ப்ளேனோ தமிழ்ப்பள்ளி ஆண்டுவிழா
ஏப்ரல் 8, 2018 அன்று ப்ளேனோ தமிழ்ப்பள்ளி தனது ஆண்டுவிழாவைக் கொண்டாடியது. திருமதி ஆன் மக்காஸ்லாந்து (Secretary, Board of Trustees, Frisco ISD) அவர்கள் முதன்மை விருந்தினராக வந்திருந்தார். அவர் பள்ளியின் பிற தன்னார்வலர்களைப் போலவே புடவை உடுத்தி வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பள்ளி நூலக ஒருங்கிணைப்பாளரான திரு. வெங்கட் வரவேற்புரை வழங்கினார். பாரதியார் பாடல்களை முதல்நிலை மாணாக்கர்கள் வழங்கினர். பிறகு 'ஔவையும் பேராசை கொண்ட செல்வந்தனும்', 'ஔவையார் அதியமான்', 'முல்லைக்குத் தேர் கொடுத்த பாரியும், பாரி மகளிர் ஔவைமீது கொண்ட அன்பும்', 'தண்ணீர், தண்ணீர்', 'அச்சமில்லை, அச்சமில்லை', 'சித்ரகுப்தா கொஞ்சம் மாத்தி யோசி', 'சொல்வதெல்லாம் சும்மா' ஆகிய நாடகங்களை அடுத்தடுத்த நிலைகளில் பயில்வோர் வழங்கினர். 'வளமான வாழ்க்கைக்கு சிறந்த வழி பாரம்பரியமா? புதுயுகமா?' என்ற தலைப்பில் பட்டிமன்றம் விறுவிறுப்பாக இருந்தது.

அடுத்து வந்த 'நாட்டாமையின் தீர்ப்பு' நிகழ்ச்சியில் துரித உணவுகளும் பாரம்பரிய உணவுகளுக்கும் இடையே பலத்த விவாதம் நடந்தது. 'மாந்தரைப் போற்றுவோம்' தெருக்கூத்து விருந்தாக அமைந்தது. நிகழ்ச்சியின் இறுதியில் திருக்குறள் போட்டிகளில் வென்றோருக்குக் கேடயங்கள், பணமுடிப்பு அளிக்கப்பட்டன. தவிர, ஆத்திசூடிப் போட்டி, பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டிகளில் வென்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்தப் பரிசுகளை வாஷிங்டன் டி.சி.யிலிருந்து வந்திருந்த திரு. வீரப்பன் வழங்கினார். திருமதி. ப்ரீதி மோஹன் தொகுத்து வழங்கினார்.

ராதிகா நாராயணன்,
ப்ளேனோ, டெக்சஸ்

© TamilOnline.com