மே 5, 2018ம் நாளன்று தமிழ் நாடு அறக்கட்டளையின் கனெக்டிகட் கிளை நடத்திய அன்னையர் தினவிழாவில் நால்வருக்கு விருதுகள் வழங்கப்பட்டன்: குழந்தைநல மருத்துவர் டாக்டர் சித்ரா ரமணன், 'சினேகா' அமைப்பை நடத்தும் சமூக சேவகர் திருமதி உமா நாராயணன், எத்தல் வாக்கர் பள்ளித் தலைமை ஆசிரியை திருமதி மீரா விஸ்வநாதன், யேல் பல்கலைக்கழக விண்வெளி இயற்பியல் துறைத்தலைவி ப்ரியம்வதா நடராஜன் ஆகியோர்.
விழாவில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன. கனெக்டிகட் கிளை இவ்வருடம் முதல் சிறுநீரக நோய்த்தடுப்பு மற்றும் விழிப்புணர்வுக்காகச் 'சிகரம்' திட்டத்தை உருவாக்கி, விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகரில் ஃபிப்ரவரி மாதம் முதல் முகாம் ஒன்றை நடத்தியது. கிட்டத்தட்ட 200 கிராம மக்களுக்கு இலவசமாக ரத்தம், சிறுநீர் பரிசோதனை செய்யப்பட்டது. நீரிழிவு, ரத்த அழுத்தம் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டு, சிகிச்சை செய்துகொள்ளப் பரிந்துரைக்கப்பட்டது. பல்வேறு நிலைகளில் சிறுநீரக நோய் சிலருக்கு இருப்பது அறியப்பட்டு, மதுரையிலுள்ள பெரிய மருத்துவமனைகளுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டது.
சிறுநீரக நோய் கிராமப்புற மக்களைச் சமீபகாலமாகத் தாக்குவதால் பலர் டயாலிசிஸ் சிகிச்சை மற்றும் உறுப்புமாற்று சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள். 'சிகரம்' திட்டத்துக்கான நிதிவளர்ப்பு இவ்வருட அன்னையர் தினவிழாவின் முக்கிய நோக்கமாக அமைந்தது.
திட்டத்தைப் பற்றி மேலும் விவரங்களுக்கும் இணைந்து உதவவும் மின்னஞ்சல் - tnfconn@gmail.com வலைமனை - Connecticut.tnfusa.org
டாக்டர் நிரஞ்சன், கனெக்டிகட் |