கொல்கத்தாவில் இருக்கும் காளி கோவிலைக் கட்டியவர் ராணி ராஸமணி. ஒருமுறை அந்தக் கோவிலில் இருந்த கிருஷ்ண விக்கிரகம் கீழே விழுந்து அதன் கால் சிறிது உடைந்துவிட்டது.
ஆகம சாஸ்திரங்களின்படி, உடைந்த சிலையை வழிபடக்கூடாது என்று பல பண்டிதர்கள் கூறினர். அதனால் ஒரு புதிய சிலையை வடிக்க ராணியார் ஏற்பாடு செய்தார்.
இதைக் கேள்விப்பட்டார் ராமகிருஷ்ண பரமஹம்சர். அவர் ராணியாரிடம், "மகாராணி, உங்கள் மருமகனின் கால் உடைந்துவிட்டது என்று வைத்துக்கொள்வோம், அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? என்ன செய்வது சரியாக இருக்கும்? காலில் கட்டுப்போட்டு, அதைக் குணப்படுத்துவீர்களா? இல்லை, அவரை ஒதுக்கிவிட்டு வேறொரு மருமகனைக் குடும்பத்தில் சேர்த்துக்கொள்வீர்களா?" என்று கேட்டார்.
பண்டிதர்களும் மூத்தோரும் வாயடைத்துப் போயினர்; கிருஷ்ணரின் பாதம் செப்பனிடப்பட்டது. அதை மீண்டும் பிரதிஷ்டை செய்து முன்போல வழிபடத் தொடங்கினர்.
பக்தி தூயதாகவும், உயர்ந்ததாகவும் இருந்தால், உடைந்த விக்கிரகம் ஒன்றில்கூடப் பிரபு எழுந்தருளுவார். இதுவும் சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள தர்மம்தான்.
நன்றி: சனாதன சாரதி, ஆகஸ்டு 2016
பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபா |