ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ஆலயம்: ஸ்ரீ ராமநவமி உற்சவம்
சான் ஹோசே ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ஆலயத்தில் ஸ்ரீராமநவமி உற்சவம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. உற்சவம் ஸ்ரீ ஞானானந்த பஜனா மண்டலியைச் சேர்ந்த ஸ்ரீ குரு பாகவதர் மற்றும் குழுவினரால் பஜனோத்ஸவ சம்பிரதாயப்படி சிறப்பாக நடத்தப்பட்டது. தோடய மங்களம், குரு கீர்த்தனம், குரு அபங்கம், சாதுக்கள் மகிமையைக் கூறும் ஸந்த் என்ற வரிசையில் உற்சவம் ஆரம்பிக்கப்பட்டது. பிறகு கௌரி கல்யாணம் பாடப்பட்டு உற்சவம் துவங்கியது.

ஸ்ரீராமரைப் பற்றிய கல்யாண அஷ்டபதி பாடப்பட்டது. அது சமயம் பகவானின் கல்யாணத்திற்கு சீர்வரிசை மகளிரால் எடுத்துவரப்பட்டது. பின் சம்பிரதாயப்படி முத்துக் குத்துதல் நிகழ்ச்சி பத்ராசல ராமதாஸ் சுவாமிகளின் கீர்த்தனங்களுடன் நடந்தது. பின் முத்துக் குத்திய உலக்கையை பாகவதர்கள் கையிலேந்தி 'முசல நர்த்தனம்' செய்தனர்.

ஸ்ரீராமர், ஸ்ரீ சீதாதேவி, ஸ்ரீ லக்ஷ்மணர், ஸ்ரீ ஆஞ்சநேயர் மூர்த்திகளுக்கு மலர் மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு சப்பரத்தில் எழுந்தருளப் பண்ணினர். கோவில் அர்ச்சகர் ஸ்ரீ கிருஷ்ணன் சாஸ்திரிகள் அவர்களால் கன்னிகாதானம், மாங்கல்ய தாரணம் செய்யப்பட்டது. ஊஞ்சல் உற்சவம் செய்யப்பட்டது. பின் அபங்கம், ஆஞ்சநேய தியானம், மங்கள ஹாரத்தி பாடி உற்சவம் இனிதே நிறைவேறியது.

சீத்தாராமன்,
சான் ஹோசே, கலிஃபோர்னியா

© TamilOnline.com