1) 6, 6, 7, 5, 8, 4, 9, 3.... அடுத்து வர வேண்டிய எண் எது, ஏன்?
2) ஒரு ரயில் வண்டி 291 பயணிகளுடன் புறப்பட்டது. முதல் நிறுத்தத்தில் 35 பேர் இறங்கினர். இரண்டாவது நிறுத்தத்தில் 16ல் ஒரு பங்கினர் இறங்கினர். மூன்றாவதில் ஆறில் ஒரு பங்கினர் இறங்கினர். நான்காவது நிறுத்தத்திலும் சில பயணிகள் இறங்கினர். கடைசி நிலையத்தை வண்டி அடைந்தபோது அதில் 114 பேர் மட்டுமே இருந்தனர் என்றால் நான்காவது நிறுத்தத்தில் இறங்கிய பயணிகளின் எண்ணிக்கை எத்தனை?
3) 12 என்ற எண்ணை இடவலமாக மாற்றக் கிடைப்பது 21. 12ன் வர்க்கமான 144 மாற்றக் கிடைப்பது 441. இது 21ன் வர்க்கமாகும். இதே போன்ற வேறு எண்களை உங்களால் கூற முடியுமா?
4) ஒருவனிடம் 200 நாணயங்கள் இருந்தன. அவற்றை தினந்தோறும் தனது சேமிப்பு உண்டியலில் போட்டு வந்தான். முதல்நாள் எத்தனை நாணயங்களை உண்டியலில் போட்டானோ அதைவிட 6 நாணயங்கள் அதிகமாக அடுத்த நாள் போடுவான். ஐந்தாம் நாள் உண்டியலில் போட்டதும் அவன் கையிருப்பு தீர்ந்து விட்டது. அப்படியானால் அவன் தினந்தோறும் எத்தனை நாணயங்களை உண்டியலில் செலுத்தி வந்திருப்பான்?
5) சோமுவிடம் இருக்கும் பந்துகளைப் போல் இருமடங்கு ராமு வைத்திருக்கிறான். இருவரிடமும் உள்ள பந்துகளின் மொத்த எண்ணிக்கை 36. சோமு, ராமு இருவரிடமும் உள்ள பந்துகளின் எண்ணிக்கை எவ்வளவு?
அரவிந்த்
விடைகள்1) அடுத்து வர வேண்டிய எண் 10. காரணம் ஒன்றுவிட்ட இலக்கங்கள் ஒன்றிற்கொன்று ஏறுவரிசையாகவும், இறங்குவரிசையாகவும் அமைந்துள்ளன. 6, 7, 8, 9 என ஏறுவரிசையிலும், 6, 5, 4, 3 என இறங்குவரிசையிலும் எண்கள் அமைந்துள்ளன. எனவே ஏறுவரிசையில் அடுத்துத் தொடர வேண்டிய எண் 10.
2) மொத்தப் பயணிகள் = 291
முதல் நிறுத்தத்தில் இறங்கியவர்கள் = 35;
மீதம் பயணம் செய்தவர்கள் = 291 - 35 = 256
2வது நிறுத்தத்தில் = 256ல் 16ல் ஒரு பங்கினர் = 16.
மீதம் இருந்த பயணிகள் = 256 - 16 = 240
3வது நிறுத்தத்தில் இறங்கியவர்கள் = ஆறில் ஒரு பங்கினர் = 240ல் 6ல் ஒரு பங்கினர் = 40. மீதம் இருந்த பயணிகள் = 240 - 40 = 200
4வது நிறுத்தத்தில் இறங்கியவர்கள் = x
இறுதிவரை பயணம் செய்தவர்கள் = 114
x = 200 - 114 = 86
4வது நிறுத்தத்தில் இறங்கிய பயணிகள் = 86
3) 13, 31. 13ன் தலைகீழ் எண் 31. 13ன் வர்க்கம் 169. அதன் தலைகீழ் எண் 961. இது 31ன் வர்க்கமாகும். மற்றோர் எண் 102, 201 = இதன் வர்க்கத் தலைகீழ் எண் 10404, 40401.
4) முதல் நாள் எண்ணிக்கை = x
இரண்டாம் நாள் எண்ணிக்கை = x + 6
மூன்றாம் நாள் எண்ணிக்கை = x + 12
நான்காம் நாள் எண்ணிக்கை = x + 18
ஐந்தாம் நாள் எண்ணிக்கை = x + 24
மொத்த நாணயங்கள் = 5x + 60 = 200.
5x = 200 - 60 = 140;
5x = 140 என்றால்,
x = 28.
ஆகவே அவன் முதல் நாள் 28 நாணயங்களையும், ஐந்தாம் நாள் வரை 34, 40, 46, 52 என மொத்தம் இருநூறு நாணயங்களையும் உண்டியலில் போட்டிருப்பான்
5) மொத்தப் பந்துகளின் எண்ணிக்கை = 36
சோமுவிடம் இருக்கும் பந்துகள் x எனில் ராமுவிடம் இருக்கும் பந்துகள் = x + x = 2x
x + 2x = 36
3x = 36 எனில்
x = 12
எனவே சோமுவிடம் 12, ராமுவிடம் 24