அந்நியன்
சில விஷயங்களைப் பற்றி நான் ஒருபோதுமே பேச விரும்புவதில்லை; நான் சிறைக்கு வந்த சில நாட்களுக்குப் பிறகு, என் வாழ்க்கையின் இந்தப் பகுதி பற்றியும் நான் பேச விரும்பியிருக்க மாட்டேன் என்பதைப் புரிந்துகொண்டேன்.

நாட்கள் செல்லச்செல்ல இது போன்ற ஒரு வெறுப்புணர்ச்சிக்கு முக்கியத்துவம் ஏதும் இல்லை என்று தெரிந்துகொண்டேன். முதல் சில நாட்களில் நான் சிறைப்பட்டிருந்ததாகவே உண்மையில் நான் நினைக்கவில்லை. ஏதோ ஒரு புதிய சம்பவம் நிகழப்போவதற்காக வெறுமனே காத்துக்கொண்டிருந்தேன். மாரியின் முதல் வருகை - ஒரே ஒரு முறைதான் வந்தாள் - அதற்குப் பின்தான் எல்லாமே ஆரம்பித்தது. என்றைக்கு அவளுடைய கடிதம் வந்ததோ அன்றிலிருந்து, (அவள் என் மனைவியாக இல்லாததால் அவளை வர அனுமதிக்க மறுத்துவிட்டார்கள் என்று எழுதியிருந்தாள்) அந்த நாளிலிருந்துதான், சிறைக்கூண்டுதான் என் வீடு, அதற்குள்தான் என் வாழ்க்கை என்பதை உணர்ந்தேன். என்னைக் கைதுசெய்த தினத்தன்று ஒரு அறையில் தள்ளிப் பூட்டினார்கள். அங்கு ஏற்கனவே பல கைதிகள் இருந்தனர். அதில் பெரும்பாலானோர் அராபியர்கள். என்னைப் பார்த்தவுடன் சிரித்தார்கள். பிறகு நான் எதற்காக அங்கு வந்து சேர்ந்தேன் என்று கேட்டார்கள். ஒரு அராபியனைக் கொன்றேன் என்று சொன்னேன். மௌனமாகிவிட்டார்கள். சற்று நேரத்தில் இரவு விழுந்ததும், எனக்குக் கொடுக்கப்பட்ட விரிப்பைப் படுக்கும் முன் எப்படி உபயோகிப்பது என்று சொல்லிக்கொடுத்தார்கள். அதன் ஒரு முனையைச் சுருட்டி ஒருமாதிரியாகத் தலையணைபோல் உபயோகிக்கலாம். இரவு முழுவதும் என் முகத்தின்மீது மூட்டைப் பூச்சிகள் ஓடியவண்ணம் இருந்தன. சில நாட்களுக்குப் பிறகு ஒரு சிறைக்கூண்டில் நான் தனித்து வைக்கப்பட்டேன். படுத்துக்கொள்வதற்கு மர பெஞ்சு ஒன்று அங்கிருந்தது; அதைத் தவிர, ஒரு கழிவுப் பெட்டியும் ஒரு தகரப் பாத்திரமும் மட்டுமே அங்கு இருந்தன. நகரத்தின் மேடான பகுதியில் இருந்தது அந்தச் சிறைச்சாலை. அதன் சிறிய சன்னல் வழியாக என்னால் கடலைப் பார்க்க முடிந்தது. ஒருநாள் அந்தச் சன்னல் கம்பியில் தொங்கியவாறு வெளிச்சத்தை நோக்கிக் கண்களை இடுக்கிக் கூர்ந்து பார்த்துக்கொண்டிருக்கும்போது காவல்காரன் வந்து, என்னைப் பார்க்க யாரோ வந்திருக்கிறார்கள் என்று தெரிவித்தான். அது மாரியாக இருக்கும் என்று நினைத்தேன். அவளேதான்.

பார்வையாளர்களைச் சந்தித்துப் பேசும் கூடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டேன். ஒரு நீண்ட தாழ்வாரம், பிறகு ஒரு படிக்கட்டு, மீண்டும் ஒரு நீண்ட தாழ்வாரம். பெரிய சன்னல்கள் கொண்ட அந்தக் கூடம் வெளிச்சமாக இருந்தது. குறுக்கே வரிசையாகப் போடப்பட்டிருந்த கம்பிகள் கூட்டத்தை நீளவாக்கில் மூன்று பகுதிகளாகப் பிரித்தன. பார்வையாளர்களையும் கைதிகளையும் பிரித்த இரு வரிசைக் கம்பிகளுக்கிடையே சுமார் எட்டிலிருந்து பத்து மீட்டர் இடைவெளி இருந்தது. நான் மாரியைச் சந்தித்தேன். அவள் கோடு போட்ட உடையை அணிந்திருந்தாள். வெயிலினால் அவள் முகம் பழுப்பேறியிருந்தது. எனக்கு அருகே சுமார் பத்துக் கைதிகள். பெரும்பாலும் அராபியர்கள். மாரியைச் சுற்றிலும் ஆப்பிரிக்க முஸ்லிம் பெண்கள் இருந்தனர். மாரிக்கு இருபுறமும் இரு பெண்கள். மெல்லிய உதடுகளுடன் கருப்பு உடை அணிந்திருந்த ஒரு வயதான கிழவி; சிறு உருவம். நீண்ட முடிகளுடன் தடித்த உருவம் கொண்ட மற்றொரு பெண்; உரத்த குரலில் அதிக அங்க அசைவுகளுடன் பேசிக்கொண்டிருந்தாள். கம்பிகளுக்கிடையே இருந்த இடைவெளியினால் மிகவும் பிரிக்கப்பட்டுவிட்ட நிலையில் பார்வையாளர்களும் கைதிகளும் மிகவும் உரத்துப் பேச வேண்டியிருந்தது. அந்தக் கூடத்தில் நான் நுழைந்தபோது அந்த வெற்றுச் சுவர்களில் பட்டு எதிரொலித்த குரல்களும் அகன்ற சன்னல்களின் கண்ணாடிகளில் பட்டு அப்படியே பிரதிபலித்த, கண்கூச வைக்கும் ஒளிப்பிழம்பும் ஒன்றுசேர, ஒருவித திக்பிரமை ஏற்பட்டது. எனது சிறைக்கூண்டு மிதமான வெளிச்சத்தோடும், இதைவிட அமைதியாகவும் இருந்ததால், இந்தச் சூழ்நிலைக்குப் பழக்கப்படுவதற்குச் சில கணங்கள் ஆயின. ஒருவாறாக, பகல்பொழுதின் முழு வெளிச்சத்தில் ஒவ்வொரு முகத்தையும் தெளிவாகத் தனித்தனியாகப் பார்க்க முடிந்தது. அந்த இரு கம்பி வரிசைகளுக்கிடையே தாழ்வாரத்தின் கோடியில் ஒரு காவல்காரன் உட்கார்ந்திருப்பதைக் கவனித்தேன். பெரும்பாலான அராபியக் கைதிகளும் அவர்களுடைய உறவினர்களும் தரையில் எதிரும் புதிருமாகக் குந்தியிருந்தனர். அவர்கள் குரலை உயர்த்திப் பேசவில்லை. அங்கிருந்த இரைச்சல்களுக்கு நடுவேயும் மெதுவான குரலில் பேசி ஒருவரையொருவர் எப்படியோ புரிந்து கொண்டனர். கீழ்மட்டத்தில் பரிமாறிக்கொள்ளப்பட்ட இந்த முணுமுணுப்பு அவர்கள் தலைகளுக்கு மேலே நடந்து கொண்டிருந்த பேச்சுவார்த்தைகளுக்கு ஓர் ஆதார சுருதிபோல் தொடர்ந்து வந்துகொண்டிருந்தது. மாரியை நோக்கி நடக்கும்போது இவை எல்லாவற்றையும் மிக வேகமாகப் பார்த்துக் கவனித்துக்கொண்டே போனேன். ஏற்கனவே கம்பி வரிசைகளுடன் ஒட்டியவாறு நின்றுகொண்டிருந்த மாரி, என்னைப்பார்த்து, தன்னால் முடிந்தவரைக்கும் புன்னகைத்தாள். அவள் மிக அழகாகவே இருந்தாள். ஆனால் அதை எப்படி அவளிடம் சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை .

குரலை மிகவும் உயர்த்தி "என்ன, எப்படி இருக்கிறாய்? உனக்கு வேண்டியதெல்லாம் கிடைக்கிறதா?" என்று கேட்டாள்.

"ஓ, எல்லாம் கிடைக்கிறதே" என்றேன்.

பிறகு மெளனமானோம். மாரியின் சிரித்த முகம் மாறவேயில்லை. அந்தப் பருமனான பெண் எனக்கு அருகிலிருப்பவனைப் பார்த்து - அவன் அவள் கணவனாக இருக்க வேண்டும் - கத்திப் பேசினான். உயரமாக, வெண்ணிறக் கேசத்துடன், இனிய முகத்துடன் இருந்தான் அந்த ஆள். ஏற்கனவே தொடங்கப்பட்டிருந்த உரையாடலின் தொடர்ச்சிதான் அது.

மிக உரத்த குரலில் "ழான் அவனைப் பார்த்துக்கொள்ள மாட்டேன் என்று சொல்லிவிட்டாள்" என்றாள். "அப்படியா?" என்றான் அவன். "நீ வெளியே வந்ததும் அவனைத் திரும்ப அழைத்துக் கொள்வாய் என்று சொல்லியும் மறுத்துவிட்டாள்."

ரேமோன் என் நலனைப் பற்றி விசாரித்ததாகத் தன் பங்கிற்கு மாரியும் கத்தினாள். நான் அதற்கு "நன்றி, " என்றேன். ஆனால் என் அருகில் உள்ளவன் "அவன் நன்றாக இருக்கிறானா" என்று உரக்கக் கேட்டதில் என் குரல் அடிபட்டுவிட்டது. "அவன் எப்போதையும் விட இப்போது நன்றாக இருக்கிறான்" என்று சிரித்தாள். எனக்கு இடது பக்கம் இருந்த மென்மையான கைகளுடைய இளைஞன் ஒன்றும் பேசவில்லை. அவனுக்கு எதிரில் ஒரு மெலிந்த கிழவி. இருவரும் ஒருவரையொருவர் தீவிரமாக உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தனர் என்பதையும் கவனித்தேன். ஆனால் வெகு நேரம் அவர்களையே கவனிக்க முடியாதபடி மாரியின் குரல் உரக்கக் கேட்டது. ஓரளவு நான் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அவள் சொன்னாள். "சரி" என்றேன். சொல்லியவாறு அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவளுடைய உடைக்குள்ளிருந்த வாளிப்பான தோள்களை இறுகப் பற்றிக்கொள்ள வேண்டும் போலிருந்தது. அந்தத் துணியின் மென்மை என்னைக் கவர்ந்தது. இவற்றையெல்லாம் மீறி வேறு எதில் நம்பிக்கை வைக்க வேண்டுமென்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், மாரி இவற்றைத்தான் குறிப்பிட்டிருக்க வேண்டும். ஏனென்றால் அவள் இன்னும் சிரித்தவாறேயிருந்தாள். பளிச்சிடும் அந்தப் பற்களின் வெண்மை, அவள் கண் இமைகளின் சிறு மடிப்பு - இவை மட்டுமே எனக்குத் தெரிந்தன. "நீ நிச்சயம் விடுதலை ஆகி வருவாய். பிறகு நாம் மணந்துகொள்வோம்," என்று மறுபடியும் உரக்கச் சொன்னாள். "உண்மையாகவா" என்று நான் கேட்டாலும், சும்மா ஏதோ சொல்ல வேண்டுமே என்றுதான் அப்படிச் சொன்னேன். அவள் மறுபடியும் வேகமாக, எப்போதும் போல் உரத்த குரலில் அது உண்மைதான் என்றும், எனக்கு விடுதலை அளித்துவிடுவார்கள் என்றும், நாங்கள் வழக்கம்போலக் கடலில் குளிக்கப் போகலாமென்றும் சொன்னாள். அவளருகில் இருந்த பெண் இன்னும் உரக்கக் கத்தினாள். சிறைச்சாலை அலுவலகத்தில் விட்டுச்செல்லும் கூடையில் என்னவெல்லாம் வைத்திருக்கிறாளென்று ஒரு பட்டியலே கொடுத்தாள். அதிக விலை கொடுத்து வாங்கியிருப்பதால் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டுமாம். எனக்கு மற்றொரு புறத்தில் இருந்த கைதியும் அவன் அம்மாவும் இன்னும் ஒருவரையொருவர் பார்த்தவாறேயிருந்தனர். எங்கள் காலடியில் அந்த அராபியர்களின் முணுமுணுப்பு இன்னும் தொடர்ந்துகொண்டேயிருந்தது. வெளி உலகத்தின் வெளிச்சமெல்லாம் ஒன்றுதிரண்டு சன்னலைத் தாக்குவதுபோல் இருந்தது.

எனக்கு இருப்புக்கொள்ளவில்லை. இந்த இடத்தை விட்டுப் போய்விடலாம் என்றே எனக்குத் தோன்றியது. அந்த இரைச்சல் என்னை மிகவும் பாதித்தது. ஆனால் மற்றொருபுறம் மாரி இருக்கும் வரை மகிழ்ச்சியாக இருக்கலாமே என்றும் தோன்றியது. இது போன்று எவ்வளவு நேரம் கழிந்திருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. தன் அலுவலக வேலையைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்த மாரி, இடைவிடாத புன்முறுவலுடன் காணப்பட்டாள். முணுமுணுப்புகள், கத்தல்கள், பேச்சுவார்த்தைகள் எல்லாம் குறுக்கும் நெடுக்குமாக அலைபாய்ந்த வண்ணம் இருந்தன. எனக்கருகில் ஒருவரை ஒருவர் பார்த்தவாறு மட்டுமே இருந்த அந்த இளைஞனும் முதியவளும் மாத்திரம் அங்கே ஒரு மெளனத் தீவு. கொஞ்சம் கொஞ்சமாக அராபியர்களைத் திரும்ப அழைத்துச்சென்றனர். முதல் அராபியன் செல்ல ஆரம்பித்ததுமே, அநேகமாக எல்லோருமே மௌனமாகிவிட்டனர். அந்த முதியவள் கம்பிகளுக்கு மிக அருகில் நெருங்கி வந்தாள். அதே சமயம் அவளுடைய மகனிடம் ஒரு காவல்காரன் சைகை செய்தான். "வரட்டுமா அம்மா" என்றான் அவன். அவள் கம்பிகள் வழியாகக் கையை நீட்டி, விடைபெறுவதுபோல் சைகை செய்தாள். மெதுவான சற்றே நீடித்த சைகை.

அவள் புறப்பட்டுப் போகும்போது, கையில் தொப்பி ஒன்றை ஏந்தியவாறு ஒருவன் உள்ளே நுழைந்து அவள் இருந்த இடத்திற்கு வந்தான். அவனுக்கு ஒரு கைதியைச் சுட்டிக்காட்டினர். கூடம் மீண்டும் அமைதியாகிவிட்டதால் அவர்கள் இருவரும் உணர்ச்சிகரமாக, ஆனால் தாழ்ந்த குரலில் பேசிக்கொண்டார்கள். எனக்கு வலது பக்கத்தில் இருந்தவனை அழைத்துச்செல்ல ஆட்கள் வந்துவிட்டனர்.

இனியும் கத்திப் பேச வேண்டிய அவசியம் இல்லை என்பதை உணராதவள்போல் அவன் மனைவி உரக்கச் சொன்னாள், "உடம்பைப் பார்த்துக்கொள். ஜாக்கிரதை." பிறகு என் முறை வந்தது. மாரி எனக்கு முத்தமிடுவதுபோல் சைகை செய்தாள். அவளுடைய பார்வையிலிருந்து நான் மறைவதற்கு முன்னர் ஒருமுறை திரும்பிப் பார்த்தேன். அவள் அசையாமல் இருந்தாள். கம்பிகளின் மேல் அழுத்திய முகம். கோணலான, சங்கடமான அதே சிரிப்பு.

இதற்குச் சில நாட்களுக்குப் பிறகுதான் அவள் எனக்குக் கடிதம் எழுதினாள். அதற்குப் பிறகுதான் நான் ஒருபோதுமே பேச விரும்பாத விஷயங்கள் நடக்க ஆரம்பித்தன. எதையும் மிகைப்படுத்திச் சொல்லக் கூடாதுதான்; மேலும், அங்கிருந்த மற்றவர்களைவிட அந்தச் சிறைவாசம் எனக்கு எளிதாகவே இருந்தது. இருந்தாலும், சிறைவாசத்தின் ஆரம்பக் கட்டத்தில் எனக்கு மிகவும் சிரமமாக இருந்தது, சுதந்திரமான மனிதன் ஒருவனுக்கு இருக்கும் எண்ணங்களே எனக்கும் இருந்ததுதான். உதாரணமாக, கடற்கரைக்குச் சென்று தண்ணீரில் இறங்க வேண்டும்போல் ஒரு ஆசை வரும். என் கால்கள் மணலில் பதிந்தவுடன் வந்து மோதும் முதல் அலைகளின் ஓசை, தண்ணீருக்குள் இறங்கும்போது ஏற்படும் உணர்வு, அப்போது தோன்றும் விடுதலை உணர்வு - இவற்றைக் கற்பனை செய்துபார்க்கும்போது என் சிறைக்கூண்டின் சுவர்கள் எவ்வளவு என்னை நெருக்கியிருக்கின்றன என்பது திடீரென்று நினைவுக்கு வரும். ஆனாலும், இந்த நிலைமை சில மாதங்கள் வரைதான் நீடித்தது. அதன் பிறகு ஒரு கைதியின் மனத்தில் எழும் எண்ணங்கள் மட்டுமே இருந்தன. முற்றத்தில் தினமும் உலவச் செல்வதற்கு, அல்லது என் வழக்கறிஞர்கள் வருகைக்குக் காத்திருப்பேன். மற்ற நேரங்களை எப்படிக் கழிப்பது என்று நன்றாகவே தெரிந்துவைத்திருந்தேன். அப்போதெல்லாம் நான் அடிக்கடி நினைப்பதுண்டு: ஒரு மரப்பொந்திலேயே என் வாழ்நாட்களைக் கழிக்க வேண்டிய நிர்ப்பந்தம் என்று ஏற்பட்டிருக்குமேயானால், அப்போதுகூட அங்கிருந்து தெரியும் சிறிய ஆகாய மலரைப் பார்த்துக்கொண்டிருப்பதற்குப் பழக்கப்பட்டிருப்பேன். எப்போதாவது பறந்து மறையும் பறவைகளுக்காகவோ, தவழ்ந்து செல்லும் மேகங்களைப் பார்ப்பதற்காகவோ காத்துக் கொண்டிருப்பேன் - இப்போதெல்லாம் என் வழக்கறிஞரின் விசித்திரமான 'டை'களைச் சந்திப்பதற்காகக் காத்திருக்கிறேனே, அதுபோல. மற்றொரு உலகத்தில் வாரக் கடைசியில் மாரியுடன் கூடியிருப்பதற்காகச் சனிக்கிழமைவரை பொறுத்திருந்தேனே, அது போல. ஆக, நன்றாக யோசித்துப்பார்த்தால் இது ஒன்றும் ஒரு காய்ந்துபோன மரப்பொந்து அல்ல. என்னைவிட மோசமானவர்கள் எவ்வளவோ பேர் இருந்தார்கள். ஆம், அதுவும் அம்மாதான் சொல்லுவாள் - அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பாள் - போகப் போக எல்லாமே பழகிப்போய்விடும்.

ஆனாலும் சாதாரணமாக நான் இவ்வளவு தூரம் யோசித்துக் கொண்டிருக்கவில்லை. முதல் சில மாதங்களுக்கு மிகவும் சிரமமாகத்தான் இருந்தது. இருந்தாலும் அதை வெல்ல நான் எடுத்துக் கொண்ட முயற்சிகளிலேயே நேரம் ஒருவாறாகக் கழிந்தது. உதாரணமாக, ஒரு பெண் துணை வேண்டுமென்ற ஏக்கம் என்னை வாட்டியது. என் இளமைக்கு அது ஒரு இயல்பான ஏக்கம்தான். குறிப்பாக மாரியை மட்டுமே நான் எப்போதும் நினைத்துக்கொண்டிருக்கவில்லை. ஏதாவது ஒரு பெண்ணைப் பற்றி, ஏன், எனக்குத் தெரிந்திருந்த எல்லாப் பெண்களைப் பற்றியும், அவர்களோடு நான் உறவு கொள்ள நேர்ந்த எல்லாச் சந்தர்ப்பங்களைப் பற்றியும் நான் நினைத்துப் பார்க்கப் பார்க்க என் சிறைக்கூண்டு முழுவதும் அவர்களே, அவர்களுடைய முகங்களே இருப்பதுபோல் தோன்றியது. என் ஆசைக் கனவுகள் என் அறையை நிரப்பின. இது ஒரு வகையில் என்னை நிதானம் இழக்கச் செய்தது. ஆனாலும் மற்றொரு வகையில் வெற்று நேரத்தை விரட்டியடிக்க உதவியது.

எனக்குக் கொஞ்சம் கொஞ்சமாகச் சிறைத் தலைமைக் காவலாளியுடன் நட்பு ஏற்பட ஆரம்பித்தது. சாப்பாட்டு வேளையின்போது சமையற்காரனுடன் வரும் அவர்தான் முதலில் பெண்களைப் பற்றி என்னிடம் பேச ஆரம்பித்தார். இங்கு வரும் எல்லோருடைய முதல் புகாரும் இதுதான் என்றார். நானும் மற்றவர்களைப் போலத்தான் என்று அவரிடம் சொல்லி, இது மிகவும் நியாயமற்ற செயல் என்றேன். "நன்றாக இருக்கிறதே. அதற்காகத்தானே உங்களைச் சிறையில் போடுவது," என்றார் அவர். "அதற்காகவா? ஏன்?" என்றேன். "ஆமாம், பின், சுதந்திரம் என்றால் என்ன? உங்கள் சுதந்திரத்தை இங்கே பறித்துவிடுகிறார்கள்," என்று அவர் சொன்னார். அதைப்பற்றி நான் ஒருபோதும் நினைத்துப்பார்த்ததில்லை. "அதுவும் சரிதான். இல்லாவிட்டால் தண்டனை எங்கேயிருந்து வரும்?" என்றேன். அப்போது அவர், "பார்த்தீர்களா. நீங்கள் நன்றாகப் புரிந்து கொள்கிறீர்கள். ஆனால், மற்றவர்கள் எப்படியோ அவர்களும் கடைசியில் தாங்களாகவே சுயதிருப்தியைத் தேடிக்கொள்கிறார்கள்" என்றார். பிறகு அவரும் போய்விட்டார்.

சிகரெட்டுகள் பறிபோனது மற்றொரு வேதனை. நான் சிறைச்சாலைக்குள் நுழைந்ததும் என் வார்ப்பட்டை, காலணிகளின் நாடாக்கள், டை, சட்டைப்பைகளில் இருந்த எல்லாவற்றையும், குறிப்பாக, சிகரெட்டுகளை எடுத்துவைத்துக்கொண்டார்கள். சிறைக்கூண்டுக்கு வந்து சேர்ந்தவுடன் அவற்றையெல்லாம் திருப்பித் தரும்படி கேட்டேன். ஆனால், அவர்களுடைய விதிப்படி அது தடைசெய்யப்பட்டு இருந்ததென்று சொன்னார்கள். முதல் சில நாட்கள் மிகவும் கஷ்டமாக இருந்தது. எனக்கு மிகவும் கடினமாக இருந்ததே இதுதான் என்றும் சொல்லலாம். என் படுக்கையின் மரப்பலகையிலிருந்து ஒரு துண்டுக் கட்டையைப் பிய்த்து அதைக் கடித்துக் கொண்டே இருந்தேன். நாள் முழுவதும் பித்த வாந்தி வருவதுபோல் சங்கடப்படுத்திக்கொண்டேயிருந்தது. மற்றவர்களை ஒன்றும் செய்யாத இதுபோன்ற சிறு விஷயங்களெல்லாம் ஏன் என்னிடமிருந்து பறிக்கப்பட வேண்டுமென்று எனக்குப் புரியவில்லை. வெகு நாட்களுக்குப் பிறகுதான் இதுவும் எனக்குக் கொடுக்கப்பட்ட தண்டனையின் ஒரு பகுதி என்று புரிந்தது. ஆனால் அதற்குள் புகைபிடிக்கும் பழக்கம் ஏற்கனவே என்னிடமிருந்து மறைந்துவிட்டிருந்ததால், அதற்குப் பின்னும் அது எனக்கு ஒரு தண்டனையாக இருக்கவில்லை.

இதுபோன்ற அசௌகரியங்களைத் தவிர, நான் வேறு வகையில் அதிகமாகத் துன்புற்றிருக்கவில்லை. எனக்கு இருந்த ஒரே பிரச்சினை; நேரத்தை எப்படிக் கழித்துத் தீருவது? கடந்த காலத்தை நினைவுகூர்ந்து பார்க்கக் கற்றுக்கொண்டதிலிருந்து இந்தப் பிரச்சினையும் எனக்கு அவ்வளவாக இருக்கவில்லை. சில சமயங்களில் நான் முன்பு வசித்துவந்த அறையை நினைத்துக்கொண்டேன். என் கற்பனையில் என்னுடைய அறையின் ஒரு மூலையிலிருந்து தொடங்கிப் பார்வையை ஒரு சுற்று விட்டு, அப்போது என் மனக்கண்முன் தோன்றிய பொருள்களையெல்லாம் கணக்கெடுத்தவாறு திரும்பி அதே மூலைக்கே வந்தேன். முதலிலெல்லாம் இந்தப் பொழுதுபோக்கு வேகமாக முடிந்துவிடும். பிறகு ஒவ்வொரு தடவையும் நான் இப்படிச் செய்தபோது என் கற்பனையும் நீண்டுகொண்டே போயிற்று. அங்கிருந்த ஒவ்வொரு மரச்சாமானும், அதன் மேலிருந்த ஒவ்வொரு பொருளும் அதன் ஒவ்வொரு சிறு அம்சமும் எனக்கு நினைவுக்கு வந்தன. ஒவ்வொரு சிறு ஒடுக்கல், நசுக்கல், கீறல், பிய்ந்துபோன சிறு துண்டுகள், அவற்றின் நிறம் - இவையெல்லாம் சிறிதுசிறிதாக நினைவுக்கு வந்தன. அதே சமயத்தில் என் கணக்கெடுப்பில் எதுவும் விட்டுப்போகாமலிருக்கவும், முழுமையாக அவற்றை நினைவுபடுத்திப்பார்க்கவும் முயன்றேன். இவ்வாறு சில வாரங்களின் முடிவில் என் படுக்கை அறையிலிருந்த பொருள்களைப் பட்டியலிடுவதிலேயே பல மணி நேரத்தை என்னால் கழிக்க முடிந்தது. இப்படியாக நினைத்துப்பார்க்கப் பார்க்க, எவ்வளவோ மறந்துபோன, அல்லது சரியாகக் கவனிக்கப்படாத அம்சங்கள் எனக்குத் தெரியவந்தன. ஒருவன் வெளியுலகில் முழுமையாக ஒருநாள் வாழ்ந்திருந்தால் போதும்; அவனால் நூறு வருடங்கள்கூட சிறையில் இருக்க முடியும் என்று அப்போதுதான் புரிந்துகொண்டேன். அலுப்புத்தட்டாமல் இருக்கப் போதுமான நினைவுகள் அவன் வசம் இருக்கும். ஒருவிதத்தில் பார்த்தால், இது ஒரு சௌகரியம் என்றே சொல்லலாம்.

(நன்றி : அந்நியன், க்ரியா பதிப்பக வெளியீடு)

தமிழில்: வெ. ஸ்ரீராம்
ஃப்ரெஞ்ச் மூலம்: ஆல்பெர் காம்யூ

© TamilOnline.com