ஒரு காலத்தில் காஞ்சிபுரத்தில் ஸ்ரீவத்சாங்கர் என்றொரு கிராமநிர்வாகி இருந்தார். அந்தக் கிராமத்தினர் அவரைக் கூரேசர் என்றழைத்தனர். கூரேசர் ராமானுஜாசார்யர் மீது பெருமதிப்பு வைத்திருந்தார். ஸ்ரீ ராமானுஜரின் சீடராகி அவருக்குச் சேவை செய்வதே கூரேசரின் வாழ்நாள் விருப்பமாக இருந்தது. திடீரென்று ஒருநாள் தனது பதவி, செல்வம், நிலபுலன்களை எல்லாம் துறந்து, ஸ்ரீ ராமனுஜர் வசித்த ஸ்ரீரங்கத்துக்குப் புறப்பட்டார் கூரேசர். அவருடைய துணைவியாரான ஆண்டாளும் அவரோடு கிளம்பினாள்.
அடர்ந்த காட்டின் வழியே அவர்கள் போக நேர்ந்தது. "இதிலே கள்ளர்கள் இருப்பார்களோ?" என்று மனைவி அவரிடம் பயத்தோடு கேட்டாள். "நம்மிடம் திருடுவதற்கு ஒன்றுமில்லாதபோது நாம் ஏன் அஞ்சவேண்டும்?" என்று கேட்டார் கூரேசர். நடுங்கும் குரலில் அவள், "நீங்கள் வழக்கமாகத் தண்ணீர் பருகும் பொன்னாலான வட்டிலை மட்டும் எடுத்து வந்திருக்கிறேன்" என்றாள் அவள். "அதைக் கொடு, நான் தூர எறிகிறேன்" எனக் கூறி, அதை வாங்கி வீசியெறிந்தார் கூரேசர்.
மூன்று நாட்களுக்குப் பிறகு இருவரும் ஸ்ரீரங்கத்தை அடைந்தனர். ஸ்ரீரங்கம் கோவிலை அடுத்திருந்த சத்திரம் ஒன்றை அடைந்தனர். பயணம் மிகக் கடினமானதாக இருந்தது. அவர்கள் உணவுகூட எதுவும் கொண்டு வரவில்லை. மனைவியாரின் மடியில் தலைவைத்துக் கூரேசர் படுத்திருந்தார். மனைவி ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தாள். ரங்கநாதருக்கு நைவேத்யம் படைப்பதற்கான காலம் வந்ததை அறிவிக்கக் கோவில்மணி அடித்தது. "இங்கே உன் தாசர் பட்டினி கிடக்கிறார், அங்கே நீர் உயர்ந்த உணவை உண்ணத் தயாராகிறீர்! இப்படிச் செய்வது உமக்கே சரியாக இருக்கிறதா?" என்று மனதுக்குள்ளே அவள் பிரார்த்தித்தாள்.
சற்று நேரத்தில் கோவிலிலிருந்து ஊர்வலமாக ஒரு கூட்டம் சத்திரத்துக்கு வந்தது. மேளதாளத்துடன் பட்டர்களும் பண்டிதர்களும் அணிவகுத்து வந்தனர். அவர்கள் நிவேதனத்தை அவள்முன் வைத்து, சத்திரத்திலிருக்கும் என் பிரியத்துக்குரிய பக்தனுக்குக் கொடு என்று ஸ்ரீரங்கநாதரே எமக்கு ஆணையிட்டார் என்று கூறினர்.
கூரேசர் எழுந்து உட்கார்ந்து சுற்றுமுற்றும் பார்த்தார். இதுவொரு கனவோ என்று ஆச்சரியப்பட்டார். வகைவகையான சுவையான உணவுகள் தன்முன்னே வைக்கப்பட்டிருப்பதைக் கண்டார். தலைமைப் பட்டரைப் பார்த்து அவர் பணிவோடும் உறுதியோடும், "சுவாமி, நான் உணவைக் கேட்கவோ அதற்காகப் பிரார்த்திக்கவோ இல்லை. நான் எதைக் கேட்டுப் பிரார்த்திக்கிறேனோ அதைத்தானே பெருமாள் எனக்குத் தரலாம்! ஆத்மாவாகிய நான் பரமாத்மாவிடம் அன்னம் வேண்டும் என்று எப்படிக் கேட்பேன்! இவற்றைத் தயவுகூர்ந்து எடுத்துச் செல்லுங்கள்" என்றார்.
சிறிதளவேனும் பிரசாதத்தை எடுத்துக்கொள்ள வேண்டுமென தலைமைப் பட்டரும் பண்டிதர்களும் வேண்டிக்கொண்டனர். தானும் சிறிது எடுத்துக்கொண்டு மனைவிக்கும் சிறிது கொடுத்தார் கூரேசர். சற்றுநேரம் சென்றபின் தன் மனைவியிடம், "நீ உணவு வேண்டுமெனப் பிரார்த்தனை செய்தாயா, சொல்" என்று கேட்டார். அவள் கண்ணீர் மல்க, "பிரபோ, நான் உணவு கேட்டுப் பிரார்த்திக்கவில்லை. 'ஓ ரங்கநாதரே! உமது பக்தன் பட்டினி கிடக்கையில் நீர் எப்படிச் சாப்பிடலாம்' என்ற எனது உணர்வைக் கூறியது உண்மைதான்" என்றாள்.
கூரேசர் அவளுக்கு மென்மையாக அறிவு புகட்டினார். "அன்பானவளே, நான் சொல்லப்போவதை நன்றாகப் புரிந்துகொள். கேட்டபின்னர் கொடுப்பவர் பிரபு. கேட்காமலே நமது தேவையறிந்து கொடுப்பவர் விபு. பிரபு என்றால் எஜமான். விபு என்பவர் பிரபஞ்சத்துக்கே சக்ரவர்த்தி. விபுவிடம் ஒரு பக்தன் எதையுமே கேட்கக்கூடாது" என்று விளக்கிக் கூறினார்.
ஓ மனமே, கேளாதே!
அதிகம் கேட்டால் அதிக ஆழத்தில் அது புதைகிறது,
விடை மேலேவரத் தாமதம் ஆகிறது.
சபரியின் தாபத்தைக் கேட்காமலே அவன் தீர்த்துவைக்கவில்லையா?
தனக்காக உயிர்நீத்த ஜடாயுவை அவன் ஆசீர்வதிக்கவில்லையா?
ஓ மனமே கேளாமலிரு!
பரிபூரண சரணாகதி என்ற பாடத்தைக் கூரேசர் நமக்குக் கற்பித்தார். அவனிடம் நம்பிக்கை வையுங்கள். நமக்கு நிரந்தர நன்மை எதுவோ அதை அவன் கொடுக்கட்டும்.
நன்றி: சனாதன சாரதி, ஏப்ரல் 2017
பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபா