மகான் ஸ்ரீ நாராயணகுரு
மனிதர்கள் மதத்தாலும், சாதியாலும் பிளவுபட்டு நின்ற காலத்தில் "மனிதர்கள் எல்லாரும் சகோதரர்களே! அவர்களுக்கு ஒரு சாதி, ஒரு மதம், ஒரு தெய்வம் போதும்" என்று அறைகூவி, தீண்டாமை பாகுபாட்டைப் போக்கப் பாடுபட்ட மகான் ஸ்ரீ நாராயணகுரு. இவர், 1856 ஆகஸ்டு 20ம் நாளன்று கேரளத்தில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த செம்பழந்தி என்னும் கிராமத்தில் பிறந்தார். தந்தை, மாடன் ஆசான். தாய், குட்டி அம்மாள்.

விவசாயக் குடும்பம். தந்தை விவசாயம் தவிர்த்து ராமாயண, மகாபாரதக் கதைகளை கிராம மக்களுக்குப் போதிப்பவராக இருந்தார். அதனால் ஆசான் என்று அழைக்கப்பட்டார். தந்தை வழி தனயனுக்கும் அந்த ஆர்வம் வந்தது. உள்ளூர்ப் பள்ளியில் பயின்ற இவர், ஓய்வு நேரத்தில் மருத்துவம், இலக்கியம் ஆகியவற்றைக் கற்றுத் தேர்ந்தார். இவருக்குப் பதினைந்து வயதாக இருக்கும்போது தந்தை காலமானார். நாராயணகுருவின் மாமா ஓர் ஆயுர்வேத மருத்துவர். அவர், இவரை ஆளாக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். மாமாவிடமிருந்து மருத்துவ நுணுக்கங்கள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்த நாராயணகுரு, ஆசான் ராமன் பிள்ளையிடம் சம்ஸ்கிருதம், வேதம், உபநிஷத்துக்களையும் பயின்றார்.

நாணு ஆசான்
அனைத்தையும் நன்கு கற்றுத் தேர்ந்த நாராயணகுரு பள்ளி ஒன்றில் சிலகாலம் ஆசிரியப்பணி ஆற்றினார். அதனால், மக்களால் 'நாணு ஆசான்' என்று போற்றப்பட்டார். துறவியாக வேண்டுமென்பது நாராயணகுருவின் விருப்பம். ஆனால், குடும்பத்தார் ஒப்புக் கொள்ளவில்லை. உறவினர் பெண் ஒருவருடன் திருமணம் நிகழ்ந்தது. ஆனால், அது நீண்டகாலம் நிலைக்கவில்லை. மனைவி திடீரெனக் காலமானார். அதன்பின் முறைப்படி தீக்ஷை பெற்றுத் துறவியானார் நாராயணகுரு. கேரளம், தமிழ்நாடு என்று பல இடங்களுக்கும் பயணித்தார். நண்பர் ஒருவர் மூலம் தமிழைக் கற்றுத் தேர்ந்தார். தமிழ் இலக்கணம், இலக்கியம், யோகம் போன்றவற்றையும் முழுமையாகப் பயின்று தேர்ந்தார்.

தீட்டு யாருக்கு?
ஒருமுறை நாராயணகுரு குளம் ஒன்றில் குளித்துக் கொண்டிருந்தார். அந்தக் குளம் உயர் சாதியினருக்கானது. நாராயணகுரு குளித்ததால் குளம் அசுத்தமாகிவிட்டதாகக் கருதிய சிலர் நாராயணகுருவைத் தாக்க ஓடிவந்தனர். அமைதியாக அவர்களை எதிர்கொண்ட குரு, "இப்போது என்ன நடந்து விட்டது? குளம் தீட்டுப்பட்டுவிட்டது என்று கருதித்தானே என்னை அடிக்க வருகிறீர்கள். என்னைத் தொட்டு அடிப்பதால் உங்களுக்கும் தீட்டு ஏற்பட்டு விடாதா?" என்று கேட்டார். அந்தக் கேள்விக்கு விடைகூற முடியாமல் திரும்பப் போயினர். இவ்வாறு தனது பேச்சாலும், செயலாலும், சிந்தனையாலும் மக்கள் மனதை உந்தித்தள்ளும் தன்மை நாராயணகுருவிடம் இருந்தது.

தமிழகம், கேரளம் எனப் பல இடங்களுக்கும் பயணித்த நாராயணகுரு இறுதியில் கன்யாகுமரியில் உள்ள மருத்துவாமலையைத் தனது இருப்பிடமாகக் கொண்டார். அங்கேயே சில ஆண்டுக்காலம் தங்கி, தியானத்தில் பெரும்பங்கு நேரத்தைச் செலவழித்தார். அங்கு தங்கியிருந்த காலத்தில் பெரும்பாலும் மௌனத்தவத்தில் ஆழ்ந்திருப்பதும், விழித்திருக்கும் போது யாரேனும் உணவு கொடுத்தால் உண்பதும் அவர் வழக்கமாக இருந்தது. மிகவும் பசியாக இருந்தால் அம்மலையில் உள்ள கிழங்குகளை உண்பார். சமயங்களில் பட்டினியாகவும் இருந்து விடுவார்.

வந்தது யார்?
ஒருநாள்.... காலைமுதல் நீண்ட தியானத்தில் ஆழ்ந்திருந்தார் நாராயணகுரு. அவர் கண் விழித்தபோது நள்ளிரவாகி விட்டிருந்தது. கடுமையான இருள் சூழ்ந்திருந்தது. அவருக்கோ நல்ல பசி. காட்டின் உள்ளே சென்று கிழங்குகளைத் தேடி உண்ணமுடியாத நிலை. சோர்வுற்று அவர் சிந்தித்துக் கொண்டிருக்கும்போது அங்கே ஒரு பிச்சைக்காரன் வந்தான். அவன் ஒரு தொழுநோயாளியும் கூட. "என்ன சாமி பசிக்குதா, இதோ, என்கிட்ட சாப்பாடு இருக்குது. ஆனா நீ இதையெல்லாம் சாப்பிடுவியா?" என்று கேட்டான்.

அதைக் கேட்ட நாராயணகுரு அவனிடம், "அப்பா, உணவு கொடுப்பவர் உயிர் கொடுப்பவர் அல்லவா? நீ எனக்கு அமிர்தத்தை அல்லவா கொண்டு வந்திருக்கிறாய். வா, இரண்டு பேரும் சேர்ந்தே சாப்பிடலாம்" என்று சொல்லி, எந்தவித வேறுபாடும் இல்லாமல் அவனுடன் அமர்ந்து அந்த உணவை உண்டார். பின் இருவரும் உறங்கச் சென்றனர்.

மறுநாள் நாராயணகுரு கண் விழித்துப் பார்த்தபோது அந்தத் தொழுநோயாளி அங்கே இல்லை. தன் மன உறுதியைப் பரிசோதிக்கவே அந்தத் தொழுநோயாளியை இறைவன் அனுப்பியிருக்கிறான் என்பதை உணர்ந்தார். இதுபோன்று மனதாலும், உடலாலும் தாழ்வுற்றுக் கிடப்பவர்களை முன்னேற்றுவதே தன் வாழ்நாள் லட்சியம் என்று உறுதிபூண்டார். மருத்துவாமலையில் தங்கியிருந்த காலத்தில், தானறிந்த ஆயுர்வேத, இயற்கை மருத்துவத்தைக் கொண்டு, தம்மை நாடி வந்த ஏழை, எளியவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்துக் காப்பாற்றினார். அப்பகுதி மக்களின் அன்பினைப் பெற்றார்.

மக்கள் சேவை
எட்டு ஆண்டுகள் மருத்துவாமலையிலேயே தங்கியிருந்த நாராயணகுரு பின் கேரளத்துக்குச் சென்றார். சாதிக்கொடுமை ஆங்காங்கே அதிகமாக இருந்ததும், தாழ்த்தப்பட்டவர்களுக்குக் கடவுள் வழிபாடு மறுக்கப்பட்டதும் அவருக்கு மிகுந்த மன வருத்தத்தைத் தந்தது. மக்களில் சிலர் தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தது அவரது உள்ளத்தை வாட்டியது. அவர்களை மீட்பதையே தனது லட்சியமாகக் கொண்டார். அதற்காக உழைக்கத் துவங்கினார்.

தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் இடங்களுக்குச் சென்று "இறைவன் முன் அனைவரும் சமமே. யாரும் உயர்வில்லை, தாழ்வில்லை" என்பதை அவர்களுக்கு எடுத்துரைத்தார். உயர்சாதியினருக்கு இணையாகக் கல்வி, பொருளாதாரம், ஆன்மீகம் என அனைத்திலும் தாழ்த்தப்பட்டவர்கள் மேலோங்கிவிட்டால் சமச்சீர் சமுதாயம் உருவாகிவிடும் என்பதை அம்மக்களுக்கு போதித்தார்.

நாராயணகுருவின் பேச்சு பலரைக் கவர்ந்தது. சிலர் அவரது சீடர்களாயினர். அவர்களது உதவியுடன் அருவிப்புரத்தில் ஒரு சிவன் கோவிலை நிர்மாணித்தார். அதற்கு ஒருசாராரிடமிருந்து எதிர்ப்புக் கிளம்பியபோதும் நாராயணகுரு லட்சியம் செய்யவில்லை. "இக்கோயில் எல்லா மக்களும் சாதி, மத, பேதமற்று வந்து வழிபடக் கூடிய கோயில்" என்ற அறிவிப்பை ஆலயத்தில் கல்வெட்டாக எழுதி வைத்தார். தொடர்ந்து கேரளத்தில் பல ஆலயங்களை நிர்மாணித்தார். அக்காலத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு கோயிலில் நுழையும் உரிமை மறுக்கப்பட்டிருந்தது. அந்த நிலைமையைத் தனது செயல்பாடுகள் மூலம் மாற்றினார் நாராயணகுரு. கேரளத்தின் கோட்டாறு போன்ற சில இடங்களில் சிறு தெய்வ வழிபாடும், உயிர்ப்பலி கொடுப்பதும், மது வகைகளைப் படைத்து வணங்குவதும் அதிகம் வழக்கத்தில் இருந்தது. அதுகண்டு மனம் வருந்திய நாராயணகுரு, அப்பகுதி மக்களைச் சந்தித்து இது போன்ற செயல்களின் விளைவுகளை விளக்கியுரைத்தார். உயிர்ப்பலியால் ஏற்படும் பாவத்தைப் பற்றியும், மதுப் பழக்கத்தால் ஏற்படும் தீமைகளையும் விரிவாக விளக்கிய அவர், அவர்கள் மனதை மாற்றி, சிறு தெய்வங்களின் சிலைகளை அகற்றி, சிவன், விஷ்ணு, அம்பாள், முருகன் ஆகிய தெய்வங்களைப் பிரதிஷ்டை செய்து வழிபடச் செய்தார். அதற்கான பூஜை முறைகளையும் அவரே உருவாக்கினார். கேரளா மட்டுமல்லாது, தமிழகம், ஆந்திரா, கர்நாடகா என பல இடங்களிலும் அனைத்து சாதி மனிதர்களும் வந்து வழிபடுமாறு புதிய ஆலயங்களை நிர்மாணித்தார்.

ஆல்வாய் அருகே ஆச்ரமம் உருவாக்கிச் சிலகாலம் வசித்தவர், பின், திருவனந்தபுரத்திற்கு அருகே உள்ள வர்க்கலையை தனது வாழ்விடமாகத் தேர்ந்து கொண்டார். அங்கே ஒரு சமஸ்கிருதப் பள்ளியை நிறுவினார். சாதிப்பாகுபாடின்றி அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கல்வி போதிக்கும் நிலையமாக அதனை உருவாக்கினார். ஏழை, எளியோர் உயர்கல்வி பெற அப்பள்ளி ஒரு காரணமானது.

பொருளாளர் ஆன திருடன்
ஒருமுறை வர்க்கலை சிவகிரி ஆசிரமத்தில் நாராயணகுரு தங்கியிருந்தார். அங்கே பணியாற்றி வந்த ஒருவரை ஆசிரமப் பணத்தைக் கையாடல் செய்துவிட்டார் என்று கூறி குருவின் முன் கொண்டு வந்து நிறுத்தினர் பக்தர்கள். அந்த நபரோ தனது செயலுக்கு வெட்கி, மனம் வருந்தி, அவமானப்பட்டு, கண்ணீருடன் தலைகுனிந்து நின்று கொண்டிருந்தார். அந்த நபருக்கு மிகக் கடுமையான தண்டனையைக் குரு வழங்குவார் என்றெண்ணிக் காத்திருந்தனர் பக்தர்கள்.

குரு அந்த மனிதனைப் பார்த்தார். இல்லாமையாலும், அதிக பொருள் தேவையாலும்தான் அவன் திருடியிருக்கிறான் என்பதை உணர்ந்து கொண்டார். 'திருடுதல் தகாது. அது மகத்தான பாவச்செயல்' என்று அறிவுரை கூறி, அவனை ஆசிரமத்தின் பொருள் காப்பாளராக நியமித்தார். அன்று முதல் நேர்மையான மனிதனாக அவன் வாழத் தொடங்கினான்.

ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன சபா
நாராயணகுருவால் ஈர்க்கப்பட்டுப் பலரும் அவரைச் சரணடைந்து சீடர்களாகினர். அவர்களது பணிகளை முன்னெடுத்தனர். அவர்களுள் டாக்டர் பத்மநாபனும் ஒருவர். இவர், 'ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன சபா' என்ற அமைப்பைத் தோற்றுவித்து அதன்மூலம் சமூகப் பணிகளை முன்னெடுத்தார். மற்றொரு சீடரான நடராஜகுருவை வெளிநாட்டுக்கு அனுப்பி, மேலைநாட்டுத் தத்துவங்களைக் கற்று வரச் செய்தார் குரு.

நாராயணகுரு பல்வேறு நூல்களையும், பாடல்களையும் எழுதியிருக்கிறார். பகவான் ஸ்ரீ ரமண மகரிஷியைச் சந்தித்தபின் இவர் எழுதிய ஐந்து பாடல்களையும் ரமணர் பாராட்டியுள்ளார். தமிழ், மலையாளம், சம்ஸ்கிருதம் ஆகியவற்றில் நூல்களை எழுதியிருக்கும் நாராயணகுரு, திருக்குறள் போன்றவற்றையும் மொழி பெயர்த்திருக்கிறார்.

குரு செய்த அற்புதம்
நாராயணகுரு தம் இறுதிக் காலத்தில் மிகக் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்தார். ஆனாலும் மக்கள்பணி எதையும் நிறுத்தவில்லை. உடல் நலிவுற்றபோதும் மக்களைச் சந்திப்பதையும், அவர்கள் குறைகளைச் செவிமடுப்பதையும், ஆறுதல், அறிவுரை கூறுவதையும் வழக்கமாக வைத்திருந்தார்.

ஒருநாள் குருவைப் பார்க்க வெகுதொலைவில் இருந்து ஒரு மனிதர் தன் மகளுடன் வந்திருந்தார். அந்தப் பெண்ணிற்கு வாதநோயினால் நடக்க இயலாமல் மிகவும் கஷ்டப்பட்டாள். நாராயணகுருவைப் பார்த்தால் எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில் வந்திருந்தார் அந்த மனிதர். ஆனால் அது குரு ஓய்வெடுத்துக் கொள்ளும் நேரம் என்பதால் ஆசிரமத் தொண்டர்கள் அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை.

தமதறையில் தியானத்தில் அமர்ந்திருந்த குரு திடீரெனத் தன் பணியாளர்களுள் ஒருவரை அழைத்தார். "நம்மைப் பார்க்க யாரோ வந்துள்ளனர். உடனே அவர்களை உள்ளே அழைத்து வாருங்கள்" என்று கட்டளையிட்டார். உடனே பணியாளர் பக்தரை உள்ளே அழைத்து வந்தார். தவழ்ந்தவாறே அவரது மகளும் குருவைத் தரிசிக்க வந்தாள். இருவரும் குருவைப் பணிந்து வணங்கினர். கண்ணீருடன் தனது குறையை நாராயணகுருவிடம் முறையிட்டார் பக்தர்.

அவரையும், அந்தப் பெண்ணையும் கனிவுடன் பார்த்த நாராயணகுரு, "இந்தப் பெண் எழுந்து நடப்பாள்" என்று அன்போடு கூறிவிட்டு தியானத்தில் ஆழ்ந்து விட்டார்.

சற்று நேரத்தில், அதுவரை நடக்க இயலாதிருந்த அந்தப் பெண் மெள்ள முயன்று எழுந்து நடந்தது மட்டுமல்ல, உணவுக்கூடம் சென்று உணவையும் கேட்டு வாங்கி உண்டாள். மகானின் கருணையையும், அவரது அற்புத ஆற்றல்களையும் எண்ணி வியந்தனர் பக்தர்கள்.

புண்ணியாத்மா
இப்படிக் கீர்த்திபெற்றிருந்த நாராயணகுருவை மகாத்மா காந்தி, கவி தாகூர், வினோபாஜி, ராஜாஜி உட்பட பலர் சந்தித்து உரையாடியுள்ளனர். இவரைத் தேடிவந்து தரிசித்து, தனது சந்தேகங்களுக்கு விடைபெற்றுச் சென்ற மகாத்மா காந்தி, குருவை ஓர் அவதார புருஷர் என்று குறிப்பிடுகிறார். "புண்ணியாத்மாவான நாராயணகுருவைத் தரிசித்தது என் வாழ்வின் பெரும்பேறு" என்று அவர் புகழ்ந்துரைத்திருக்கிறார். கவி தாகூரோ, "பாரத தேசத்தில் தோன்றிய மாகரிஷிகளில் ஸ்ரீ நாராயணகுருவும் ஒருவர். ஞானம் வாய்ந்த ஒரு பரமஹம்சர். அவருக்கு இணையான ஒரு மகாஞானியை நான் எங்குமே பார்த்ததில்லை. அவது ஒளிவிடும் முக தேஜஸும், யோகக் கண்களும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாதவை" என்று குறிப்பிடுகிறார். மகாகவி பாரதியாரும் நாராயணகுருவைப் பாராட்டி எழுதியிருக்கிறார். 'இரண்டாம் புத்தர்' என்றும் நாராயணகுரு போற்றப்படுகிறார்.

மகாசமாதி
சாதி, மதம், இனம், மொழிகளைக் கடந்து, எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி, மக்கள்பால் மனிதநேயம் மிக்கவராக வாழ்ந்த மகான் நாராயணகுரு 1928ம் ஆண்டு செப்டம்பர் 20ம் நாள் மகாசமாதி அடைந்தார். இவரது 150வது பிறந்த நாளின் போது இந்திய அரசு ரிசர்வ் வங்கி மூலமாகச் சிறப்பு நாணயங்களை வெளியிட்டு சிறப்பித்தது. இவர் பெயரிலான 'நாராயண குருகுலம்" குருவின் பெயரை நிலைநிறுத்தும் வகையில் சிறப்பாகப் பணிசெய்து வருகிறது. மதம் கடந்த மனிதநேயம் கொண்ட இவர்போன்ற புனிதர்கள், மகான்கள் என்றும் ஞானிகள் என்றும் போற்றப்படுகின்றனர். இவர்கள் பாரதத்தின் உண்மையான புதல்வர்கள்.

பா.சு. ரமணன்

© TamilOnline.com