நாடன், இராமகுருநாதன், கவிஞர் ரவிசுப்ரமணியன் அடங்கிய குழு இந்நூலைத் தேர்ந்தெடுத்துள்ளது. 'யாவரும் பதிப்பகம்' இந்த நூலை வெளியிட்டுள்ளது. 'காந்தி இன்று' என்ற வலையகத்தை நடத்திவரும் சுனில் கிருஷ்ணன், ஓர் ஆயுர்வேத மருத்துவர். எழுத்தாளர், விமர்சகர். காந்தியக் கொள்கைகளில் மிகுந்த ஈடுபாடுள்ளவர். காரைக்குடியில் வசிக்கிறார். இவ்விருது செப்புப் பட்டயமும் ரூ.50000 பரிசுத்தொகையும் அடங்கியது.
பாலசாகித்ய புரஸ்கார் பாலசாகித்ய புரஸ்கார் எழுத்தாளர், முனைவர் கிருங்கை சேதுபதி அவர்களுக்கு அவர் எழுதிய 'சிறகு முளைத்த யானை' என்னும் கவிதை நூலுக்காக வழங்கப்படுகிறது. கவிஞர் மகுடேசுவரன், மகாலிங்கம், பேரா. ஆர். கோதண்டராமன் ஆகியோர் இந்த நூலைத் தேர்ந்தெடுத்துள்ளனர். பழனியப்பா பிரசுரம் இந்நூலை வெளியிட்டுள்ளது. கிருங்கை சேதுபதி சிவகங்கை மாவட்டம் கிருங்காக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர். கவிஞர். எழுத்தாளர். ஆய்வாளர். புதுச்சேரி பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரியில் தமிழ்த் துணைப்பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். விருது செப்புப் பட்டயமும் ரூ.50000 பரிசுத்தொகையும் அடங்கியது. குழந்தைகள் தினமான நவம்பர் 14 அன்று இவ்விருது வழங்கப்பட இருக்கிறது.
|