பாஸடீனா: ஸ்ரீநிதி நவநீதன் கச்சேரி
பிப்ரவரி 13, 2018 மஹா சிவராத்திரி அன்று, தென்கலிஃபோர்னியாவில் உள்ள பாஸடீனா சிவன் கோவிலில் திருமதி சுதர்ஷனா அருண்குமார் அவர்களின் மாணவி குமாரி ஸ்ரீநிதி நவநீதனின் இசைநிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. திரு. முரளிபவித்ரன் வாசுதேவன் (வயலின்), திரு.சீனிவாசன் கோவிந்தராஜன் (மிருதங்கம்) ஆகியோர் பக்கம் வாசித்துக் கச்சேரியை மெருகேற்றினர்.

நிகழ்ச்சியை சாரங்கா ராகத்தில் அமைந்த 'கணநாதனே' என்ற பெரியசாமித் தூரனின் கீர்த்தனையுடன் துவங்கினார் ஸ்ரீநிதி. அதனைத் தொடர்ந்து 'பஞ்சாஷட் பீட ரூபிணி' (கர்நாடக தேவகாந்தாரி) கீர்த்தனையை ராக ஆலாபனை பாடி, பின் கல்பனா ஸ்வரத்துடன் முடித்தார். பின்னர் 'கரசரண' விருத்தத்தைத் தொடர்ந்து 'சம்போ மஹாதேவா' (பௌளி) கீர்த்தனையை பக்தி பெருகப் பாடினார். பின் வாசஸ்பதியில் ராக ஆலாபனை பாடி 'பராத்பரா' என்ற கீர்த்தனைக்குக் கல்பனா ஸ்வரம் பாடினார். தொடர்ந்து 'சரவணபவ' (கானடா), 'போ சம்போ' (ரேவதி) மற்றும் சிந்துபைரவியில் 'விஷ்வேஷ்வரு தர்ஷன கரு' என்ற பஜனையைப் பாடினார். நிறைவாக, அருணகிரிநாதரின் திருப்புகழான 'ஏறுமயில் ஏறி' என்ற பாடலை மோகனத்தில் பாடி முடித்தார். அன்றைய தினத்தில் குரு திருமதி. சுதர்ஷனா அருண்குமார் அவர்களும், 'ஆனந்த நடமாடுவார்' என்ற பூர்விகல்யாணி ராகத்தில் அமைந்த நீலகண்ட சிவனின் கீர்த்தனையை அற்புதமாகப் பாடினார்.

குமாரி ஸ்ரீநிதி நவநீதன் ஏற்கனவே நவம்பர் 4, 2017ல் டெம்பிள் சிட்டி, தென்கலிஃபோர்னியாவில் அமைந்துள்ள டெம்பிள் பெத் டேவிட் ஹாலில் முரளி பவித்ரன் வாசுதேவன் (வயலின்), திரு ஸ்ரீனிவாசன் கோவிந்தராஜன் (மிருதங்கம்) ஆகியோரின் அற்புதமான பக்கவாத்திய இசையின் உதவியுடன் தன் முதல் கர்நாடக இசை அரங்கேற்றத்தைச் சிறப்பாக நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் பாஸடீனா சிவன் கோவில் முதன்மை நிர்வாகி டாக்டர் சந்திரமோகன், மிருதங்க வித்வான் திரு ஸ்ரீபிரசன்னா மற்றும் சின்மயா மிஷன் ஆச்சார்யா திரு. மஹாதேவன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று வாழ்த்தினர்.

சசிகோபாலன்,
பாஸடீனா, தென் கலிஃபோர்னியா

© TamilOnline.com