தாய்மை உள்ளம்
காலையில் பெரிய காருக்கு டிரைவர் போட்டுக்கொண்டு எட்டு மணிக்கே வீட்டிலிருந்து கிளம்பி மகாபலிபுரம், விஜிபி எல்லாம் பார்த்து வருவதாகப் பிளான்.

பிள்ளை ராஜா, பெண் புவனி, அவர்களின் குழந்தைகள் நான்கு, அம்மா கமலா, அப்பா ஆகியோருடன் பெரிய வண்டியில் கிளம்பியாகிவிட்டது.

பிளான்படியே ஒவ்வொரு இடத்தையும் பார்த்துவிட்டு, மதிய சாப்பாட்டை ஓட்டலில் முடித்துக்கொண்டோம். விஜிபியும் ஓரளவு பார்த்துவிட்டுக் காரில் ஏறும்போது மணி ஐந்து.

குழந்தைகளும் அவர்களின் பெற்றோரும் "அம்மா,இன்னைக்குதான் எல்லோரும் ரொம்ப நாள் கழிச்சு சேர்ந்திருக்கோம். அப்படியே மெரினா பீச்சுக்கும் போவோமே. டின்னரை வழியில் முடித்துக் கொள்ளலாம்" என்று கெஞ்சினர்.

அம்மா உடனே மறுத்துவிட்டாள். "போதும்பா. சமையல்காரி வீட்டில் ஏகப்பட்டது சமைத்து வைத்திருப்பாள். டின்னரை வீட்டிலேயே வைத்துக்கொள்ளலாம். வண்டியை டிரைவர் வீட்டுக்கே விடட்டும்."

அம்மாவை யாரும் எதிர்க்கவில்லை. ஆனாலும் பிள்ளைகளின் முகம் வாடிவிட்டது. வீட்டுக்குள் நுழைந்தவுடன் அம்மா டிரைவரை உடனே பைசல் பண்ணி அனுப்பிவிட்டு உள்ளே வந்தாள். சின்னதுகள் பாட்டியிடம் "போ பாட்டி! எதுக்கு இவ்வளவு அவசரமாய் டிரைவரை அனுப்பணும்? மணி ஆறுகூட ஆகலியே. பீச்சுக்குப் போய்ட்டு வந்திருக்கலாம் டின்னர் வேண்டுமானால் வீட்டில் சாப்பிட்டு இருக்கலாம்தானே!" என்று ஒரே குரலில் புகார் செய்தன.

கேட்ட பெரியபேத்தியிடம் கமலா புன்னகைத்தவாறே "யாராவது டிரைவர் பேரைக் கேட்டிங்களா? காலையில் அவரிடம் ஃபோன் நம்பர் வாங்கும்போது நான் கவனித்தேன் அவர் பேர் ரஹ்மான். விடிகாலை 4 மணிக்கு சாப்பிட்டவர், நோன்பு முடிந்து ஆறு மணிக்கு மேல்தான் சாப்பிடுவார். நாம் பீச்சுக்குப் போயிருந்தால் அவர் பாவம் பசியுடன் இரவுவரை வண்டி ஓட்டணும் இல்லையா? நாம் இன்னொருநாள் கூடப் போகலாம் அதைவிட ஒரு மனிதன் நோன்பு முடிக்க உதவுவது முக்கியமில்லையா? அதுவும் ரம்ஜான் நோன்பு காலத்தில்? அதுதானே மனிதப்பண்பு!"

தாய்மை என்பது தன் பிள்ளைகளின் பசியை மட்டுமல்ல அடுத்தவர் பசியையும் கவனித்து நடக்கும் அன்புச்சுரங்கம் என்பதை அவளது பிள்ளைகள் புரிந்துகொண்டனர். பேரப்பிள்ளைகளும் தாம்.

பத்மா சபேசன்,
நியூ ஜெர்சி

© TamilOnline.com