தெரியுமா: ICAI சான் ஃபிரான்சிஸ்கோவுக்குச் சிறந்த வெளிநாட்டுக் கிளை விருது
இந்தியப் பட்டயக் கணக்காளர் கழகத்தின் சான் ஃப்ரான்சிஸ்கோ கிளை (Institute of Chartered Accountants of India - ICAI-SF) வெளிநாட்டிலுள்ள சிறந்த கிளை பிரிவில் 2017ம் ஆண்டுக்கான 3வது பரிசை வென்றுள்ளது. கிளைத் தலைவர் திரு. விஷ் அருணாசலம் மற்றும் துணைத்தலைவர் திருமதி. கீதா ராமகிருஷ்ணன் புதுடெல்லியில் ஃபிப்ரவரி 6, 2018 அன்று நடந்த, கழகத்தின் 68வது ஆண்டுவிழாவில் இந்த விருதினைப் பெற்றுக்கொண்டனர். இந்திய நடுவண் அரசின் அமைச்சர்களான சுரேஷ் பிரபு, பீயுஷ் கோயல் மற்றும் P.P. சௌத்ரி இந்த விழாவில் பங்கேற்றனர்.

"இந்த வெற்றி எமக்கு மிகப் பெரியது. இதை நமது உறுப்பினர்களுக்குச் சமர்ப்பிக்கிறேன்" என்கிறார் சேர்மன் விஷ் அருணாசலம். கீதா ராமகிருஷ்ணன் கூறுகையில், "மிகப்பெரிய இலக்குகளை நமக்கென நிர்ணயித்துக் கொண்டுள்ளோம். இந்தியாவின் முன்னணித் தொழில் துறையினராக எம்மை நாம் கருதுகிறோம். வாருங்கள், அமெரிக்காவில் ICAI அமைப்பை வளர்க்கச் சேருங்கள்" என அழைக்கிறார்.

உலகெங்கிலுமிருந்து சுமார் 2,000 உறுப்பினர்களும், பட்டயக் கணக்கு மாணவர்களும் விழாவிற்கு வந்திருந்தனர். 275,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட ICAI உலகிலேயே இரண்டாவது பெரிய கணக்காளர் சங்கமாகும். சான் ஃபிரான்சிஸ்கோ கிளை, சார்ட்டர்டு அக்கவுண்டண்டுகள் தம்முள் தொடர்பு கொள்ள, அறிவுப் பரிமாற, தொழில்முறை மேம்பாடு அடைய துணை நிற்கிறது.

ICAI-SF அமைப்பின் தொடக்ககால உறுப்பினரான திரு. மது ரங்கநாதன் (CFO, [24]7.ai), "இந்தக் கிளை தொடங்கும்வரை சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியில் இத்தனை சார்ட்டர்டு அக்கவுண்டண்டுகள் இருப்பதோ, அவர்கள் பல முக்கியத் துறைகளில் உந்துசக்திகளாக இருப்பதோ எனக்குத் தெரிந்ததில்லை" என்று கூறுகிறார்.

சான் ஃபிரான்சிஸ்கோ கிளை இந்தியாவுக்கு வெளியே 29வது கிளையும், அமெரிக்காவின் மேற்குக்கரையில் முதலாவதும் ஆகும்.

மேலும் தகவலுக்கு:
வலைமனை: icaisfo.org
மின்னஞ்சல்: team@icaisfo.org
தொலைபேசி: 510.557.2693.

நர்சி கஸ்தூரி

© TamilOnline.com