தென்றல் பேசுகிறது....
நாட்டின் பொதுச்சூழல் சுகமானதாக இருந்தாலும் தனிநபர் வாழ்க்கையில் மேடுபள்ளங்கள் தவிர்க்க முடியாதவை ஆகும். ஆனால், நாட்டின் சூழலே ஆட்டம் காணுவதாக இருந்தால் மொத்தச் சமூகமே ஒரு நிச்சயமற்ற தன்மையில் தள்ளாடத் தொடங்கிவிடும். இன்றைய நிலை இப்படித்தான் இருக்கிறது. ஏதோ ஒரு காரணத்துக்காக, நடப்புநிலையை மாற்றும் நோக்கத்துடன், பழமைவாதக் (Conservative) கட்சியைப் பதவியில் அமர்த்தினர் மக்கள். ஆனால் ட்ரம்ப் இன்னதுதான் செய்வார் என்று சொல்லமுடியாத எதையெதையோ செய்வார் என்று அவர்கள் நினைத்திருக்க மாட்டார்கள். எக்குத்தப்பான குடிவரவுக் கொள்கைகள், என்ன விளைவென்று தெரியாத வடகொரியப் பேச்சுவார்த்தை, G7 உச்சி மாநாட்டில் நட்பு நாடுகள்மீது காரமான விமர்சனம், பன்னாட்டு வணிகத்தையும், உள்நாட்டு உற்பத்தியையும் தகர்த்தெறியும் அளவுக்கு இறக்குமதி வரிகள் எல்லாமாகச் சேர்ந்து நாட்டைக் குழப்பச் சுனாமியில் கொண்டு விட்டிருக்கின்றன. குடிமக்களின் மனக் கலவரம் சொல்லி மாளாது. பங்குச்சந்தையின் அலைபாயும் குறியீடுகளை மக்கள் மனநிலையைக் குறிப்பதாகவே கொள்ளலாம். வரப்போகும் இடைத்தேர்தல் ஒருவேளை அவருக்கு அதிர்ச்சி வைத்தியமாக அமையலாம், பாடம் புகட்டலாம். அப்போது மக்கள் வாழ்க்கை இயல்புநிலைக்குத் திரும்பலாம். நம்புவோம்.

*****


ஐநாவுக்கான அமெரிக்கத் தூதர் நிக்கி ஹேலி அண்மையில் இந்தியா வந்திருந்தபோது இரானிலிருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தவேண்டும் எனக் கண்டிப்பாகக் கூறினார். இந்தியா இதற்குப் பணிந்துவிடாது என்று பரவலாகக் கருதப்பட்டது. ஆனால் இரானிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைக் குறைத்துவிடத் தீர்மானித்துள்ளன இந்தியச் சுத்திகரிப்புக் கம்பெனிகள். சீனாவுக்கு அடுத்தபடி இரானிலிருந்து மிக அதிகமாக எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடு இந்தியா ஆகும். இரானைத் தனிமைப்படுத்தும் அமெரிக்காவின் மிரட்டல் உலக அளவில் கச்சா எண்ணெய் விலையைக் கிடுகிடுவென ஏறச் செய்துள்ளது. அதன் ஒரு விளைவு இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி. "நாங்கள் அமெரிக்காவின் மிரட்டலுக்குப் பணியவில்லை, ஐநாவின் கட்டுப்பாடுகளுக்கு இணங்கியே இதைச் செய்கிறோம்" என்கிறது இந்தியா. போதாக்குறைக்கு இந்தியாவுடன் "2 x 2" (இருவருக்கிருவர்) பேச்சு வார்த்தையைத் தள்ளிப்போட்டு முகத்தில் கரி பூசியிருக்கிறது அமெரிக்கா. அவ்வளவு எளிதில் அடி பணிகிறவரல்ல பிரதமர் மோதி என்பதுதான் ஒரே ஆறுதல். இதனால் இந்திய-அமெரிக்க உறவு என்னவாகும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

*****


புழுக்கள் நெளியும் தொழுநோய்ப் புண்களில் சீழும் ரத்தமும் வடிந்து கொண்டிருக்கிற சாலையோர நபர்களைச் சற்றும் தயக்கமோ அருவருப்போ இல்லாமல் தொட்டு, துடைத்து, மருந்திட்டு, கட்டுப் போட்டு, உணவு தந்து அன்பு காட்டுகிற "தேவகுமாரன்" இருக்கும் ஊர் திருவண்ணாமலை. அவர் பெயர் மணிமாறன். அழுகல் நாற்றம் தாங்கமுடியாமல் அவர்களைக் கொண்டுசெல்ல ஆம்புலன்ஸ்களே மறுத்தாலும் தன் இரு கைகளில் ஏந்திச் செல்லத் தயங்காத இவருக்கு வயது 32 தான். இவரது நேர்காணலை வாசிக்கும்போது கண்கள் ஊற்றெடுக்காமல் இருக்காது. கருவிலே திருக்கொண்டு அரிய சித்தாற்றல்களை வெளிப்படுத்திய ஸ்ரீலஸ்ரீ பன்றிமலை சுவாமிகளின் வாழ்க்கைச் சித்திரம், ஃப்ரெஞ்சு மொழிபெயர்ப்புகளுக்காகவே இரண்டு முறை செவாலியே விருதுபெற்ற வெ. ஸ்ரீராம் பற்றிய கட்டுரை, 12 வயதிலேயே கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற பிரக்ஞானந்தாவைப் பற்றிய குறிப்பு என இந்த இதழ் உங்கள் முன்னே ஒரு வசீகரமான உலகத்தை விரிக்கிறது. உள்ளே நுழைந்து தன்னை மறந்தாலும், உங்கள் கருத்தை எங்களுக்கு எழுத மறக்காதீர்கள்.

வாசகர்களுக்கு அமெரிக்கச் சுதந்திர நாள், குருபூர்ணிமை மற்றும் உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்.

தென்றல் குழு

ஜூலை 2018

© TamilOnline.com