மே 5, 2018 அன்று நடந்த சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப்பகுதித் தமிழ்மன்றத்தின் சித்திரைத் திருவிழாவில் கலைமாமணி திரு. புஷ்பவனம் குப்புசாமி, திருமதி. அனிதா குப்புசாமி மற்றும் குழுவினரின் இசைநிகழ்ச்சி ஃப்ரீமான்ட் சென்டர்வில் பள்ளி அரங்கில் நடைபெற்றது.
நிகழ்ச்சியின் துவக்கப்பாடலாகக் குப்புசாமி "தமிழே வணக்கம்" பாடலைப் பாடினார். அனிதா குப்புசாமி பாடிய கும்மிப் பாட்டுக்குப் பெண்கள் கும்மியடித்து நடனமாடினர். இருவரும் கேள்வி பதில் பாணியில் பாடிய தமிழர் வீட்டுக்கோழிப் பாடலில் கோழியின் வீரமும் சாதுரியமும் வெளிப்படும் விதமாகவும் நகைச்சுவையாகவும் இருந்தது.
குப்புசாமி அவர்கள் "இறைவனிடம் கையேந்துங்கள்", "எல்லோருக்கும் ராஜா ஏசு ராஜா" பாடல்கள் மனதை உருக்கின. அவர் பாடிய விடுகதைப் பாடலுக்குப் பார்வையாளர்கள் ஆர்வத்துடன் பதிலளித்தனர். கருப்பசாமி பாடலை உணர்ச்சிவேகத்துடன் பாடி கேட்டோரைப் பரவசத்தில் ஆழ்த்தினார். குழந்தைகளுக்கான "பிறந்தநாள்" பாடல் மிகவும் நன்று. கர்நாடக ராகமான கரகரப்ரியாவின் ஆரோஹண அவரோஹணம் பாடியபின்னர் அதிலமைந்த திரைப்பாடல்கள் சிலவற்றைக் கொஞ்சம் பாடிக்காட்டி, அதே ராகத்தில் "கொல்லையிலே கொய்யாமரம்" பாடி அசத்தினார்.
நிறைவாக "சித்திரைத் திருவிழா" என்ற பாடலைப் பாடி நிறைவு செய்தார்.
தமிழ்மன்ற நிர்வாகிகள் புஷ்பவனம் குப்புசாமி மற்றும் குழுவினருக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினர். நன்றியுரையுடன் சித்திரைத் தமிழிசை இனிதே நிறைவுற்றது.
ரமேஷ் குப்புசாமி, செயலாளர், BATM |