மே 19, 2018 அன்று ஹூஸ்டன் பெருநகரத் தமிழ்ப்பள்ளி தனது ஆண்டுவிழாவை ஹூஸ்டன் விஸ்டம் உயர்நிலைப் பள்ளியில் சிறப்பாகக் கொண்டாடியது. மாநகரத்தின் மிகப்பெரிய தமிழ்ப்பள்ளியான இது 450 மாணவர்களுக்குத் தமிழ் பயிற்றுவிக்கிறது. மாநகரத்தின் பகுதிகளான பியர்லேண்ட், கேட்டி, உட்லண்ட்ஸ், மேற்கு ஹூஸ்டன், சுகர்லேண்ட், மேற்கு கேட்டி மற்றும் புதிய கிளையான சைப்ரஸ் என ஏழு கிளைகளில் தமிழ் வகுப்புகளை நடத்திவருகிறது.
இந்த ஆண்டுவிழா ஏழு கிளைப்பள்ளிகளின் தமிழ்ச் சங்கமம். இதில் நானூறுக்கும் மேற்பட்ட தமிழ் மாணாக்கர்கள் பங்கேற்றுத் தமிழ்த்திறனை வெளிக்காட்டினர். அறுநூறுக்கும் மேலான பெற்றோர்கள், விருந்தினர்கள் வந்திருந்தனர்.
தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் அமெரிக்க தேசியகீதத்துடன் விழா துவங்கியது. அடுத்து, பள்ளித்தலைவர் ஜெகன் அண்ணாமலை வரவேற்புரை நிகழ்த்தி, தலைமையேற்றுத் துவக்கி வைத்தார்.
பின்னர், சுகர்லேண்ட் கிளைப்பள்ளி இன்றைய தமிழ்நாட்டுச் சூழலை கருவாகக்கொண்ட நிகழ்ச்சியை வழங்கியது. மேற்கு ஹூஸ்டன் கிளைப்பள்ளி வழங்கிய உணவே மருந்து நிகழ்ச்சி பயனுள்ளதாக இருந்தது. தொடர்ந்து, புதுக்கிளையான சைப்ரஸ் பள்ளி ஒயிலாட்டம் ஒன்றை வழங்கியது. அதனையடுத்து, 'உலக சமாதானம்' என்ற கருத்தில் மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்ட நிகழ்ச்சியை உட்லண்ட்ஸ் கிளைப்பள்ளி வழங்கியது. தொடர்ந்து, எண்கள், நிறங்கள் எனத் தொகுத்து கவியரங்கம், கருத்தரங்கம், ஆடல் பாடல் என அனைத்துப் பரிணாமங்களிலும் பியர்லேண்ட் கிளைப்பள்ளி நிகழ்ச்சிகளை வழங்கியது. இறுதியாக கேட்டி மற்றும் மேற்கு கேட்டி கிளைப்பள்ளிகள் இணைந்து வில்லுப்பாட்டு, நாடகம், ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை வழங்கின.
முத்தாய்ப்பாக, அமெரிக்காவில் பிறந்து வளர்ந்து குடும்பத்துடன் வசித்து வரும் நடுத்தர வயதுடைய விக்ரம் இராஜன் கடந்த ஓராண்டாகப் பியர்லேண்ட் பள்ளியில் இணைந்து பயின்று வருவதைக் கொஞ்சும் தமிழில் எடுத்துரைத்தது பார்த்தோரைப் பரவசப்படுத்தியது.
அடுத்த நிகழ்வாக, திருக்குறள் போட்டியில் பங்கேற்று, வயதுவாரிக் குழுக்களில் முதல் மூன்று இடம்பெற்ற மாணாக்கர்களுக்கு பள்ளித் தலைவர் ஜெகன் அண்ணாமலை விருதுகள் வழங்கினார். மேலும், முதலிடம்பெற்ற ஒரு மாணவர் மற்றும் ஒரு மாணவிக்குச் சிறப்புப் பரிசாக மடிக்கணினி வழங்கப்பட்டது,
சிறப்பு விருந்தினராக வருகைதந்திருந்த, வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவைத் துணைத்தலைவர் திரு. கால்டுவெல் வேள்நம்பி மற்றும் விருந்தினர்களுக்குப் பள்ளி மாணவியர் பூங்கொத்து வழங்கி வரவேற்றனர். அதனையடுத்து சிறப்பு விருந்தினர்கள் சிறப்புரை நிகழ்த்தினர். தொடர்ந்து சிறப்பு விருந்தினருக்குப் பட்டயம் வழங்கி மரியாதை செய்தார் பள்ளி ஆலோசகர் வசந்தி இராமன். பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் அனைவருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. பின்னர், நிழற்படங்களின் ஒளிப்பதிவுத் தொகுப்பு ஒன்றை பாலாஜி லெட்சுமணன் தலைமையிலான குழு திறம்படத் தயாரித்து திரையிட்டது.
பின்னர் பதிவு மற்றும் வகுப்புத் தேர்வுகளில் முதலிடம் பெற்ற பள்ளிக்கிளைகளின் மாணாக்கர்களுக்கு அவரவர் வகுப்பாசிரியர்கள் விருதுகள் வழங்கினர். துணைத்தலைவர் பாலா சிவப்பிரகாசம் நன்றியுரை வழங்க, விழா இனிதே நிறைவடைந்தது.
கரு. மாணிக்கவாசகம், ஹூஸ்டன், டெக்சஸ் |