பாலகுமாரன்
தமிழின் முக்கிய எழுத்தாளர்களுள் ஒருவரான பாலகுமாரன் (71) சென்னையில் காலமானார். தஞ்சாவூரை அடுத்துள்ள பழமார்நேரி கிராமத்தில் 1946 ஜூலை 5ம் தேதியன்று வைத்தியநாதன்-சுலோசனா தம்பதியினருக்கு மகவாகப் பிறந்தார். தாயின்மூலம் இலக்கிய அறிமுகம் ஏற்பட்டது. நிறைய நூல்களைத் தேடித்தேடி வாசிக்க, எழுத்து வசப்பட்டது, பள்ளி இறுதி வகுப்பு தேர்ச்சி பெற்றதும் டாஃபே நிறுவனத்தில் பணியாற்றத் துவங்கினார். கணையாழி உள்ளிட்ட இதழ்களில் கவிஞராக அறிமுகமானார். பல்வேறு இலக்கியக் கருத்தரங்குகளிலும் கலந்துகொண்டார். பின்னர் எழுத்தே தனது பாதை என்பதைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு, பிரபல இதழ்களில் கதை, சிறுகதைகளை எழுத ஆரம்பித்தார். வாழ்க்கை அனுபவங்களும், அவதானங்களும், தனிப்பட்ட பார்வைகளும், சிந்தனைகளும் கொண்ட இவரது எழுத்திற்கு மத்தியதர வாசகர்களிடம் வரவேற்பு அதிகம். குறிப்பாக, பெண்கள் இவரது எழுத்தால் அதிகம் ஈர்க்கப்பட்டனர். மெர்க்குரிப் பூக்கள், தாயுமானவன், இரும்பு குதிரைகள், கரையோர முதலைகள், பச்சைவயல் மனது, பந்தயப் புறா, யானை வேட்டை, பவழமல்லி, அகல்யா, பயணிகள் கவனிக்கவும், திருப்பூந்துருத்தி, அப்பம் வடை தயிர்சாதம், காசும் பிறப்பும், மௌனமே காதலாக, மேய்ச்சல் மைதானம் என இருநூறுக்கும் மேற்பட்ட புதினங்களை எழுதியிருக்கிறார். இவர் எழுதிய 'உடையார்' புதினம் சிறந்த வரவேற்பைப் பெற்றதாகும். 150க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியிருக்கிறார். ஆன்மிகம் சார்ந்த இவரது நாவல்களுக்கும் வாழ்க்கை அனுபவக் கட்டுரைகளுக்கும் எப்போதும் வாசகர்களிடம் வரவேற்பு இருந்தது. கே. பாலசந்தர், கே. பாக்யராஜ் உள்ளிட்டோரிடம் திரைப்பட நுணுக்கம் பயின்றவர். 'இது நம்ம ஆளு' என்பது இவர் இயக்கிய படமாகும். நாயகன், குணா, ஜெண்டில்மேன், காதல், பாட்ஷா, ஜீன்ஸ், புதுப்பேட்டை எனப் பல வெற்றிப் படங்களுக்கு வசனம் எழுதியவர். தனது படைப்புகளால் வாசகர்களைச் சிந்திக்க வைத்ததுடன், பலரது வாழ்வில் மிகச்சிறந்த மாற்றத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்தியவர். எழுத்துப் பணிக்காக இலக்கியச் சிந்தனை விருது, கலைமாமணி விருது, தமிழக அரசின் விருது உள்படப் பல விருதுகளைப் பெற்றவர். சமீப காலமாக சர்க்கரை நோயாலும், மூச்சுத்திணறலாலும் அவதிப்பட்டு வந்தார். மே 15, 2018 அன்று காலமானார்.

அவருக்கு இரு மனைவியர், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

© TamilOnline.com