அந்தச் சிறுவனுக்கு வயது 12. சாதாரண மத்தியதரக் குடும்பம். அக்கா வைஷாலிக்கு சதுரங்கத்தில் அளவுகடந்த ஆர்வம். செஸ் க்ளப்பில் பயின்று வந்தாள். அக்கா விளையாடுவதைப் பார்த்து நான்கு வயதுத் தம்பிக்கும் ஆர்வம் வந்துவிட்டது. வெளியில் பிற சிறுவர்களுடன் விளையாடப் போகாமல் செஸ் பலகையே கதி என்று இருந்தான். அப்படி ஆரம்பித்தது, இன்றைக்கு உலகின் இரண்டாவது 'இளவயது கிராண்ட் மாஸ்டர்' பட்டம்வரை கொண்டுவந்து சேர்த்திருக்கிறது. இத்தாலியில் உள்ள ஊர்ட்டிசெய் நகரில் நடந்த நான்காவது க்ரெடைன் ஓபன் 2018 தொடரில், இறுதிச்சுற்றில் விளையாடுவதற்கு முன்னரே கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றிருக்கிறார் பிரக்ஞானந்தா. பதின் பருவத்தை எட்டுவதற்கு முன்னதாக கிராண்ட் மாஸ்டர் ஆனது உலகிலேயே இருவர்தான். ஒருவர் பிரக்ஞானந்தா; மற்றொருவர் உக்ரைனைச் சேர்ந்த செர்கை கர்ஜாகின்.
உலக சாதனை மட்டுமல்ல; இந்தியாவின் மிக இளவயது கிராண்ட் மாஸ்டர் இவர்தான். சென்னை முகப்பேர் வேலம்மாள் பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணவர். அக்கா வைஷாலியிடம் செஸ் கற்க ஆரம்பித்த பிரக்ஞானந்தா, இந்திய செஸ் அணியின் பயிற்சியாளரும் கிராண்ட் மாஸ்டருமான ஆர்.பி. ரமேஷிடம் செஸ் நுணுக்கங்களைக் கற்றார். தந்தை ரமேஷ்பாபு மாற்றுத்திறனாளி. அதனால் பிரக்ஞானந்தாவை வெளியூர் அல்லது வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பைத் தாய் நாகலட்சுமி ஏற்றுக்கொண்டார். பொருளாதாரப் பிரச்சனைகள் இருந்தபோதும், ரமேஷ்பாபு குழந்தைகளின் ஆர்வத்தை ஊக்குவித்து வந்தார். இருவருமே மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று வெற்றிகளைக் குவித்தனர். இந்திய அரசு மற்றும் செஸ் அகாடமியின் உதவியுடன் ஆசிய அளவில் நடந்த செஸ் போட்டித் தொடர்களில் பங்கேற்றனர். வெளிநாட்டுப் போட்டிகளிலும் வெற்றிகளைக் குவித்தனர்.
எட்டு வயதுக்குட்பட்டோர் மற்றும் பத்து வயதுக்குட்பட்டோருக்கான ஆண்கள் உலக இளம் செஸ் சேம்பியன்ஷிப் போட்டியில் 2013, 2015ல் சாம்பியன் டைட்டில் வென்றார் பிரக்ஞானந்தா. தொடர்ந்து 2016ம் ஆண்டில், 27 ஆண்டுகாலமாக முறியடிக்கப்படாமல் இருந்த ஹங்கேரியின் பிரபல செஸ் வீராங்கனை ஜூடித் போல்கரின் சாதனையை முறியடித்து, உலகின் 'யங் இன்டர்னேஷனல் மாஸ்டர்' என்னும் சிறப்பைப் பெற்றார். அதன் தொடர்ச்சிதான் தற்போது அவரை உலகின் இரண்டாவது இளவயது கிராண்ட் மாஸ்டர் ஆக்கியிருக்கிறது.
பயிற்சியாளர் ரமேஷ், "மிகவும் இளவயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வெல்வது எளிதல்ல. கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றதால் பிரக்ஞானந்தாவுடன் விளையாடுவதற்கு உலகின் பல வீரர்களும் போட்டி போடுவார்கள். இதனால் உலகின் முன்னணி வீரராக உருவாக அவருக்குச் சிறப்பான வாய்ப்புகள் அமையக்கூடும்" என்கிறார்.
சகோதரி வைஷாலியும் கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெறுவதற்கான தீவிர முயற்சியில் இருக்கிறார். பிரபல செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்துடன் விளையாட ஆர்வமாக இருக்கும் பிரக்ஞானந்தாவிற்கு, உலக செஸ் சேம்பியன் ஆவதுதான் முக்கிய லட்சியம். வாருங்கள், அது நிறைவேற வாழ்த்தலாம்.
அரவிந்த் |