ஸ்ரீ கோனியம்மன் ஆலயம், கோயம்புத்தூர்
கோவையில் பல புகழ்பெற்ற ஆலயங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானது கோனியம்மன் ஆலயம். கோட்டை ஈஸ்வரன் கோவில் - பேட்டை ஈஸ்வரன் கோவில் என்னும் இரு சிவாலயங்களுக்கும் நடுவில் அமைந்துள்ளது இவ்வாலயம். கோவன் என்ற தலைவன் காடு திருத்தி நாடு உண்டாக்கியதால் அவன் நினைவைப் போற்றும் வகையில் கோவன்புத்தூர் என்று பெயர் பெற்று பின்னர் கோயம்புத்தூர் என மருவியதாகத் தகவல்கள் சொல்கின்றன. இவ்வாலயம் 13ம் நூற்றாண்டில் உருவானது. இருளர்களால் இங்கு 600 ஆண்டுகளுக்கு முன் ஆலயம் கட்டப்பட்டிருக்கிறது. கோனியம்மன் என்றால் அரசர்களால் வழிபடப்பட்ட தெய்வம் என்றும், தெய்வங்களுக்கெல்லாம் அரசி என்றும் சொல்லப்படுகிறது. 'கோன்' என்றால் அரசு என்பது பொருள். அது போல 'கோனி' என்றால் அரசி அல்லது அரசிக்கு அரசி என்பது பொருளாம். பல ஆண்டுகளுக்குப் பின் இளங்கோசர் கொங்கு நாட்டினை ஆண்டபோது சேரர் படை எடுத்தால் தடுக்க ஒரு மண் கோட்டையை கோவன்புத்தூரில் கோசர்கள் கட்டினார்கள். அதற்குக் காப்புத் தெய்வமாகவும், அதன் பெயர் விளங்கும் வகையிலும் ஒரு ஆலயம் எழுப்பி அந்த அம்மனுக்கு 'கோனியம்மன்' என்று பெயர் சூட்டி வழிபட்டு வணங்கினர். அதுவே இன்றைய கோவை மாநகரின் மையமாக விளங்கும் 'கோனியம்மன்' ஆலயமாகும்.

கோசர் ஆட்சிக்குப் பின் கொங்கு நாட்டைக் கைப்பற்றிய மைசூர் அரசர்களில் ஒருவர் கோவிலில் பூஜை இல்லாமல் இருப்பதைக் கண்டு, மகிஷாசுரமர்த்தினியைப் போல் கற்சிலையை உருவாக்கி ஆகமவிதிப்படி சிலையை கோயில் மூலஸ்தானத்தில் நிர்மாணித்தார். இரு பெரும் தெப்பங்குளங்கள் வெட்டப்பட்டன. தல விருட்சம் வன்னிமரம். மான்யமாக நிலங்கள் அளித்து தேர்த்திருவிழா, பூஜைகள் தவறாமல் நடக்க அவர் ஏற்பாடு செய்தார். 600 ஆண்டுகளுக்கு முன் திருப்பேரூர் வந்த அருணகிரிநாத சுவாமிகள், கோட்டை ஈஸ்வரன் முருகப் பெருமானைப் பாடியுள்ளார்.

கோவை மாநகர் மேவிய
வீர வேலயி லாயுத
கோதை யானையி னோடமர்
..... பெருமாளே.

என்று கோயம்புத்தூரை 'கோவை' என்று திருப்புகழில் குறித்துள்ளார்.

கோயிலுக்கு ஏழடி உயர ராஜகோபுரம் உள்ளது. நுழைவாயிலில் பழைய அரசமரத்தடியில் விநாயகப் பெருமான் காட்சி அளிக்கிறார். மூலஸ்தானத்தின் கிழக்குப் பக்கம் விநாயகர் சன்னிதியும், மேற்குப் பக்கம் முருகன் சன்னிதியும் அமைந்துள்ளன. அம்மன் வடக்குப் பார்த்து எழுந்தருளியுள்ளார். வலது கைகள் நான்கிலும் கபாலம், சூலம், வாள், சங்கு இடது கைகளில் உடுக்கை, அக்னி ஏந்திக் காட்சி தருகிறாள். இடது செவியில் தோடும் வலது செவியில் குண்டலமும் அணிந்திருப்பதால் இந்த உருவ அமைப்பு அர்த்தநாரீஸ்வரையும், சிவ சக்தி ஐக்கியத்தையும் நினைவுறுத்துகிறது. அன்னை வீரசக்தியும் ஆவாள் என்பதை உணர்த்துகிறது. அம்மன் வலது பாதத்தை மடித்து பீடத்தின் மீது வைத்து, இடதுகாலைக் கீழே தொங்கவிட்டவாறு அமர்ந்த கோலம். காலடியில் அரக்கன் வாளுடன் கீழே விழுந்து கிடக்கிறான். அம்மன் கழுத்தில் ஆரம், சிரசில் மணிமகுடம் தரித்திருக்கிறாள். பக்தர்களிடம் கோபம் தணிந்து அருள் பார்வை வீசுகிறாள். ஆலயத்தின் பின்பகுதி ஆதி கோனியம்மன் சன்னதி, துர்க்கை, சப்தமாதர்கள், வீரபத்திரர், கருப்பர், முனீஸ்வரர் உள்ளனர். ஆதி கோனியம்மனுக்கு நாடு கவரும் மதவெறி கொண்டவர்கள் படையெடுப்பினால் அம்மன் சிலை துண்டிக்கப்பட்டு சிரசிற்கு மட்டும் நித்ய பூஜை நடக்கிறது.

திருமணம் நிச்சயம் செய்பவர்கள் கோனியம்மன் ஆலயத்திற்கு வந்து அம்மன் முன் உப்புக்கூடை மாற்றி திருமணத்தை நிச்சயம் செய்து கொள்கின்றனர். ஒரு கூடையில் உப்பை நிறைத்து அதன்மேல் வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம் வைத்து இரு வீட்டாரும் மாற்றிக் கொள்வதே உப்புக்கூடை மாற்றிக் கொள்வதாகும். அம்மன் சன்னதியில் இதைச் செய்வதால் இருபக்கத்தாரும் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவர் என்பது நம்பிக்கை.

இத்தலம் சிறந்த பிரார்த்தனைத் தலமாகவும் விளங்குகிறது. குழந்தைப் பேறு, வேலை, திருமணம், தொழில் முன்னேற்றம் போன்றவற்றிற்காக நேர்ந்து கொள்ளப்படும் பிரார்த்தனைகள் உடனடியாக நிறைவேறுவதாக மக்கள் கூறுகின்றனர். மாசி மாதம் பதினான்கு நாட்கள் தேர்த்திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தெப்பம், தீர்த்தவாரி, வசந்த உற்சவம் என்று விமரிசையாக விழா நடக்கிறது. அம்மன் தேரில் பவனி வருவது கண்கொள்ளாக் காட்சி.

ஈசனுக்குத் தனிச் சன்னிதி இல்லாததால், அம்மன் சன்னிதிமுன் யாகம் வளர்த்து, அக்னியைச் சிவனாக வரித்து வழிபாடு, பூஜைகள் நடக்கின்றன. தீர்த்த கலசத்தின் மேல் மாங்கல்யம் அணிவித்து பூஜை செய்யப்பட்டு பின்னர் அது அம்பாளுக்கு அணிவிக்கப்படுகிறது. சிவன் அக்னி வடிவில் அம்பிகையை மணப்பதாக ஐதீகம். இங்குள்ள முருகன் சன்னிதி மிகவும் சிறப்புடன் விளங்குகிறது. துர்க்கையையும், முருகனையும் வழிபடத் திருமண தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

சோழ, பாண்டிய, நாயக்க, மைசூர் மன்னர்கள் இவ்வாலயத்திற்குப் பல்வேறு திருப்பணிகளைச் செய்துள்ளனர். காலையில் மட்டும் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த அபிஷேகப் புனித நீர் நோய்தீர்க்கும் அருமருந்தாக விளங்குகிறது. சத்ரு சம்ஹாரத்துக்காகச் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.

சீதா துரைராஜ்,
சான் ஹோஸே, கலிஃபோர்னியா

© TamilOnline.com