காமத்துப்பாலை மறைக்கலாமா?
திருக்குறளின் காமத்துப்பாலைப் பொதுவாகப் பெரியவர்கள் தவிர்ப்பதும் சிறப்பாகப் பள்ளிவயது மாணவர்களிடமிருந்து அதைப் பாடப்புத்தகங்களிலும் விழாப்போட்டிகள் முதலான நிகழ்ச்சிகளில் மறைப்பதும் பரவலாகக் காண்பதுண்டு.

அதற்குக் காரணமாக மக்கள் சொல்லுவது: காமத்தை ஆய்வதில் என்ன இருக்கிறது அறத்துப்பாலையும் பொருட்பாலையும் வாசித்தாலாவது பயனுண்டு என்பது பெற்றோர்கள் தாங்கள் தவிர்ப்பதற்குச் சொல்லும் காரணம். சிறுவரிடமிருந்து அதை மறைப்பதற்குக் காரணமாகச் சொல்லுவது: முதிராத வயதில் காமத்தையும் காதலையும் ஏன் சொல்லித்தரவேண்டும் என்பது.

அந்தக் காரணங்களெல்லாம் காமத்துப்பாலையும் தமிழ்ப் பண்பாட்டையும் தெளிவாக உணராததால் நேரும் மயக்கமே.முதலாக உணரவேண்டியது காமத்துப்பாலிலே உடலளவினாலான ஆசைகளுக்கு முதன்மை கொடுப்பதோ உடற்கலப்புச் செய்கைகளைச் சித்திரிப்பதோ கிடையாது என்பதே. வடமொழியிலே வாத்தியாயனர் இயற்றிய காமசாத்திரம் என்னும் நூல் அதற்கு நேர்மாறானது; அங்கே கலவியால் உடலுணர்ச்சியைப் பெருக்கும் வழிமுறைகள் சொல்லியுள்ளன. குறளின் காமத்துப்பாலில் தலைவனும் தலைவியும் ஆண்பெண் என்ற முறையிலே மையல் கொண்டாலும் அவர்கள் உள்ளத்தளவில் பொதிந்துள்ள அன்பை அடிப்படையாகக் கொண்டு அவர்களின் நுணுகிய உள்ளத்துணர்வுகளைச் சித்திரிப்பதில் குறிக்கோள் உள்ளதைக் காணலாம். எனவே இரண்டு நூலிலும் காமம் என்ற சொல் பயின்றாலும் மலையும் மடுவும்போல் வேறுபட்ட நோக்கமும் பொருளும் கொண்டவை என்று உணரவேண்டும்.

காமத்துப்பால் அன்பின் அடிப்படையாகப் பிறந்ததால் உயர்ந்த காதலைக் கற்பிக்கும் ஒரு நூலாகவும் விளங்குகிறது. ஆனால் அதை ஓர் அறநூல்போல் வெளிப்படையாக இப்படிச் செய் அப்படிச் செய்யாதே என்று ஓதுவதில்லை. திருக்குறளின் முதலிரண்டு பாலும் அப்படித்தான் உள்ளன; அங்கே வள்ளுவனே நேரடியாகப் பேசுவான். ஆனால் அதற்கு மாறாகக் காமத்துப்பாலில் தலைவன் தலைவி என்ற இரு பாத்திரங்களைக் கொண்டு அவர்கள் சொற்களால் அவர்கள் உணர்ச்சியையும் கருத்தையும் நடத்தையும் கவிதையாக வெளியிட்டு வழிகாட்டுகிறான் வள்ளுவன். திரைப்படங்களை விட மோசமாகிவிட்டதா திருக்குறள்?

காமத்துப்பாலைத் தம் சிறுவர்களிடமிருந்து மறைக்கும் பெற்றோர் சிந்திக்கவேண்டிய ஒன்று: தாங்களும் தங்கள் குழந்தைகளும் கூடிப் பார்க்கும் இக்காலத் திரைப்படங்களில் காட்டும் காமத்தின் தரத்தைவிடக் குறளின் காமத்துப்பால் மோசமா என்பதே. திரைப்படங்களை நாணமின்றிக் குடும்பத்தோடு பார்க்கும்பொழுது வள்ளுவனின் காமத்துப்பால் காட்சிகளைக் கற்பிக்கும்பொழுதுமட்டும் ஒரு நாணம் ஏன்?

தமிழ் என்றாலே அகப்பொருள்தான். தமிழ்ப் பண்பாட்டின் ஒருதனிச் சிறப்பே காமத்துப்பால் காட்டும் அகப்பொருள் இலக்கணந்தான். திருக்குறளின் அறத்துப்பாலும் பொருட்பாலும் சொல்லுகிற கருத்துகளில் கணிசமானவற்றை மற்றமொழியினரின் நூல்களில் கூடக் காணலாம். ஆனால் காமத்துப்பாலின் அகப்பொருள் தமிழ்ப்பண்பாட்டுக்கே உரியதாகும். அதனால்தான் அந்தப்பொருளிலக்கணத்திற்கு இன்னொரு பெயர் தமிழ் என்பது!

அதனாலேயே பரிபாடல் என்னும் சங்கநூலில் பரங்குன்ற மலையைப் புகழும்பொழுது வள்ளி முருகன் களவுக்காதலைக் கருவாகக் கொண்ட பொருளிலக்கணத்தை ஆய்ந்திலாதவர்கள் பரங்குன்ற மலையின் பயனை உணரமாட்டார்கள் என்கிறார் குன்றம்பூதனார் என்ற புலவர்; அப்படிச் சொல்லும்பொழுது அவர் பொருளிலக்கணத்தை இயல்பினை உடைய தண்டமிழ் என்கிறார்: “தள்ளாப் பொருளியல்பின் தண்டமிழ் ஆய்வந்தில்லார் கொள்ளார் இக்குன்று பயன்” (பரிபாடல்:9:25-26).

மேலும் கபிலர் பாடிய குறிஞ்சிப்பாட்டு என்னும் சங்கப்பாட்டின் குறிப்பு “ஆரியவரசன் பிரகத்தனைத் தமிழறிவித்தற்குக் கபிலர் பாடிய குறிஞ்சிப்பாட்டு” என்கிறது. அந்தப் பாட்டை வாசிப்பவர் யாரும் அது தமிழ்மொழியைக் கற்பிக்கும் அளவு எளிய நடையுள்ளதன்று என்பதை உணர்வர்; அங்கே தமிழ் என்பது அதன் பொருளான “அறத்தொடு நிற்றல்” என்னும் காதல்துறையின் ஒழுக்கமாகும்; அது தலைவியின் களவுக்காதலைச் செவிலிக்கு உணர்த்தும் தோழி தலைவி அவள் காதலிக்கும் தலைவனைத்தவிர வேறுயாரையும் பெற்றோர் மணத்தின் பொருட்டு இணைத்தால் தலைவி இறப்பாள் என்று சொல்லுவதாகும்.

அகப்பொருள்தான் தமிழ்ப்புலமையின் உச்சக்கட்டமென்று மிகப் பழங்காலந்தொட்டே தமிழர்கள் கருதினர். கோவை என்னும் வகை நூல் அகப்பொருள் இலக்கணத்தில் உள்ள நூற்றுக்கணக்கான துறைகள் (சூழ்நிலைகள்) எல்லாவற்றிற்கும் ஒவ்வொரு கவிதையாகப் படுவது. இது பாடுவது மிகக் கடினமாகும். பொய்யாமொழிப் புலவரின் தஞ்சைவாணன் கோவை, மாணிக்கவாசகரின் திருக்கோவையார் என்பவை இவற்றுள் தலைசிறந்தனவாகும்.

திருஞானசம்பந்தரின் முதற்பாட்டே காமப்பாட்டுத்தான்!

திருஞானசம்பந்தர் உலக வரலாற்றிலேயே மிக இளைய இசைக்கவிஞன் என்பது தெரிந்ததே; அவர் மூன்றுவயதில் பாடிய “தோடுடைய செவியன்” என்ற தேவாரப் பதிகம் காமத்தை அடிப்படையாகக் கொண்ட அகத்துறைப்பாடல் என்பதைப் பலரும் மறந்துவிடுகின்றனர்! அதில் பலபாடல்களில் “என் உள்ளங் கவர்கள்வன்” என்று சொல்வது களவுக்காதலில் ஈடுபட்ட தலைவியின் சொல்லாகும்; அதை வெளிப்படையாகவே மூன்றாம்பாட்டில் “இனவெள் வளை சோர என் உள்ளம் கவர்கள்வன்” (“தொகுதியான வெண்சங்கு வளையல் கழன்று விழ, என்னைக் காதல் ஏக்கத்தால் உடல்மெலியச் செய்யுமாறு என் உள்ளம் கவர் கள்வன்”) என்னும் சொற்களால் அறியலாம்.

இதனால் அந்தப் பதிகத்தையாரும் சிறுவர்களுக்குக் கற்பிக்கத் தயங்குவதில்லையே?!

முன்பு கூறிய மாணிக்கவாசகரின் நூலான திருக்கோவையார் சைவச் சமயத்துக் கவிதைகளில் தலைசிறந்ததாகக் கருதுவதாயினும் அது காமத்துப்பாலேயாகும். மேலும் அந்த நூலும் வேதாந்தமும் ஒன்றே (“திருநான் மறைமுடிவும் கோவை, திருவாசகமும் ஒரு வாசகமென்று உணர்” நல்வழி:40) என்று அவ்வையார் போற்றும் அளவு தத்துவச்செறிவு கொண்டதும் ஆகும்.

சிவன்கோவிலுக்குப் போவதா?

காமத்துப்பாலைச் சிறுவர்களிடமிருந்து மறைப்பவர்கள் சிவன்கோவிலுக்கும் தடைவிதிக்கவேண்டுமே? அங்கே திருவோலக்கத்தில் வீற்றிருக்கும் சிவ இலிங்கத்தை எந்த உண்மையை மறைத்து விளக்குவார்கள்?

குடும்பத்தைக் காக்கும் காமத்துப் பால்

காமத்துப்பாலிலே குடும்பத்தைக் காக்கும் பல கருத்துகள் உண்டு. கணவன் மனைவி ஊடல் பற்றிச் சொல்லும்பொழுது:

“உப்புஅமைந்தற்றால் புலவி; அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல்”

(காமத்துப்பால்:புலவி:1302)
என்கிறாள் தலைவி. [புலவி = ஊடல்]

அதாவது “ஊடல் என்பது உணவிலே உப்பு அமைந்ததுபோல; அதை நீளவிடுவது சாப்பாட்டிலே உப்பு அதிகமானதுபோல” என்கிறாள்!

அப்படியானால் எப்படி ஊடலை முறிப்பது? ஏதாவது யோசனை உண்டா? உண்டு!

ஊடலால் தலைவனும் தலைவியும் பேசாமல் இருந்தார்கள்; அப்பொழுது தலைவன் ஒரு செயல் செய்து தலைவியைப் பேசவைத்துவிட்டான்...

“ஊடி இருந்தேமாத் தும்மினார், யாம்தம்மை
நீடுவாழ்க என்பாக்கு அறிந்து”

(காமத்துப்பால்:புலவிநுணுக்கம்:132)
[என்பாக்கு = என்பது]

அதாவது” நாங்கள் ஊடி இருந்தோம்; அப்பொழுது அவர் வேண்டுமென்றே தும்மினார்; நான் அவரை நீடு வாழ்க என்று முந்திக்கொண்டு வாழ்த்துவேன் என்பதைத் தெரிந்துகொண்டு” என்கிறாள் தலைவி!

பாருங்கள் எவ்வளவு நகைச்சுவையோடு மிக நுணுக்கமான ஒரு வாழ்க்கைத் தந்திரத்தைக் காமத்துப்பால் கற்பிக்கிறது நமக்கு!

பொதுக்கருத்துகளும் உண்டு

காமத்துப்பாலிலே மற்ற இரண்டுபாலிலே இருக்கவேண்டிய கருத்துகளும் காதற்சூழலிலே சொல்லியிருப்பதைக் காணலாம்.

சில சான்றுகள் காண்போம்.

குடிபுகுந்தால் தன் இனத்தாரோடு குடிபுகவேண்டும் என்பதைப் பிரிவாற்றாமை என்ற அதிகாரத்தில் காணலாம்:

“இன்னாது இனன் இல் ஊர்வாழ்தல்; அதனினும்
இன்னாது இனியார்ப் பிரிவு”

(பிரிவாற்றாமை:1158)
[இன்னாது = இன்னல் உடையது]

“தன் இனம் இல்லாத ஊரில் வாழ்வது இன்னல் உடையது; அதனினும் இன்னலானது தன் அன்பரைப் பிரிந்திருப்பது” என்னும் தலைவியின் கூற்றிலே பொதுவுண்மையும் காண்கிறோம்.

தன்னுடைய நெஞ்சந்தான் துன்பத்தில் உண்மையான துணை என்பதைக் காமத்துப்பாலில் காண்கிறோம், பொருட்பாலின் இடுக்கணழியாமை என்ற அதிகாரத்தில் இல்லை!:

“துன்பத்திற்கு யாரே துணையாவார்? தாமுடைய
நெஞ்சம் துணைஅல் வழி”

(நெஞ்சொடு புலத்தல்:1299)

அதாவது “தம்முடைய நெஞ்சமே ஒருவருக்குத் துணையல்லாத பொழுது துன்பத்திற்கு யார்தாம் துணையாவார்?”

என்ன ஆழ்ந்த கருத்து, எவ்வளவு எளிமையாகத் தலைவி தன் நெஞ்சைக் கோபித்துக்கொள்வதுபோல் வந்து வாய்த்துள்ளது நமக்கு!

எனவே இதுகாறும் கூறியவற்றால் காமத்துப்பாலில் சிறுவர்களுக்குக் குடும்பவாழ்க்கை நெறியைப் பிஞ்சு வயதிலேயே கற்பிக்கும் கருத்துகள் பொதிந்துள்ளதையும் பெரியவர்களுக்கும் பயன்படும் பல நுணுக்கங்கள் கவிதை நயத்தில் உள்ளதையும் நாம் காண்கிறோம். ஆகவே பெற்றோர்கள் தாங்கள் தம் மக்களுக்குக் காட்டும் திரைப்படங்களின் ஆண்பெண் உறவுநிலையையும் காமத்துப்பாலின் காதலையும் ஒப்பிட்டு எது மறைக்கத்தக்கது எது பெருமையோடு கற்பிக்கத்தக்கது என்று முடிவுசெய்யவேண்டும்.

தமிழ்மொழியைக் காக்க விரும்புவோரும் அகப்பொருள் இலக்கணத்துக் காதலே தமிழ் என்று தொன்றுதொட்டு நம் சான்றோர்கள் சொல்வதைக் கவனித்திருப்பார்கள்; எனவே காமத்துப்பால் காட்டும் காதலிலிருந்து விலகிய பாத்திரங்களைக்கொண்ட படைப்புகள் நம் செந்தமிழுக்கு நல்லது சிறிதாவது செய்யுமா என்று சிந்திக்கவேண்டும்.

பெரியண்ணன் சந்திரசேகரன்
அட்லாண்டா

© TamilOnline.com