ஏப்ரல்1, 2018 அன்று, தென்கலிஃபோர்னியாவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை குடிகொண்டிருக்கும் டிவைன் சேவியர் பங்கு தேவாலயத்தில், அருட்தந்தை ஆல்பர்ட், அருட்தந்தை சாமிதுரை ஆகியோர் இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழா சிறப்பு நிகழ்ச்சிளைத் துவங்கிவைத்தனர்.
இரவு 9:30 மணியளவில், முதல் பகுதியாக திருஒளி வழிபாடு தொடங்கியது. ஆலய வளாகத்தில் பாஸ்கா திரி ஏற்றபட்டு, ஊர்வலமாக கோவிலுக்குள் எடுத்துச் செல்லப்பட்டது. கூடியிருந்தவர்கள், தாங்கள் வைத்திருந்த திரியை, பாஸ்கா திரியிலிருந்து மகிழ்வுடன் ஏற்றிக்கொண்டனர். வரலாற்று நிகழ்வுகளைக் கொண்டு இயற்றபட்ட பாஸ்கா புகழுரை பாடப்பட்டது.
இரண்டாம் பகுதியாக, இறைவாக்கு வழிபாடு நடைபெற்றது.
முதல் வாசகம், கடவுள் எவ்வாறு உலகத்தை உருவாக்கினார் என்பது வாசிக்கப்பட்டது. இரண்டாம் வாசகம், ஆபிரகாம் தன் மகன் ஈசாக்குவை பலிகொடுக்கும் வாசகம். இதனை அடுத்து, இயேசு கிறிஸ்து உயிர்த்ததை உணர்த்தும் வகையில் உன்னதங்களிலே கீதம் இசைக்கப்பட்டது.
மூன்றாவதாக, கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றோர் அவர் உயிர்த்தெழுதலின் சாயலில் இணைக்கப்பட்டிருப்பர். எனவே நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. நற்செய்தி, இயேசு தாம் சொன்னபடியே மரித்தோரிலிருந்து எழுந்தார் என்று அறிவித்தது.
மூன்றாம் பகுதியான திருமுழுக்கு வழிபாட்டில் தீர்த்தம் மந்திரிக்கப்பட்டு, அனைவர் மேலும் தெளிக்கப்பட்டது. நான்காம் பகுதியாக நற்கருணை வழிபாடு மற்றும் திருவிருந்து நடைபெற்றது. அதன்பின், அருட்தந்தையர் ஆசிர்தர ஈஸ்டர் பெருவிழா முடிவுற்றது.
முன்னதாக, மார்ச் 3 அன்று, ஈஸ்டர் பெருவிழாவிற்கு இறைமக்கள் தங்களைத் தயார் செய்யும்படியாக, டாக்டர். தயானந்தன் அவர்கள், ஒருநாள் தியானம் நடத்தினார்.
தொகுப்பு: ஜோசஃப் சௌரிமுத்து, லாஸ் ஏஞ்சலஸ் |