ஸ்ரீலஸ்ரீ பன்றிமலை சுவாமிகள்
மகான்களின் அவதாரங்கள் நிகழ்வது மானுடரை மாயைத் தளையினின்று விடுவிக்கவும், ஆன்ம வளர்ச்சிக்கு உதவவும்தான். இவர்களுள் சாதாரண மனிதர்கள் போலவே தோன்றி, பக்குவம் வந்ததும், ஆன்ம ஒளி பெற்று உயர்ந்து மக்களுக்கு நல்வாழ்வு காட்டியவர் பலர். அம்மகான்களுள் ஸ்ரீலஸ்ரீ பன்றிமலை சுவாமிகளும் ஒருவர்.

சன்யாசியின் ஆசி
திண்டுக்கல்லை அடுத்த பன்றிமலையில் வாழ்ந்து வந்தனர் ஆறுமுகம் பிள்ளை-அங்கம்மாள் தம்பதியினர். ஆறுமுகம் பிள்ளை பழனி தண்டாயுதபாணிப் பெருமான்மீது மிகுந்த பக்தி கொண்டவர். சித்த மருத்துவம் அறிந்த அவர் விவாசயம் தவிர மருத்துவத் தொழிலையும் செய்துவந்தார். தியானத்தின் மூலம் சில அதீத சக்திகளும் அவருக்குக் கிடைத்திருந்தன. மனைவியான அங்கம்மாளும் கணவரைப் போன்றே அன்பும், கருணையும் முருக பக்தியும் கொண்டவராக விளங்கினார். இருவரும் அடிக்கடி புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவார்கள். அதிலும் அறுபடை வீடுகளுக்குச் செல்வது என்றால் அவர்களுக்கு மிகவும் விருப்பம். இந்நிலையில் அங்கம்மாள் கருவுற்றார். அவரது பெற்றோர் பிரசவத்துக்கு அவரைத் தங்கள் சொந்த ஊரான பாலசமுத்திரத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அங்கம்மாள் அங்கிருந்த காலத்தில் ஒருநாள் காசிலிங்க சுவாமிகள் என்ற சன்யாசி அவர்கள் வீட்டுக்கு வருகை தந்தார். அவர் அங்கம்மாளின் தந்தையின் நண்பரும்கூட. தெய்வசக்தி மிகுந்த அவர் அங்கம்மாளைக் கண்டதும் ஆசிர்வதித்து, "பெண்ணே, உனக்கு ஒரு தெய்வக்குழந்தை பிறக்கப் போகிறது. இறைவனின் பரிபூரண ஆசியோடு பிறக்கும் அக்குழந்தை ஓர் அவதார புருடனாக இருப்பான். அவனால் பலருக்கும் பல நன்மைகள் விளையப் போகிறது. சித்திரை மாதத்துப் பரணி நட்சத்திரத்தில் அவன் அவதாரம் நிகழும்" என்றார்.

தெய்வக்குழந்தை
சந்யாசி சொன்னபடியே 1906ம் ஆண்டில், சித்திரை மாதம் பரணி நட்சத்திரத்தில் தெய்வீகசக்தியின் அவதாரம் நிகழ்ந்தது. குழந்தைக்கு 'ராமசாமி' என்று பெயர் சூட்டினர் பெற்றோர். நீலநிறக் கண்களும் மிகநீண்ட தலைமுடியும் கொண்டிருந்த அக்குழந்தை, தனது பார்வையால் அனைவரையும் கவர்ந்தது. குழந்தை வளர, வளர அது ஓர் தெய்வக்குழந்தை என்பது தெளிவாயிற்று. குழந்தையின் பாதங்களில் சங்கு, சக்கரம், முருகனுக்குரிய வேல் போன்ற ரேகைகள் காணப்பட்டன. கையிலும் சங்கு, சக்கரம் சூலம் போன்றவை இருந்தன. உடலிலும் சங்கு, சக்கரம் போன்ற சில சின்னங்கள் இருந்தன. அவற்றைக் கண்ட பெரியோர்கள் இவை தெய்வ அருள் பெற்றவர்களுக்கும், அவதாரங்களுக்கும்தான் இருக்கும் என்றும் கூறினர்.

குழந்தை பள்ளிசெல்லும் பருவம் வந்தது. ராமசாமி பள்ளியில் சேர்க்கப்பட்டான். அறிவுக் கூர்மை கொண்டவனாக விளங்கினான். அதனால் அவனை ஆசிரியர், சக மாணவர் என எல்லோரும் விரும்பினர்.

பால லீலைகள்
தந்தையைப் போலவே பாம்புக்கடி, தேள்கடி போன்றவற்றின் விஷங்களை நீக்கும் ஆற்றலும், பல நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றலும் சிறுவயதிலேயே அவனுக்கு அமைந்திருந்தது. விதவிதமான மலர்களின் நறுமணத்தைத் தன் கையில் வரவழைக்கும் ஆற்றலையும் அவன் பெற்றிருந்தான். அந்த ஆற்றல் அவனுக்கு எப்படி வந்தது என்பது யாருக்கும் தெரியவில்லை. ஏன், அவனுக்கேகூடத் தெரியவில்லை. குடும்பத்தினர் பார்த்துக்கொண்டிருக்கும் போதே திடீரென்று காணாமல் போய்விடுவான். பின்னர் வெகுநேரம் கழித்துத் திரும்ப வருவான். சிலசமயம் அவனது நெற்றியில் திருநீறு இருக்கும். சிலசமயம் நாமம் இருக்கும். சில சமயம் அழகான சந்தனப்பொட்டு வைத்திருப்பான். மற்றொரு சமயம் பெரிய குங்குமப்பொட்டு இருக்கும். இவற்றை அவன் நெற்றியில் வைப்பது யார், அடிக்கடி எங்கே காணாமல் போகிறான் என்பவற்றை யாராலும் கண்டறிய இயலவில்லை.

Click Here Enlargeமெய்தீண்டல் தீட்சை
ஒருமுறை பாலசமுத்திரத்தில் இருந்த விநாயகர் கோவில் குளக்கரையில் ராமசாமி விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கே சாமியார் ஒருவர் வந்தார். வெகுநேரம் ராமசாமியையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த அவர், அவனைத் தன்னருகே அழைத்தார். வாயைத் திறக்கச் சொன்னார். தன் கைப்பையிலிருந்த விபூதியைச் சிறிது எடுத்து அவன் நாவில் பூசியவர், தன் கையிலிருந்த சிறிய வேலால் அவன் நாவில் சில மந்திரங்களை எழுதினார். பின் ராமுவின் உடல் முழுவதும் திருநீற்றை அள்ளி அள்ளிப் பூசினார். அவன் தலைமீது கையை வைத்து ஆசிர்வதித்தார்.

ராமசாமியின் உடலில் ஏதோ மின்சாரம் பாய்வதுபோல் இருந்தது. மெய்மறந்து சாமியாரையே வெகுநேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். சிறிது நேரம் சென்று அவன் தன்னுணர்வு பெற்றபோது சாமியாரைக் காணவில்லை. அதுமுதல் ராமசாமிக்குப் பல்வேறு சித்துக்கள் வசப்பட்டன. அவன் கைப்பட்ட மணற்துகள்கள் கற்கண்டாயின. பொடிக் கற்களைக் கையில் வைத்து மூடித் திறந்தால் அவை மிட்டாய்களாயின. நோயுற்ற குழந்தைகள் அவன் பார்வை பட்டால், அவன் கையால் திருநீற்றை அள்ளிப் பூசினால் குணமாகின. அவன் சொல்லும் வாக்குப் பலித்தது.

தந்தை முருகபக்தர் என்பதால் ராமசாமிக்கும் முருகன்மீது அளவற்ற பக்தி இருந்தது. நேரம் கிடைக்கும்போது அவன் தந்தையுடன் பழனிக்குச் செல்வான். முருகனையே கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருப்பான். ஆலயத்தின் ஓரத்தில் அமர்ந்து கண்மூடித் தியானம் செய்வான். இரும்பைக் காந்தம் இழுப்பதுபோல முருகனின் அருள் ராமசாமியை ஈர்த்தது.

சல்லிச் சாமியார்
பழனிக்குச் செல்லமுடியாத நாட்களில் உள்ளூர் விநாயகர் ஆலயத்திற்குச் சென்று வழிபடுவான் ராமசாமி. ஆலயத்தில் அமர்ந்து கண்மூடி முருக மந்திரம் ஜெபிப்பதை அவன் வழக்கமாக வைத்திருந்தான். அந்த விநாயகர் ஆலயத்தில் 'சல்லிச் சாமியார்' என்ற சித்தர் ஒருவர் வசித்துவந்தார். அவர் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாது ஒரு பரதேசிபோல் தோற்றமளிப்பார். விடியற்காலையில் எழுந்துகொள்ளும் அவர், நடந்தே பழனி மலைக்குச் செல்வார். அங்கு யாத்ரீகர்களிடம் யாசித்துக் கிடைக்கும் நாணயங்களை மாலை பாலசமுத்திரத்துக்கு வந்து, விநாயகர் கோயில் வாசலில் விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்களுக்குக் கொடுப்பார். அந்தச் சிறுவர்களுக்குக் கொடுப்பதற்காகவே அவர் தினமும் யாசித்து வந்தார். 'சல்லிக் காசு' எனப்படும் அக்கால நாணயத்தை அவர் யாசித்ததால் 'சல்லிச் சாமியார்' என்றும் 'சல்லிச் சித்தர்' என்றும் அவர் அழைக்கப்பட்டார். தினந்தோறும் அங்கு வந்து வழிபடும் சிறுவன் ராமசாமி அவரை ஈர்த்தான். என்றாலும் சக சிறுவர்களோடு விளையாடிக் கொண்டிருக்கும் அவனுக்கு மட்டும் ஒருநாள்கூட அவர் காசு கொடுத்ததில்லை.

சாமியாரின் செயலை அனுதினமும் கவனித்து வந்த ஆலயக் குருக்கள், அதற்கான காரணத்தை சாமியாரிடம் கேட்டார். அதற்குச் சாமியார், "நான் சின்னச்சாமி. ராமசாமியோ பெரியசாமி. அவனுக்குப் போய் எப்படி நான் இதைத் தருவது? அதனால்தான் கொடுக்கவில்லை" என்றார். ராமசாமி ஓர் அவதார புருஷன் என்பதைப் பொதுவில் முதலில் உணர்ந்து கொண்டவர் சல்லிச் சாமியார்தான். ராமசாமியின் ஆன்ம வளர்ச்சியை அவர் கவனித்துக் கொண்டிருந்தார்.

மந்திர தீட்சை
ஒருமுறை தனது நண்பர்களுடன் பழனி மலையில் ஏறிக் கொண்டிருந்தான் ராமசாமி. "முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா" என்ற குரல் எங்கும் ஒலித்துக் கொண்டிருந்தது. அதையும் மீறி வித்தியாசமாக ஒரு குரல் ஒலித்தது, "கருங்கல் வீட்டுக்காரா, பழனியப்பா" என்ற அந்தக் குரல் காந்தம்போல ராமசாமியைக் கவர்ந்தது. உடனே அந்தக் குரலைத் தேடினான்.

அடிவாரத்தில் இருந்த விநாயகர் ஆலயத்திலிருந்து அந்தக் குரல் வருவதை உணர்ந்தவன், அங்குச் சென்றான். அங்கு சாது ஒருவர் கண்களை மூடி "கருங்கல் வீட்டுக்காரா, பழனியப்பா" என்ற வார்த்தைகளை மந்திரம்போல் உச்சரித்துக் கொண்டிருந்தார். உள்ளுணர்வு உந்த அவரைத் தொட்டு வணங்கினான் ராமசாமி. உடன் கண்விழித்த அவர், "அடடே... பலே பலே" என்று சொல்லி அன்போடு அவனை அணைத்து, ஆசிர்வதித்து விநாயகர் ஆலயத்திற்கு எதிரே இருந்த மயில் மண்டபத்துக்கு அழைத்துச் சென்றார். அவனைத் தனது அருகில் அமர்த்திக் கொண்டவர், அவனது காதில் ரகசியமாகச் சில மந்திரங்களை ஓதினார். பின் அவனிடம் ஒரு பானையைக் கொடுத்து, "இந்தப் பானையை பூஜையில் வைத்து நான் சொல்லிக் கொடுத்த மந்திரங்களை 108 நாட்கள் விடாமல் தினமும் சொல்லிவா" என்று கூறி ஆசிர்வதித்தார்.

சட்டிச் சாமியார் என்று அழைக்கப்பட்ட அந்தச் சாமியாரின் போதனையே ராமசாமிக்குக் குரு உபதேசமானது. அவர் கூறியபடி தினந்தோறும் பூஜை செய்தான். அவனது வாழ்க்கையில் வெகுதீவிர ஆன்மீக மாற்றங்கள் நிகழ ஆரம்பித்தன. விளையாட்டுத்தனம் குறைந்தது. முருகனுக்கு நீண்டநேரம் பூஜை செய்வதிலும், தனித்தமர்ந்து தியானம் செய்வதிலும் ஆர்வம் அதிகரித்தது. தொடர்ந்த பூஜையின் முடிவில் அன்னை பராசக்தி மற்றும் முருகப்பெருமானின் அருட்காட்சியும் அவருக்குக் கிடைத்தது. அதுமுதல் ராமசாமி, முருகப்பெருமானின் தீவிர அடியாராக மாறிப் போனார்.

ஆச்சாண்டார் மலைப் பரதேசி
இந்நிலையில் ஆச்சாண்டார் மலைப் பரதேசி என்பவர் ராமசாமியைச் சந்தித்து அவருக்கு தீட்சை அளித்தார். தன்னுடைய சீடராகவும் ஆக்கிக்கொண்டார். அவரிடம் குருகுலமாக அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார் ராமசாமி. குருவும் சீடரும் இந்தியா முழுதும் புனிதப் பயணம் மேற்கொண்டனர். பல ஆண்டுப் பயணத்திற்குப் பின் சீடரை அழைத்துக்கொண்டு பாலசமுத்திரம் கிராமத்திற்கு வந்த குரு, விநாயகர் ஆலயத்தில் அவரை விட்டுவிட்டு உடனே அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார்.

ஆன்மீகத் தேடல் கொண்ட இளைஞனாகச் சென்ற சுவாமிகள், பல்வகை ஆற்றல்களும், இறையனுபூதியும் பெற்ற தெய்வீக இளைஞனாகத் திரும்பி வந்திருந்தார். மக்கள் அவரை ஆவலுடன் வந்து தரிசித்து அருள்பெற்றுச் செல்ல ஆரம்பித்தனர்.

திருமணம்
சாந்தமான தோற்றமும், இனிய குரலும், அன்பும் கருணையும் பொழியும் விழிகளுமாகச் சுவாமிகளின் தோற்றம் அனைவரையும் ஈர்த்தது. சிலகாலம் பாலசமுத்திரத்தில் வசித்த சுவாமிகள், பின்னர் பெற்றோருடன் பன்றிமலைக்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கு சிலகாலம் வசித்தார். தம்மாலான உதவிகளை கிராம மக்களுக்குச் செய்து வந்தார். இந்நிலையில் சுவாமிகளுக்குத் திருமணம் செய்ய பெற்றோர்கள் முடிவு செய்தனர். பாப்பாத்தி அம்மாள் என்ற புனிதவதியுடன் சுவாமிகளுக்குத் திருமணம் நடந்தது. திருமணம் என்பது வெறும் உறவிற்காக ஏற்படுவது அல்ல. அது ஆத்மாக்களின் சங்கமம் என்பது சுவாமிகளின் கருத்து. அதற்கேற்ப பாப்பாத்தி அம்மாளும் நடந்து வந்தார். அவர்களுக்கிடையே இருந்த கணவன் - மனைவி பந்தம் நாளடைவில் குரு-சிஷ்ய உறவானது. சுவாமிகளின் தலையாய சீடராகப் பாப்பாத்தி அம்மாள் விளங்கினார்.

Click Here Enlargeபன்றிமலை சுவாமிகள்
ராமசாமி பன்றிமலை ஊர்க்காரர் என்பதால் பக்தர்கள் அவரை அன்போடு 'பன்றிமலை சுவாமிகள்' என்று அழைக்க ஆரம்பித்தனர். சுவாமிகள் கன்னிவாடி ஜமீனில் கணக்குப் பிள்ளையாகச் சிலகாலம் பணியாற்றினார். பின்னர் ரெவின்யூ இன்ஸ்பெக்டராகப் பணி செய்தார். பின் பன்றிமலை பஞ்சாயத்தின் முதல் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்பொறுப்புக்களின் மூலம் மக்களுக்குப் பல்வேறு நன்மைகளைச் செய்தார். தனது ஆன்மிக, சமயப் பணிகளையும் தொடர்ந்து செய்தார். அவர் கண் பட்டால் நோய் நீங்கியது. உடல் குணமானது. நாட்பட்ட சிக்கல்கள் தீர்ந்தன. அதனால் மக்கள் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் அவரைத் தேடிவந்து தரிசித்தனர். காண வரும் மக்கள் கூட்டம் அதிகரித்ததால் அவர்கள் வசதிக்காக சுவாமிகள் தனது இருப்பிடத்தை திண்டுக்கல்லுக்கு மாற்றிக்கொண்டார்.

'மக்கள் சேவையே கடவுள் சேவை' என்று அறிவித்த சுவாமிகள், மக்களுக்குச் சேவை செய்வதன் மூலம் மனநிம்மதி பெறலாம் என்றும், மகிழ்ச்சியோடு வாழலாம் என்றும் தம்மை நாடி வந்தவர்களுக்கு அறிவுறுத்தினார்.

திடீரென ஒருநாள் பன்றிமலை சுவாமிகளின் துணைவியார் இறைவனடி சேர்ந்தார். குல வழக்கப்படி அவரது உடல் எரியூட்டப்பட்டது. அவர் தெய்வீக அருள் பெற்றவர் என்பதற்குச் சாட்சியாக, புண்ணிய நதிகளில் கரைப்பதற்காக வைத்திருந்த அவரது புனிதச் சாம்பல் மஞ்சளாகவும், குங்குமமாகவும் மாறியிருந்தது.

தெய்வீகப் பணிகள்
சில காலம் திண்டுக்கல்லில் வசித்த சுவாமிகள், பின்னர் தனது பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க சென்னை, நுங்கம்பாக்கத்தில் சென்று வசிக்கலானார். அங்கும் தனது சித்தாற்றல்களால் பலரின் துயர் போக்கினார். பூட்டான் மன்னர் மற்றும் மதகுரு லாமாக்களின் வேண்டுகோளுக்கிணங்க நேபாளம் சென்ற சுவாமிகள், அம்மக்களது அன்பைப் பெற்றார். பல சாதுக்கள் சுவாமிகளைத் தேடிவந்து தரிசித்துச் சென்றனர். மக்கள் பலர் சித்து வேலைகளைக் கண்டு அவர் பாதங்களில் வீழ்ந்து வணங்கினர். ஆனால் மக்கள் தன்னைக் கொண்டாடுவதை சுவாமிகள் விரும்பவில்லை. "நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான். நான் முருகனின் பக்தன். முருகனின் சேவகன். நான் கடவுள் அல்ல. மக்கள் நலனுக்காக இறைவனிடம் மன்றாடும் ஒரு சாதாரண மக்கள் சேவகன்தான் நான்" என்றே அடிக்கடி சொல்வார்.

தமிழ்நாட்டில் பழனிக்கு அருகே உள்ள தாண்டிக்குடி ஆலயத்தில் முருகனை எழுந்தருளச் செய்த சிறப்புடையவர் ஸ்ரீலஸ்ரீ பன்றிமலை சுவாமிகள். சுவாமிகள் மொரீஷியஸ் தீவிற்கும் தென் ஆப்ரிக்காவிற்கும், மலேசியாவிற்கும் இந்து ஆலயத்தை நிர்மாணிப்பதற்கும், நடராஜர் சிலை பிரதிஷ்டைக்காகவும், மாரியம்மன் கோவில் அமைப்பதற்காகவும் சென்று வந்திருக்கிறார். சுவாமிகளின் ஆலோசனைப்படியே, அவர் அனுப்பி வைத்த யந்திரங்களைக் கொண்டே நியூ யார்க்கின் முதல் இந்து ஆலயமான வல்லப மகாகணபதி ஆலயம் நிர்மாணிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கும்பாபிஷேகத்தை ஸ்ரீ பன்றிமலை சுவாமிகளே சென்று நடத்தி வைத்தார். அது போல பிட்ஸ்பர்க் வெங்கடேஸ்வரர் கோயிலும் இவரது அருளாசியாலேயே அமைந்தது. ஹூஸ்டன் பாலாஜி ஆலயத்திற்கும், ஃப்ளோரிடாவில் உள்ள சக்தி ஆலயத்திற்கும் அடிக்கல் நாட்டியவர் ஸ்ரீ பன்றிமலை சுவாமிகள்தான். லண்டன் மாநகரின் புகழ்பெற்ற முருகன் ஆலயத்திற்கும் சுவாமிகள் தன் திருக்கரங்களால் கும்பாபிஷேகம் செய்திருக்கிறார்.

மகா சமாதி
"அன்பே சிவம்; அதுவே நிஜம்" என்று போதித்து மக்கள் சேவை செய்து வந்த ஸ்ரீலஸ்ரீ பன்றிமலை சுவாமிகள், தான் சமாதியாகும் தேதியை முன்னறிவித்தார். அதன்படி, 1986ம் ஆண்டு கார்த்திகை மாதம் வளர்பிறை ஏகாதசி திதியன்று (11 டிசம்பர் 1986) மகாசமாதி அடைந்தார். சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள அவர் வாழ்விடத்தில் அவரது குருபூஜை விழா ஆண்டுதோறும் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பக்தியின் சக்தியைப் பல்லாயிரக் கணக்கானோருக்கு உணர்த்திய சுவாமிகள் என்றும் நினைந்து கொண்டாடத் தக்கவர் என்பதில் ஐயமில்லை.

பா.சு.ரமணன்

© TamilOnline.com