அறிவொளி
பிரபல பட்டிமன்றப் பேச்சாளரும், எழுத்தாளரும், தமிழறிஞரும் ஆன்மீகவாதியுமான அறிவொளி (80) மே 8ம் நாளன்று காலமானார். இவர், நாகப்பட்டினம் அருகே உள்ள சிக்கலில் 1936 ஜனவரி 21ம் நாளன்று பிறந்தவர். கல்லூரிப்படிப்பை முடித்தபின் சிலகாலம் ஆசிரியப் பணி செய்தார். பின்னர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார். இலக்கிய ஆர்வமிக்க இவர் பேச்சாளராகவும், சொற்பொழிவாளராகவும் தன்னை வளர்த்துக் கொண்டார். பட்டிமன்றத்தில் 'வழக்காடு மன்றம்' என்பதை அறிமுகம் செய்தவர் இவர்தான். ஒருமுறை கேட்டாலே அதனை நினைவில் வைத்துக் கொள்ளுமளவுக்கு ஞாபகசக்தி மிக்கவர். வித்தியாசமான பல சிந்தனைகளை நகைச்சுவையோடு பேசிச் சுவைஞர்களை சிரிக்க மட்டும் அல்லாமல் சிந்திக்கவும் வைத்தவர்.

அறிவொளி பட்டிமன்றப் பேச்சாளராக மட்டுமல்லாமல், நடுவராகவும் இலங்கியவர். இவரது பட்டிமன்றங்களிலும் உரைகளிலும் வெற்று வார்த்தைக்களுக்கோ அபத்த நகைச்சுவைகளுக்கோ இடமிராது. சீரிய சிந்தனைகளை நகைச்சுவையோடு சொல்லிச் சிந்திக்க வைப்பதில் இவர் மிகத் தேர்ந்தவர். “எதுவெல்லாம் எதுவாக இருக்கிறதோ அதுவெல்லாம் அதுவாக இருப்பது இல்லை. அது, அதன் குற்றமுமில்லை” என்று சொல்லி, அதன் விளக்கத்தை இவர் சொல்லச்சொல்லக் கேட்டுக் கொண்டே இருக்கலாம். “ஒன்றாக இருப்பதெல்லாம் ஒன்றல்ல” என்று சொல்லி அதன் உண்மையை இவர் விளக்கும்போது எழும் கரகோஷம் அடங்க வெகு நேரமாகும். தனது தமிழ்ப் பணிக்காக 'ஆய்வுரைத் திலகம்', 'கபிலவாணர்' உள்ளிட்ட பல்வேறு விருதுகளும் பட்டங்களும் பெற்றவர்.

ஆயிரக்கணக்கான மேடைகளில் பேசி அறிவுத்தமிழ் பரப்பிய அறிவொளி, திரைப்படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் தலை காட்டியதுண்டு. இலக்கியம், ஆன்மீகம் சார்ந்த வகைமைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். சித்த வைத்தியம் மற்றும் அக்குபஞ்சா் மருத்துவத்தில் தேர்ந்தவர். அக்குபஞ்சர் துறையில் டென்மார்க்கில் உள்ள கோபன்ஹேகன் பல்கலைகழகத்தில் ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றார். ஜோதிடமும் நன்கு அறிந்தவர். நாடி வந்தவர்களுக்கு இயற்கை மருந்துகள் மூலம் தீர்வளித்து வந்தார். நாடெங்கிலும் பல்வேறு ஆலயங்களுக்குச் சென்று அவற்றின் வரலாற்றை ஆய்ந்து, 'திருக்கோயில் வரிசைகள்' என்ற தலைப்பில் நூலாகத் தந்திருக்கிறார். பல்துறைச் சாதனையாளரான இவர், திருச்சியில் காலாமானார். இவருக்கு மனைவியும், இரண்டு மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனா.

© TamilOnline.com