ஜலதோஷ மூலிகை (அத்தியாயம் 8)
மறுநாள் காலை அருண் தூங்கிக்கொண்டிருந்தான். யாரோ தட்டி எழுப்பினார்கள். பாதித் தூக்கத்தோடு கண்ணைத் திறந்து பார்த்தான். அது ஒரு சனிக்கிழமை காலை. கொஞ்சம் அதிகமாகத் தூங்க நினைத்திருந்தான்.

"அருண் கண்ணா, எழுந்திருப்பா" என்று கீதா அவனை எழுப்பப் பார்த்தார். எதற்காக வாரக் கடைசியில்கூட இப்படி அம்மா இம்சிக்கிறார் என்று சிணுங்கினான் அருண்.

"அம்மா, இன்னைக்கு சனிக்கிழமை. இன்னும் கொஞ்சநேரம் தூங்கிக்கறனே, ப்ளீஸ்."

"கண்ணா, எழுந்திரு. நேரமாச்சு. சீக்கிரம் கிளம்பணும்."

கிளம்பணுமா? எங்கே? ஒன்றுமே புரியவில்லை. போர்வையைத் திரும்ப இழுத்துப் போர்த்திக்கொண்டான். அம்மா தனது அஸ்திரத்தை உபயோகப் படுத்தினார்: "கண்ணா, அருண் செல்லமே! நாம வொர்த்தாம்டன் போகவேண்டாமா?"

அவ்வளவுதான். வொர்த்தாம்டன் என்ற பெயரைக் கேட்டவுடன் சாவி கொடுத்த பொம்மை போலப் பட்டென்று எழுந்தான்.

"வொர்த்தாம்டன்?" என்று ஆச்சரியத்தோடு கேட்டான். அவனால் அம்மா சொன்னதை நம்பவே முடியவில்லை. "அம்மா, உண்மையாகவா?"

"ஆமாம் கண்ணா, ஆமாம்."

அம்மாவிடம் இருந்து அடுத்த வார்த்தை வருவதற்கு முன் கட்டிலில் இருந்து குதித்து குளியலறைப் பக்கம் ஓடினான். உள்ளே ஒரு பத்து நிமிடத்திற்கு டமால் டூமீல் என்று சத்தம் கேட்டது. துண்டு ஒன்றைக் கட்டிக்கொண்டு ஈரத்தலையுடன் வெளியே வந்தான்.

"பல் விளக்கினாயா?" அம்மா கேட்டார்.

"ஊப்ஸ்" என்று சொல்லித் திரும்பவும் உள்ளே போனான். அவன் வெளியே வருவதற்குள் அம்மா சமையலறைக்குக் காலைச் சிற்றுண்டி தயாரிக்கப் போனார்.

"அம்மா, நான் ரெடி" என்று சொல்லிக்கொண்டே அருண் சில நிமிடங்கள் கழித்து சமையலறைப்பக்கம் வந்தான். ரொட்டியும், ஆரஞ்சு ஜூஸும் தயாராக இருந்தன. தனக்குத்தான் என்று தெரிந்தது அவனுக்கு. உற்சாகத்தை அடக்க முடியாமல் சாப்பிட்டான். அப்பாவிற்கு அம்மா post it நோட் எழுதினார்: ‘நாங்கள் இன்று வொர்த்தாம்டன் போகிறோம். வரும்போது சாயந்திரம் ஆகிவிடும். சாப்பாடு வெளியே பார்த்துக்கொள்ளவும்.’

மணி 7 ஆகச் சில நிமிடங்கள் இருந்தன. "இப்ப கிளம்பினா, 9 மணிக்குப் போயிடலாம்" என்று சொல்லிக் கிளம்பினார் கீதா. வண்டியின் உள்ளே அமர்ந்ததும், கண்ணாடியைச் சரி பார்த்து, பின்பக்கம் திரும்பிப் பார்த்தார். அருண் சீட் பெல்ட்டை இழுக்கத் தடுமாறிக் கொண்டிருந்தான். பின்புறமாகக் கையை நீட்டி உதவினார்.

அருண் மெதுவாகக் கேட்டான். "அம்மா, நேத்து ராத்திரி கேட்டப்ப வொர்த்தாம்டன் கூட்டிட்டு போகமுடியாதுன்னு சொன்னீங்க. எப்படிம்மா மனசு மாறினீங்க?"

பின்புறம் பார்க்கும் கண்ணாடியைச் சரிசெய்துகொண்டே அவனைப் பார்த்தார். அம்மாவின் முகம் அதில் தெரிந்தது. அதில் ஒரு புன்னகை இருந்தது.

"என்ன பண்றது சொல்லப்பா. அந்த டீச்சர்... மிஸ் மெடோஸ்... அவங்களைத் தற்செயலா நேத்து ராத்திரி கடையில சந்திச்சேன். அப்பப்பா! என்ன ஒரு convincing power! அந்தச் சின்ன 5 அடி உடம்புக்குள்ள! நான் உன்னை கூட்டிட்டு போறேன்னு சொல்ற வரைக்கும் என்னை அங்கிருந்து நகல விடல்லையே!"

*****


இரண்டு மணி நேரம் கழித்து கீதாவும் அருணும் வொர்த்தாம்டன் நகரத்தின் சனிக்கிழமை சந்தைக்கு வந்து சேர்ந்தார்கள். சந்தை அப்பொழுதுதான் கூட்டம் கூட ஆரம்பித்திருந்தது. அங்கிருந்தவர்களை விசாரித்து Pueblo Del Indegna கிராம மக்கள் கடை வைக்கும் இடத்திற்கு வந்தனர். சலசலவென்று எங்கும் பேச்சுச் சத்தம். ஜேஜே என்று மக்கள் கூட்டம். நேரம் ஆகிக்கொண்டே போனது. ஹில்லரி வந்தபாடில்லை. அது மட்டும் அல்லாமல், அவள் கிராமத்தவர் யாரும் அங்கு தென்படவில்லை. கீதா, மீண்டும் மீண்டும் அங்குள்ள மற்ற கடைக்காரர்களிடம் விசாரித்தார், தான் சரியான இடத்தில் தான் காத்திருக்கிறோமோ என்று.

"சாரி அம்மா. நான் உங்களுக்கு கஷ்டம் கொடுத்துட்டேன்," என்று அருண் வருத்தப்பட்டான். தீர விசாரிக்காமல் பட்டென்று முடிவெடுத்து அவ்வளவு தூரம் வந்துவிட்டார். ஹில்லரியிடம் ஒரு செல்ஃபோன் கூட இல்லாதபோது அந்தக் கூட்டத்தில் எப்படிக் கண்டு முடிக்க முடியும்? எல்லாம் எளிதாக இருக்கும் என்று நினைத்திருந்தார். நேரம் ஆக ஆக வெய்யில் வேறு அதிகமானது. கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. சந்தை முடியும் நேரம் வந்தது ஹில்லரியோ, Pueblo Del Indegna கிராமவாசிகளோ அங்கு தென்படவில்லை.

அருணுக்கு ஏமாற்றம் தாங்கவில்லை. அம்மாவையும் சிரமப் படுத்திவிட்டோமே என்று சோகத்தில் ஆழ்ந்தான். "வா அருண், போகலாம்" என்று அவனை அழைத்துக்கொண்டு கீதா கிளம்பினார். வெய்யிலில் அவ்வளவு நேரம் நின்றதில் தலை வலித்தது.

*****


மறுநாள் ஞாயிற்றுக்கிழமை. முந்தைய தின அலைச்சலில் நன்றாகத் தூங்கிப்போனார்கள் அருணும், கீதாவும். அலாரம் அடிக்கச் சட்டென்று கீதா எழுந்தார். ரமேஷ் எங்கிருக்கிறார் என்று பார்த்தார். அவர் டிப்டாப்பாக டிரஸ் செய்துகொண்டு, அறையில் கண்ணாடிமுன் நின்று தலை வாரிக்கொண்டிருந்தார்.

"குட் மார்னிங், கீதா. இன்னும் ஒரு மணி நேரத்துல நாம நம்ம ஸ்டீவனுடைய கல்யாணத்துக்குப் போகணும். மறந்துட்டயா? போகலைன்னா, அவங்க அப்பா, நம்ம ஜட்ஜ் குரோவ் (Judge Grove) நம்மளை ஒரு வழி பண்ணிடுவாரு. வா எழுந்திரு. நான் அருணை எழுப்பி, கிளப்பிக்கிறேன்" என்றார்.

*****


திருமணம் எர்த்தாம்டன் நகரில் இருந்த ஒரு தேவாலயத்தில் நடந்தது. முந்தைய தினத்தின் ஏமாற்றம் நீங்குவதற்கு அந்த மகிழ்ச்சிகரமான கல்யாண நிகழ்ச்சி உதவும் என்று தோன்றியது. ஜட்ஜ் குரோவ் வந்திருந்த அனைவரையும் உபசரித்தார். அவர் மகன் ஸ்டீவன் குரோவ், ஒரு ராஜாபோல, அழகாக தனது வருங்கால மனைவிக்காகக் காத்திருந்தான்.

அருண், கீதா, மற்றும் ரமேஷ் தமது இருக்கையில் போய் அமர்ந்தனர். கல்யாணப் பெண் உள்ளே வரும் நேரத்தில், அருணுக்கு தன் வரிசையின் பின்னால் இருந்து ஒரு விதமான பரிச்சயமான வாசம் ஒன்று வருவதை உணர்ந்தான். கொஞ்சம் ஆழமாக மூச்சை இழுத்தான். அந்த வாசம் என்னவென்று தெரிந்தது. அது Sneeze Snatcher இலைகளின் வாசம். மெதுவாக ஓரக்கண்ணால் தலையை திரும்பிப் பார்த்தான். அந்த மூலிகை ஒரு சூட் போட்ட ஆளின் கையில் இருப்பது தெரிந்தது. அந்த ஆள் யாராக இருக்கக்கூடும் என்று தலையை உயர்த்திப் பார்த்தான். அது ஹோர்ஷியானா நிறுவனத்தின் அதிபர், டேவிட் ராப்ளே! அவர் ஒரு வில்லனைப்போல கையில் இருந்த இலைகளை முகர்ந்து அருணைப் பார்த்து புன்னகைத்தார்.

(தொடரும்)

கதை: ராஜேஷ்
படம்: Anh Tran

© TamilOnline.com