முன்கதை: ஷாலினியின் சக ஆராய்ச்சியாளரான என்ரிக்கே காஸ்ட்ரோ தன் செயற்கை மரபணு (Synthetic DNA) தொழில்நுட்ப நிறுவனம் பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி அவருக்கு சூர்யாவை அறிமுகம் செய்தாள். என்ரிக்கே மரபணுவின் ரெட்டைச் சுருள் வடிவத்தைப் பற்றியும், மரபணுத் தொடர்களைப் (chromosomes) பற்றியும், எப்படி இனப்பெருக்கத்திற்காக மரபணுத்தொடர்கள் பாதி, பாதியாகப் பிரிந்து தந்தை, தாயின் பாதிகள் சேர்ந்து குழந்தையின் மரபணுத் தொடர்கள் உருவாகின்றன என்றும் விளக்கினார். மேற்கொண்டு பார்ப்போம்!
*****
இனப்பெருக்கத்திற்காக மரபணுத் தொடர்கள் பிரிந்து சேர்வதைப் பற்றி என்ரிக்கே கூறியதைக் கேட்ட சூர்யா, "இதைப்பத்தி நானே படிச்சிருக்கேன், ஒளிக்காட்சி விளக்கமும் பாத்திருக்கேன். அதனால எனக்கு ஓரளவு புரியுது. ஆனா, இதெல்லாம் இயற்கையா நடக்கிறதுதானே? ஆனா, உங்கப் பிரச்சனை எதோ செயற்கையா உற்பத்தி ஆகற மரபணு பத்தின்னு ஷாலினி சொன்னாளே? அதென்ன?" என்று கேட்டார்.
என்ரிக்கே முறுவலித்தார். "பட் அஃப்கோர்ஸ் சூர்யா! நிச்சயமா சொல்றேன். அதுக்கு மிக முக்கிய அடிப்படையான கோட்பாடுகளைத்தான் முதல்ல சொன்னேன். அடுத்து, இந்த மரபணுக்களை மாத்தறத்துக்கான க்ரிஸ்பர் (CRISPR) அப்படிங்கற நுட்பத்தைப்பத்தி விளக்கறேன்."
கிரண் மீண்டும் களுக்கென்று சிரித்தான். என்ரிக்கே, ஷாலினி இருவரும் அவனைப் பார்த்து முறைக்கவே கிரண் கையைத் தூக்கிக் காட்டி மன்னிப்புக் கோரினான். "ஸாரி, ஸாரி அகெய்ன்! இப்பதான், நீங்க வரதுக்கு முன்னாடி க்ரிஸ்பர்னா எங்க வீட்டு ஃப்ரிட்ஜ்ல இருக்கற ஒரு ட்ராயர்னு சூர்யாகிட்ட சொல்லிக்கிட்டிருந்தேன், அது திரும்ப ஞாபகம் வந்துடுச்சு, அதான்."
அவன் விளக்கத்தைக் கேட்ட என்ரிக்கே, ஷாலினி இருவரும் சிரித்துவிட்டனர்.
சூர்யாவும் முறுவலுடன், "யெஸ் என்ரிக்கே, நிஜமாவே சொன்னான். சரி, நீங்க மேல விளக்குங்க."
என்ரிக்கே தொடர்ந்தார். "கிரண், சரியான கோமாளியப்பா நீ! மேல பார்ப்போமா. க்ரிஸ்பர் நுட்பம் மிக நுணுக்கமாக மரபணுத் துண்டுகளை வெட்டி ஒட்டி, மாற்றப் பயன்படுத்தப் படுகிறது"
சூர்யா வினாவினார்: "என்ரிக்கே, மரபணுத் துண்டுகளை எதற்காக வெட்டி ஒட்ட வேண்டும்? கொஞ்சம் விளக்குங்களேன்?"
கிரண் எதோ சொல்ல வாயைத் திறக்கவே, சூர்யா கிரண் பக்கம் சுட்டு விரலை ஆட்டி எச்சரித்தார். "கிரண் உடனே, ஜீன்ஸ் தைக்கறதான்னு ஒரு அசட்டு ஜோக் அடிக்க வேண்டாம்" என்று கூறினார். கிரணும் உடனே விளையாட்டாக வாயைப் பொத்திக் கொண்டு தலையாட்டவே அனைவரும் சிரித்தனர்.
என்ரிக்கே தொடர்ந்தார். "மரபணுக்களை மாத்தறத்துக்கு பலப்பல காரணங்கள் இருக்கு. அதெல்லாம் விவரிக்கறத்துக்கு முன்னால நீங்க ஒண்ணு மனசுல வச்சுக்கணும். மரபணு மாற்றங்கறது க்ரிஸ்பர் மூலமாத்தான் செய்யணுங்கறது ஒண்ணும் இல்லை. காலங்காலமா இயற்கையாவே நடந்துட்டு வர்றதுதான் அது!"
சூர்யா தலையாட்டினார். "இயற்கையா நடக்கறதுதானே உயிரினங்களின் பரிணாம வளர்ச்சிக்கே (evolution) காரணம், இல்லையா? அதைத்தானே டார்வின் விளக்கினார்."
என்ரிக்கே சிலாகித்தார். "எக்ஸாக்ட்லி சூர்யா, பாயிண்ட்ட கச்சிதமாப் பிடிச்சிட்டீங்க! பில்லியன் கணக்கான வருடங்களா, மரபணுக்களில் இயற்கையா தானாகவே அப்பப்போ ஏற்படற சிறு பிறழ்வுகள் (mutations), சில ஒண்ணா சேர்ந்து அமையறப்போ ஒரு உயிரினம் வேறு உயிரனமா (species) மாறுது. அந்த உயிரினம் இருக்கற சுற்றுச் சூழல் சாதகமானா அந்தப் புது உயிரினமும் தழைத்து வளரலாம். இல்லைன்னா அந்த உயிரினமே அழிஞ்சுடுது. அதைத்தான் டார்வின் உயிரின பரிணாம வளர்ச்சிக் கோட்பாடாக விளக்கினார்."
ஷாலினி இடைபுகுந்தாள். "என்ரிக்கே, அது மட்டும் போதாது இல்லையா?! மரபணுத் தொடர்களின் சேர்க்கையால எப்படி ஒரே உயிரினச் சந்ததிகளின் உடலம்சங்களும் குணாதிசயங்களும் மாறுபடுதுன்னு மெண்டல் விளக்கினாரே அதையும் சேர்த்து புரிஞ்சுகிட்டாத்தானே மரபணு மாற்றம் இன்னும் நல்லா முழுமையா விளங்கும்?"
என்ரிக்கே கைதட்டினார். "மருத்துவ ஆராய்ச்சியாளரா, கொக்கா? சரியா எடுத்துக் கொடுத்தீங்க ஷாலினி. அதுதான் மரபணு மாற்றத்தின் மூலம் உயிரினப் பரிணாமம் உண்டாக மற்றொரு வழி. எந்த உயிரினத்திலும் தாயிடமிருந்தும் தந்தையிடமிருந்தும் பெறும் மரபணுத் தொடர்கள் சேரும்போது பிறக்கும் புது உயிரின் அம்சங்கள் எப்படித் தீர்மானிக்கப் படுகின்றன என்பதைத்தான் மெண்டல் மரபியல் (genetics) கோட்பாடு விளக்குகிறது. அதை வச்சுத்தான் இயற்கையில உயிரின மருவல் மூலம் தானே பரவற மரபணு மாற்றங்கள் மட்டுமில்லாம, நம் மூதாதையர்கள் தேர்ச்சி இனப்பெருக்கத்தின் (selective breeding) மூலம் மரபணு மாற்றங்களை தங்களுக்குத் தேவையானபடி பரவ வச்சாங்க."
கிரண் இன்னும் புரியாமல் குழம்பினான். "பரவ வச்சாங்களா? எப்படி அது?"
என்ரிக்கே ஷாலினியைக் காட்டினார். "இவங்கதானே அதை எடுத்துக் குடுத்தாங்க, அவங்க விளக்கினா நல்லா இருக்கும் சொல்லுங்க ஷாலினி."
ஷாலினி உற்சாகத்துடன் விளக்கினாள். "என்ன கிரண், ஹைஸ்கூல்ல உயிரியல் வகுப்புல மெண்டல் பரம்பரைப் பண்பு (inheritance) விதிகளைப் பத்தி படிச்சதை மறந்துட்டே போலிருக்கு?! ஆதிக்க மரபணு (dominant gene), அடக்க மரபணுன்னு (recessive gene) நினைவில்லை? தந்தையிடமிருந்து பழுப்புக் கண்ணுக்கான மரபணுவும் தாயிடமிருந்து நீலக்கண்ணுக்கான மரபணுவும் சேர்ந்தா பழுப்புக்கண்தான் குழந்தைக்கு இருக்கும், ஏன்னா அதுதான் ஆதிக்க மரபணு. அது மாதிரி மரபணுக்களை வகை வகையா வகுத்தா, எவைகள் சேரும்னு கணிச்சா, பிறக்கும் புது உயிரோட அம்சங்கள் எப்படி இருக்கும்னு கணிக்கலாம்"
கிரண் மேலும் வினவினான். "அது இப்போ கொஞ்சம் ஞாபகம் வருது. ஆனா நம் முன்னோர்கள் பரவ வச்சாங்கன்னு சொன்னீங்களே அது எப்படி?"
என்ரிக்கே மீண்டும் ஷாலினியிடம் பவ்யமாகக் குனிந்து கை காட்டி, தொடருமாறு சைகை செய்தார். ஷாலினி குனிந்து ஏற்றுக்கொண்டு முறுவலுடன் தொடர்ந்தாள். "அதுக்கு ஒரு உதாரணம் சொல்லணும்னா ஓநாய்களின் ஒரு பரிணாமம், நாய்களாக வளர்க்கப்பட்டதைச் சொல்லலாம். ஒநாய்கள் இயற்கையில் மனிதர்கள் இருக்கும் இடத்தை அணுகத் தயங்கும், அல்லது தனி மனிதன் இருந்தால் பாய்ந்து தாக்கும். அந்த ரெண்டும் இல்லாம நாய்கள் மனிதர்களோட அன்பா இழைஞ்சு பழகுது. அந்த மாதிரி உயிரினத்தை வளர்த்தது மனிதர்கள்தான்னு சொல்றாங்க."
கிரண் தூண்டினான். "அப்படியா ஷாலு! சுவாரஸ்யந்தான். மேல சொல்லு."
ஷாலினி தொடர்ந்தாள். "அதாவது எதோ ஒரு சில ஓநாய்கள் மனிதர்களிடம் அண்டி அவங்க தூக்கிப்போட்ட இறைச்சியை சாப்பிட்டு அவங்கள் கூட்டத்தோட இருந்திருக்கும். அந்த மாதிரி ஓநாய்கள் போட்ட குட்டிகளில் சாதுவாக இருக்கற குட்டிகளை மட்டும் எடுத்து வளர்த்து அவைகளின் இனத்தைப் பெருக்கியிருக்கணும். மனிதர்களை அண்டாத குட்டிகளை ஓட்டியோ இல்ல கொன்னு போட்டோ, இனம் தொடராம செஞ்சிருக்கணும். அதன்மூலம் நாய்கள் ஒரு தனி இனமா ஓநாய் இனத்திலிருந்து பிரிக்கப்பட்டிருக்கணும். மேலும் தங்கள் தேவைக்கேத்த படி, இயற்கை மரபணு மாற்றத்தால் மருவிய பல நாய் வகைகளை மனிதர்கள் தேர்ச்சி இனப்பெருக்கத்தால வளர்ச்சியடையச் செஞ்சிருக்காங்க."
சூர்யா குறுக்கிட்டார். "இப்ப புரியுது. ஆடுமாடுகளை வளர்க்க ஒருவித நாய், வீட்டுல பராமரிக்க ஒரு குட்டி வகை நாய் இப்படி மரபு வகைகள வளர்த்தாங்க போலிருக்கு?!"
என்ரிக்கே மீண்டும் கைதட்டினார். "கரெக்ட் சூர்யா! சரியாப் பிடிச்சீங்க. இப்பப் பாருங்க. இயற்கையாத் தானே பரவும் மரபணு மாற்றங்கள் ஒரு பக்கம். இப்படி மனித இனத்தின் முயற்சியால் தேர்ச்சி இனப்பெருக்கத்தின் பலனாகப் பரவும் மரபணு மாற்றங்கள் மறுபக்கம். ஆனா, அதுல ஒரு முக்கியமான விஷயம் என்னன்னா, ரெண்டுமே செயற்கையாக க்ரிஸ்பர் மூலமா செய்யற மாற்றங்களோ, செயற்கையாக உருவாக்கப்பட்ட மரபணுக்களோ அல்ல. அது வேறு விதம்!"
சூர்யா ஆர்வத்துடன் தூண்டினார். "இப்பதான் விஷயம் இன்னும் சூடு பிடிக்குது! செயற்கையாக எப்படி மரபணு மாற்றங்கள் செய்யப்படுது? அதுதானே உங்க ஆராய்ச்சித் துறை? அதுதான் எங்களுக்கு ரொம்ப முக்கியமாப் புரியணும். அதை விளக்குங்க!"
என்ரிக்கே அடுத்து செயற்கை மரபணு மாற்றங்களைப் பற்றி விவரித்தார். வரும் பகுதிகளில் மேற்கொண்டு காண்போம்.
(தொடரும்)
கதிரவன் எழில்மன்னன் |