இந்தியாவுக்குப் பயணம்....
மாதம் ஒரு கட்டுரை என்று எழுதி வருகையில் வாசகர்களின் விருப்பம் அறிவது மிக முக்கியமாகிறது.

உங்களுக்கு ஏதேனும் குறிப்பிட்ட நோய் பற்றிய விவரம் தெரிந்து கொள்ள விரும்பினால் தென்றல் ஆசிரியருக்குக் கடிதம் மூலம் அல்லது மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்துங்கள்.

இந்த மாதம் இந்தியாவுக்குப் பயணம் மேற்கோள்வோர் அறிந்து கொள்ள வேண்டிய நோய்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

மஞ்சள் காமாலை

மஞ்சள் காமாலை நோய் பல தரப்பட்டது. உங்களில் எவருக்கேனும் தோல் நிறம் மஞ்சளாக மாறுமேயானால், உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. அதிகமாக குடிப்பழக்கம் உடையவர்களுக்கு இந்த நோய் ஏற்பட்டால் அவர்களின் ஈரல் (liver) சேதமடைந்ததைக் குறிக்கும். ஒரு சிலருக்கு வாந்தி, குமட்டல், காய்ச்சல் ஜுரம் ஆகியவற்றோடு தோல் நிறமும் மஞ்சளாக மாறும். இது ஈரல் மற்றும் பித்தநீர்ப் பை (Gall bladder) நோய்களினால் ஏற்படலாம். பித்தநீர் தேங்கும் பையில் கற்கள் உருவானால் அது கிருமிகளினால் ஏற்படும் தொற்று நோய் உருவாக்கலாம். இந்த வகை நோய்த்தொற்று (infection) ஏற்பட்டால் மருத்துவமனையில் சேர்த்து மருந்துகள் கொடுக்க நேரிடும். சில நேரங்களில் அறுவைச் சிகிச்சையும் தேவைப்படலாம். அடிக்கடி கற்கள் ஏற்படும் அபாயம் இருந்தால் அறுவைச் சிகிச்சையின் மூலம் பித்தநீர் தேங்கும் பை அகற்றப்படும். இது பெரும்பாலும் உடல் பருமனாக இருக்கும் பெண்களைத் தாக்க வல்லது. கொழுப்புச் சத்து குறைவாக உண்பதின் மூலம் இந்தக் கற்கள் உருவாவதைத் தடுக்க இயலும்.

இதைத் தவிர காமாலை (Hepatitis) என்று சொல்லப்படும் வைரஸ் நோய்த்தொற்றின் மூலம் ஈரல் பாதிக்கப்பட்டாலும் மஞ்சள் காமாலை ஏற்படலாம். இதில் மூன்று வகைக் காமாலை வைரஸ்கள் (Hepatitis A, B and C) உள்ளன. அவற்றில் இரண்டு (Hepatitis B மற்றும் C) இரத்தம் மற்றும் உடல் நீரின் மூலம் பரவக்கூடியன. ஆகவே இரத்தம் ஏற்றுதல் (blood transfusion), நரம்பில் (vein) ஏற்றப்படும் போதைப் பொருட்கள் அல்லது உடலுறவு மூலம் பரவ வல்லது. ஆனால் ஒரு காமாலை வைரஸ் (hepatitis A) உட்கொள்ளும் உணவுப் பொருட்கள் மூலம் பரவக்கூடியது. சுகாதாரம் குறைவதால் இந்தக் கிருமிகள் பரவலாம். இதில் குறிப்பாக அமெரிக்காவி லிருந்து இந்தியா பயணம் மேற்கொள்வோர் அறிந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் அதிகமாக காணப்படுவது முதல் காமாலை வைரஸ் (Hepatitis A).

நீங்கள் அசுத்தமான நீர் அல்லது உணவு உட்கொண்டால் இந்த நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

ஆகவே சுத்தமான காய்ச்சிய தண்ணீரையே பருகுங்கள். உணவுப் பொருட்களை நன்கு சமைத்த பின்னரே உண்ண வேண்டும். காய்கள் மற்றும் பழங்களை நன்கு நீரில் கழுவிய பின்னரே உண்ண வேண்டும். இதையும் மீறி இந்த நோய் ஏற்பட்டால் தகுந்த சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம். குறிப்பாக முதியோர்கள் மற்றும் சிறு குழந்தைகள், கர்ப்பமானவர்கள் கவனமாக இருக்க வேண்டும். இவர்களை இந்த நோய் தாக்கினால் அதனால் இறப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.


வயிற்றுப்போக்கு (Diarrhoea)

இந்தியா பயணம் மேற்கோள்பவருக்கு அங்கு சென்ற சில நாட்களில் வயிற்றுப் போக்கு ஏற்படுவது மிகவும் சகஜம். இது பெரும்பாலும் வைரஸ் நோய்த்தொற்றால் ஏற்படக்கூடியது. முன்பு குறிப்பிட்டது போல் சுகாதாரம் மிக மிக முக்கியம். நீங்கள் பல வருடங்களுக்கு முன்னர் இந்தியாவில் உண்ட உணவுப் பொருட்கள் இப்போது உண்டால் மட்டும் வயிற்றுப்போக்கு ஏற்படலாம். முன்பெல்லாம் நன்றாக செரிமானம் ஆகியதே என்று எண்ணலாம். இதை மருத்துவ உலகம் "மந்தைத் தடுப்பு சக்தி" (Herd immunity) என்று சொல்கிறது. ஓர் ஊரில் அதிகமாக பரவியிருக்கும் பாக்டீரியா மற்றும் வைரஸ் நோய்த்தொற்றுக்கு அந்த ஊரில் வாழ்பவர்களுக்கு ஒரு விதமான பாதுகாப்பு ஏற்பட்டு விடுகிறது.

ஆனால் பல நாட்களாக அமெரிக்காவில் இருந்து வந்தால் இந்தத் தடுப்பு சக்தி இல்லாமல் போய்விடலாம். அதனால் உங்கள் சொந்த ஊரில் சாப்பிட்ட உணவுகளே இன்று செரிமானம் ஆகாமல் போகலாம்.

இப்படி ஏற்பட்டால் முக்கியமாக நல்ல குடிநீரைப் பருக வேண்டும். உடலில் இருந்து உப்புச் சத்து மலத்தில் கழிகிறது. ஆகவே அதிகமாக உப்பு மற்றும் சர்க்கரை கலந்த திரவங்களைப் பருகுவதின் மூலம் உடலில் நீர் வறட்சி (dehydration) ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். பல நேரங் களில் இந்த வகை இரப்பைக் குடலழற்சி (gastroenteritis) ஏற்பட்டால் கிருமிக்கொல்லி (antibiotics) வழங்குவதில்லை.

இந்த வயிற்றுப்போக்கு பெரும்பாலும் தானாகவே சரியாகிவிடும். ஆனால் மலத்தில் இரத்தம் கலந்திருந்தாலோ அல்லது காய்ச்சல் மற்றும் வயிற்று வலி கடுமையாக இருந்தாலோ கிருமிக்கொல்லி தேவைப்படலாம். ஒவ்வொருமுறை மலப் போக்கு ஏற்படும் போதும் திரவங்களை உட்கொள்ள வேண்டும்.

குறிப்பாக குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் அவர்களுக்கு இந்த Electrolytes என்று சொல்லப்படும் உப்புகள் கலந்த திரவங்களை கட்டாயப்படுத்தி கொடுக்க வேண்டும். அதிகமாக குமட்டல் அல்லது வாந்தி இருக்குமேயானால் சிறுக சிறுக இந்த நீரப் பருகுவது நல்லது.

தடுப்பு மருந்துகள்

இந்தியா பயணம் மேற்கொள்வதற்கு முன்னர் சில தடுப்பு மருந்துகள் அவசியம். இதில் முக்கியமானது 'மலேரியா'. இந்த மலேரியா மாத்திரைகளைப் பயணத்திற்கு முன்னும் பின்னும் உட்கொள்ள வேண்டி யிருக்கலாம். இந்த மாத்திரைகள் இந்தியா வில் குறைந்த விலையில் கிடைக்கும். இந்த நோய் அமெரிக்காவில் அதிகமாக இல்லாத காரணத்தால் இங்கு இந்த மாத்திரைகள் அதிகமான விலையாகும்.

இரண்டாவது குடற்காய்ச்சல் (Typhoid) தடுப்பு மருந்து. இரண்டு வயதுக்கு அதிகம் மேற்பட்டோர் இந்த டை·பாய்டு தடுப்பு மருந்தை மாத்திரை வடிவில் உட்கொள்ளலாம்.

மூன்றாவது மேற்குறிக்கப்பட்ட காமாலைத் தடுப்பூசி (Hepatitis A vaccine). இந்த தடுப்பு மருந்து ஊசி வடிவில் மட்டுமே கிடைக்கப்படுகிறது.

இதைத் தவிர பயணிகள் வயிற்றுப்போக்கு (travellers Diarreha) என்று சொல்லப்படும் ஒரு வித இரப்பைக் குடலழற்சிக்கு (gastroenteritis) கிருமிக்கொல்லி வழங்கப்படலாம்.

மேலும் விவரங்களுக்கு www.cdc.gov/travel/indianrg.htm என்ற வலைத்தளத்தை அணுகவும்.

மரு. வரலட்சுமி நிரஞ்சன்

© TamilOnline.com