பரூர் அனந்தராமன்
கர்நாடக இசையுலகின் மூத்த இசைக்கலைஞரும், புகழ்பெற்ற பல இசைக் கலைஞர்களுக்கு குருவாகவும் விளங்கிய பரூர் எம்.எஸ். அனந்தராமன் (88) சென்னையில் காலமானார். புகழ்பெற்ற இசைமேதை பரூர் சுந்தரம் ஐயரின் மகனான அனந்தராமன், இளவயதிலேயே இசைத் துறைக்கு வந்துவிட்டார். சகோதரர் எம்.எஸ். கோபாலகிருஷ்ணனுடனும், தந்தை சுந்தரம் ஐயருடனும் இவர் வாசித்த கச்சேரிகள் அக்காலத்தில் மிகப்பிரபலம். கர்நாடக சங்கீதம், ஹிந்துஸ்தானி என இரண்டிலும் மிகத் தேர்ந்தவர். சிறந்த வயலின் மேதை. அனந்தராமன் அகில இந்திய வானொலியில் நிலைய வித்வானாகப் பல ஆண்டுக் காலம் பணியாற்றினார். தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 25 ஆண்டுகளுக்கு மேலாக வயலின் பேராசிரியராகப் பணியாற்றிய பெருமைக்குரியவர். இளம் இசைக்கலைஞர்கள் பலரை ஊக்குவித்தவர். தந்தை மற்றும் சகோதரருடன் இளவயதில் கச்சேரி செய்தது போல், பிற்காலத்தில் இவர் தன் மகன்கள் எம்.ஏ. சுந்தரேஸ்வரன், எம்.ஏ. கிருஷ்ணஸ்வாமி ஆகியோருடன் இணைந்து கச்சேரி செய்திருக்கிறார். புகழ்பெற்ற இசைக் கலைஞரும், சென்னை ராணி மேரிக் கல்லூரியின் இசைத்துறைத் தலைவருமான எம்.ஏ. பாகீரதி இவரது மகள். கலைமாமணி விருது, சங்கீத நாடக அகாதமி விருது உள்படப் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். இவரிடம் இசை பயின்றவர்கள் அமெரிக்கா உள்பட உலகெங்கிலும் பரவியுள்ளனர்.



© TamilOnline.com