பாஸ்டன்: அனஹிதா, அபூர்வா கச்சேரி
ஏப்ரல் 28, 2018 அன்று பாஸ்டன் அருகே உள்ள நார்வுடில், பிரபல இளைய தலைமுறைக் கலைஞர்களான அனஹிதா-அபூர்வா சகோதரிகளின் கர்னாடக இசைக்கச்சேரி நடைபெற்றது. இவர்கள் பிரபல இசைமேதை 'சங்கீத கலாநிதி' ரவிகிரணின் சிஷ்யைகள் ஆவர். பாஸ்டனில் தொடங்கியுள்ள இவர்களின் 2018 அமெரிக்க இசை சுற்றுப் பயணம் ஜூன் மாதம் வரை பல் வேறு மாநிலங்களை தொடவிருக்கிறது.

பாஸ்டனைச் சேர்ந்த சில இசையமைப்புகளின் ஆதரவுடன் ஏற்பாடு செய்யப்பட்ட அனஹிதா-அபூர்வா சகோதரிகளின் பிரத்தியேகமான கச்சேரியில் பிரபல வித்வான் திருச்சூர் நரேந்திரன் (மிருதங்கம்), திரு பிரவீண் சீதாராமன் (மிருதங்கம்) மற்றும் திருமதி ரசிகா முரளி (வயலின்) சிறப்பாகப் பக்கவாத்தியம் வாசித்தனர். ஊத்துக்காடு வெங்கடசுப்பையரின் அரிதான ராகமாலிகையான "இப்படியும் ஒரு பிள்ளை", அம்ருதவர்ஷிணி ராகத்தில் "சுதாமயி", தியாகராஜரின் "சேசினதேல்லா" (தோடி), "வா குஹா வா முருகா" என்ற ராகம்-தானம்-பல்லவி, சிந்துபைரவியில் "சந்திரசேகரா ஈசா", த்விஜாவந்தி ராகத்தில் "தீர சமீரே யமுனா தீரே" என்ற அஷ்டபதி, தில்லானா என்று அமர்க்களமான இசை விருந்தை அளித்தனர்.

சகோதரிகள் எட்டு வயதிலேயே முதல் கச்சேரியை அளித்தனர். பம்பாய் சண்முகானந்தா சபையின் எம்.எஸ். சுப்புலட்சுமி விருது, சென்னை கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸின் 'இசைச்சுடர்' பட்டம், பார்த்தசாரதி சுவாமி சபையின் சிறந்த கச்சேரி பரிசு, இந்திய வானொலியில் கிரேடு B இசைக்கலைஞர் என்று பல கௌரவங்களைப் பெற்றிருக்கிறார்கள்.

அனஹிதா-அபூர்வா சகோதரிகளின் அமெரிக்க இசைச் சுற்றுப்பயணத்தைப் பற்றி அறிய: https://goo.gl/wjdNwD

அரவிந்த் கிருஷ்ணமூர்த்தி,
பாஸ்டன்

© TamilOnline.com