2018 ஏப்ரல் 7-8 தேதிகளில் விரிகுடாப்பகுதி தியாகராஜ ஆராதனை விழாவை 'கலாலயா', சான் ஹோஸேவில் உள்ள எவர்கிரீன் உயர்நிலைப்பள்ளி அரங்கில் வெகுசிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது.
முதல்நாள் விழா, வித்வான் நெய்வேலி சந்தானகோபாலன் அவர்களுடன் இப்பகுதியின் இசையாசிரியர்களும், கலைஞர்களும் இணைந்து பாடிய பஞ்சரத்னக் கிருதிகளுடன் தொடங்கியது. அடுத்து, விரிகுடாப்பகுதியின் 15 குருமார்கள் வழங்கிய குழு இசையைத் திரு ரவீந்திர பாரதி ஸ்ரீதரன் ஒருங்கிணைத்திருந்தார். பின்னர் ஒலித்த இனிய நாமசங்கீர்த்தனத்தை திரு ரமேஷ் ஸ்ரீனிவாசன் ஒருங்கிணைத்தார். அடுத்து வந்த திருமிகு ஸ்ரீரஞ்சனி சந்தானகோபாலனின் இன்னிசைக் கச்சேரி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. அவரோடு திருமிகு அனுராதா ஸ்ரீதர் (வயலின்), ஸ்ரீராம் பிரும்மானந்தம் (மிருதங்கம்) ஆகியோர் பக்கவாத்தியம் வாசித்தனர்.
திரு நெய்வேலி சந்தானகோபாலன் வடிவமைத்து வழங்கிய கர்நாடக காவிய சேர்ந்திசை நிகழ்ச்சியைக் குழந்தைகள் பாடக் கேட்டது தேவகானமாக இருந்தது. அன்றைய நிகழ்ச்சிகளின் மகுடமாக அமைந்தது சந்தானகோபாலன் அவர்களின் கச்சேரி. அவருக்குத் திரு வி. சஞ்சீவ் வயலினும், திரு சங்கரநாராயணன் ரமணி மற்றும் திரு ரவீந்திரபாரதி ஸ்ரீதரன் இருவரும் மிருதங்கமும் வாசித்தனர்.
திரு கோபி லக்ஷ்மிநாராயணனின் சீடர்கள் அளித்த அற்புதமான லயவின்யாசத்துடன் இரண்டாம்நாள் நிகழ்ச்சிகள் தொடங்கின. அதனைத் தொடர்ந்து குரு அனுராதா ஸ்ரீதரின் மாணவர்கள் இசையமுதம் படைத்தனர். அடுத்து வந்த திருமிகு தானிகெல்லா சந்திரபானுவின் வாய்ப்பாட்டுக்கு, திரு அரவிந்த் லக்ஷ்மிகாந்தன் (வயலின்), திரு நடராஜன் ஸ்ரீனிவாசன் (மிருதங்கம்) சிறப்பாகப் பக்கம் வாசித்தனர். பின்னர் ஸ்ரீகாந்த் சாரி, ரிஷிகேஷ் சாரி மற்றும் ப்ரியங்கா சாரி மூவரும் ஒருசேரத் தந்த வீணையிசைக்கு ரவீந்திரபாரதி ஸ்ரீதரனும், சந்தோஷ் ரவீந்திரபாரதியும் இரட்டை மிருதங்கம் வாசித்தனர். ரவீந்திர பாரதி ஸ்ரீதரனின் 'நாதோபஸனா கவின்கலை அகடமி' திருப்புகழ் மாலையை அழகுற வழங்கியது. வி. சஞ்சீவ் (வயலின்) மற்றும் சங்கரநாராயணன் ரமணி (மிருதங்கம்) சிறப்பான துணையுடன் வித்வான் சிக்கில் குருசரண் வழங்கிய அமோகமான சங்கீதக் கச்சேரியுடன் விழா நிறைவெய்தியது.
செய்திக்குறிப்பிலிருந்து |