எழுத்தாளர், கட்டுரையாளர், திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர், சமூக ஆர்வலர், அரசியல்வாதி என்று பன்முகத் திறமைகொண்டு விளங்கிய முக்தா சீனிவாசன் (89) சென்னையில் காலமானார். இவர், 1929 அக்டோபர் 31ம் நாளன்று தஞ்சாவூரில், வெங்கடாச்சாரியார் - செல்லம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இளவயதிலேயே பொதுவுடைமைக் கருத்துக்களில் ஆர்வம் கொண்டு அக்கட்சியில் இணைந்து பணியாற்றினார். பத்திரிகையாளர்களிடமும், எழுத்தாளர்களிடமும் நெருங்கிய நட்புக் கொண்டிருந்த சீனிவாசன், சிறுகதை, நாவல், கட்டுரைகளைத் தொடர்ந்து இதழ்களில் எழுதி வந்தார். பின்னர் திரைப்படத்துறையில் ஆர்வங்கொண்டு ராம்நாத், எஸ். பாலசந்தர் உள்ளிட்டோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார்.
'முதலாளி' இவரது முதல் திரைப்படம். அப்படத்திற்குத் தேசியவிருது கிடைத்தது. தனது சகோதரருடன் இணைந்து 'முக்தா ஃப்லிம்ஸ்' நிறுவனத்தைத் துவக்கினார். 'நாலு வேலி நிலம்', 'தாமரைக் குளம்', 'பனித்திரை', 'இதயத்தில் நீ', 'பூஜைக்கு வந்த மலர்', 'தேன்மழை' எனப் பல வெற்றிப் படங்களை இயக்கியிருக்கிறார். ஜெயலலிதாவின் நூறாவது படமான சூரியகாந்தியை இயக்கியவரும் இவரே! இவரது இயக்கத்தில் வெளியான 'அந்தமான் காதலி', 'கீழ்வானம் சிவக்கும்', 'பரீட்சைக்கு நேரமாச்சு' போன்ற படங்கள் சிவாஜிக்கு வெற்றிப் படங்களாக அமைந்தன. ரஜினிகாந்தை வைத்து இவர் இயக்கிய பொல்லாதவனும் வெற்றிபெற்றது. கமல் நடித்து வெற்றிபெற்ற 'நாயகன்' இவர் தயாரித்ததே!
இசை, இலக்கியம், அரசியல், நாடகம், ஆன்மீகத் துறையின் சாதனையளார்களைப் பற்றி இவர் எழுதிய 'இணையற்ற சாதனையாளர்கள்' நூல் பதினைந்திற்கும் மேற்பட்ட தொகுதிகளாக வெளிவந்துள்ளது. 'மானுடம் கண்ட மகாஞானிகள்', 'தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களின் வரலாறு', 'கலைஞர்களோடு நான்', 'கதாசிரியர்களோடு நான்', 'அறிஞர்களோடு நான்' போன்ற நூல்கள் அக்காலத் திரையுலகச் சரித்திரைத்தைச் சொல்வன. சிறுகதைகளும் நிறைய எழுதியிருக்கிறார். 'இருபதாம் நூற்றாண்டின் கதைகள்' என்ற தலைப்பில் அவை தொகுக்கப்பட்டுள்ளன. தமிழ்த் திரைத்துறை குறித்து இவர் எழுதியிருக்கும் 'தமிழ் திரைப்பட வரலாறு' தொடர் முக்கியமானது. ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கும் முக்தா சீனிவாசன், 350க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியிருக்கிறார். தனது நூல்கள் சிலவற்றைத் தனது திருக்குடந்தை பதிப்பகம் மூலம் வெளியிட்டார்.
ஒவ்வோர் ஆண்டும் சென்னை புத்தகக் காட்சியில் பங்கேற்பதை வழக்கமாக வைத்திருந்தார். பல்லாயிரக் கணக்கான நூல்களைக் கொண்ட நூலகம் இவரது வீட்டில் உள்ளது. இந்திய தேசிய காங்கிரஸிலும், தமிழ் மாநில காங்கிரஸிலும் முக்கியப் பொறுப்புகள் வகித்திருக்கிறார். சமீப காலமாக உடல் நலிவுற்றிருந்த இவர் மாரடைப்பால் காலமானார். இவருக்கு பிரேமா என்ற மனைவியும், முக்தா ரவி, முக்தா சுந்தர் என்ற மகன்களும், மாயா சீனிவாசன் என்ற மகளும் உள்ளனர். |