பாபநாசம் தமிழ்நாட்டில் தஞ்சையிலிருந்து வடகிழக்கில் சுமார் 20 கி.மீ. தூரத்திலும், கும்பகோணத்திலிருந்து 15 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது. குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் பாபநாசம் ஸ்ரீ ராமலிங்கசுவாமி ஆலயம் அமைந்துள்ளது.
இத்திருக்கோவில் இறைவன் ஸ்ரீ ராமபிரானால் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதால் அவர் ஸ்ரீ ராமலிங்கேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். அம்பாள்: பர்வதவர்த்தினி. தீர்த்தம்: சூரிய தீர்த்தம். 108 சிவலிங்கங்கள் ஒரே இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் சிறப்பைக் கொண்டது இத்தலம். தல விருட்சம்: வில்வ மரம்.
பாபநாசம் என்றும் பாபவிநாசம் என்றும் அழைக்கப்படும் இத்தலம், ஸ்ரீ ராமபிரானால் தனது தோஷம் நீங்குவதற்காக பிரதிஷ்டை செய்யப்பட்டது. அம்பாள் பர்வதவர்த்தினி மிகுந்த வரப்ரசாதியாய் இங்கே எழுந்தருளியுள்ளாள். தென்னாட்டிலேயே மிக அதிக உயரம் கொண்டதான ஆறடி உயரச் சூரியன் சிலையும் இவ்வாலயத்தின் சிறப்பம்சம் எனலாம். கோயிலுக்கு வெளியே ஹனுமான் காசியிலிருந்து கொண்டுவந்த ஹனுமந்த லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தல விருட்சமான வில்வமரம், சுவாமி சன்னதியின் உட்பிரகாரத்தில் முருகன் சன்னதியின் வடபுறம் அமைந்துள்ளது.
இலங்கையில் ராவணனைச் சம்ஹாரம் செய்த தோஷம் நீங்க இராமேஸ்வரத்தில் மூழ்கி, இறைவனை வழிபட்டுத் தொடர்ந்து பயணப்பட்ட போது, வழியில் குடமுருட்டி ஆற்றின் அருகே ஏதோ தோஷம் தொடர்வதை உணர்ந்த சீதை, இராமனிடம் முறையிட்டாராம். சூர்ப்பனகையின் பாதுகாவல் அரக்கர்கள் கரன், தூஷணன் இருவரையும் சம்ஹாரம் செய்த தோஷம் இன்னும் நீங்காமல் பின்தொடர்வதை ராமர் தெரிவித்தார்.
அந்தச் சமயம் பரந்து, உயர்ந்து நிற்கும் வில்வமரத்தின் அடியில் அவர்கள் யாவரும் நிற்பதைக்கண்டு தோஷம் நீங்க சிவபூஜை செய்வதே சரி என்றார் ராமர். பின்னர் ஹனுமானிடம் சீதாப்பிராட்டி காசிக்குச் சென்று லிங்கம் கொண்டுவரச் சொன்னார். அவரும் அவ்வாறே சென்றார். ஆனால் அவர் வரத் தாமதமானதால் சீதை குடமுருட்டி ஆற்றில் நீராடி, ஈர மணலை எடுத்துத் தன் கரங்களாலேயே நூற்றுக்கு மேற்பட்ட சிவலிங்கங்களை ஸ்தாபித்து பூஜை செய்யத் துவங்கினார்.
அப்போது காசியிலிருந்து அங்கே வந்துசேர்ந்த ஹனுமான் இந்நிகழ்வைப் பார்த்துச் சினம் கொண்டார். தான் கொணர்ந்த சிவலிங்கத்தை வெளிப்பிரகாரத்தில் வைத்துவிட்டு, கோபத்துடன் மூலவரைத் தனது வாலால் கட்டி இழுக்க முற்பட்டார். வால் அறுந்து வடக்கே சென்று விழுந்தார். அவ்வாறு அவர் வீழ்ந்த இடம் இன்று 'அனுமான் நல்லூர்' என்று அழைக்கப்படுகிறது. தனது செயலுக்குத் தண்டனை அடைந்த ஹனுமான், தன் தவறை உணர்ந்து ஸ்ரீ ராமரின் பாதம் பணிந்தார்.
ஹனுமானின் கோபத்தில் நியாயம் இருப்பதை உணர்ந்த ஸ்ரீ ராமபிரான் அவருக்கு அருள்புரிந்தார். "இங்கே பிரதிஷ்டை செய்ப்பட்ட 107 சிவலிங்கங்களை வழிபட்ட பின்னர் 108வது சிவலிங்கமான ஹனுமந்த லிங்கத்தை வழிபட்டு, பின் அம்பாளை வழிபட்டால்தான் முழுப்பலன் கிட்டும். தங்கள் தோஷம் நீங்கப்பெறுவர்" என்று வரமளித்தார். மனிதப் பிறவியில் ராமபிரானின் தோஷம் அகலக் காரணமான இத்தலம் பாபவிநாசம் என்று அழைக்கப்பட்டு, காலப்போக்கில் பாபநாசம் என்று மருவியது.
சூரியன் மற்றும் சனி இருவரது பாபங்களும் இத்தலத்தில் நீங்கியதாக ஆலய வரலாறு சொல்கிறது. அம்பாளுக்கு ஆடிப் பூரம், நவராத்திரி, நடராஜருக்கு ஆனித் திருமஞ்சனம் போன்றவை சிறப்பாக இங்கே நடைபெறுகின்றன. திருவாதிரையில் நடராஜப் பெருமான் சிவகாமி அம்பாளுடன் சூரிய தீர்த்தத்திற்கு வந்து தீர்த்தம் அருளுகிறார். பொங்கலன்று சிவபெருமான் தீர்த்தவாரி நடக்கிறது. ஒரே ஆலயத்தில் 108 சிவலிங்கங்கள் இருப்பதால் பிரதோஷ வழிபாடு மிகச்சிறப்பாக நடக்கிறது. கூடவே குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, அன்னாபிஷேகம், சிவராத்திரி, கார்த்திகை தீபம் யாவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன.
சீதா துரைராஜ், சான் ஹோசே, கலிஃபோர்னியா |