இன்றும் சற்று தாமதம்!
இன்னும் 10 நிமிடங்களில் என் 8 வயது மகளின் சங்கீத வகுப்பு ஆரம்பிக்கும். சாலையில் பச்சை விளக்குக்காக காத்திருப்பதில் எனது வாகனம் முதலாவது. இரண்டு சாலைகளைக் கடந்துவிட்டால் நிச்சயமாக நேரத்துக்குப் போய்விடலாம்.

ஞாயிறுதோறும் வகுப்பு. பின்னாடி பார்க்கும் வாகனக் கண்ணாடியில் பின்னிருக்கையில் இருக்கும் மகளைப் பார்க்கிறேன். ஐபேடில் கண்களைப் பொருத்தி, சிந்தனைகளை iOSல் செலுத்தி விரல்களால் குடைந்து கொண்டிருந்தாள். சங்கீதப் பாடங்கள் அதில் இருப்பதால் அதை வகுப்புக்கு எடுத்து வருவது வழக்கம். ஏதோ ஒரு பதிவைத் தேடுகிறாள் போலும்.

சிகாகோவில் கோடைகாலம். சாலையோரத்தில் உடற்பயிற்சி செய்பவர் சிலர்; பஞ்சவர்ணக் கிளிகள்போல் கண்ணைக் கூசும் வண்ணங்களில் பயிற்சி உடைகளில் வேகநடையில் சிலர்; வேறு சிலர் சைக்கிளில் உடற்பயிற்சி எனப் பறந்தனர்.

இங்கே சைக்கிள் ஒரு போக்குவரத்து வாகனமாகப் பெரும்பாலும் கருதப்படுவதில்லை. உடற்பயிற்சிக்கெனப் பிரத்தியேக ஆடை ஆபரணங்கள். பயிற்சி பாதி ஆடை பாதியெனக் கிளம்பிடுவர் சிலர். கனம் குறைந்த சைக்கிள் விலை அதிகமாம். டைட்டேனியம், கார்பன் கொண்டு செதுக்கின சைக்கிள் இரண்டாயிரம் டொலர் தாண்டுமாம். சாலையில் ஒருவர் பளிச்சிடும் நீல சைக்கிளில் மெதுவாகவே சென்று கொண்டிருந்தார்.

இதே நீலநிறம்தான் நான் யாழ்ப்பாணத்தில் பாடசாலையில் படிக்கும்போது பாவித்த சைக்கிள். அந்த சைக்கிள் மிகச்சிறப்பானது. 30 ஆண்டுகள் முன்னர் ஓட்டியிருந்தாலும், இப்பவும் பரவசமூட்டும் நினைவுகள். அந்த சைக்கிளை நான் அடைய எனது அப்பாவிடம் முன்கூட்டியே கோரிக்கை விடுத்திருந்தேன்.

முதலில் எனது 11 வயது குறுக்கே நின்றது. நாட்கள் மாதங்களாக 12 வயதானது. ஆனாலும் கெஞ்சி விண்ணப்பித்திருந்த சைக்கிள் வீடு வரவில்லை. படிப்பு இறுதிப் பரீட்சைகளில் அதிக மார்க் வாங்கி அந்த சைக்கிளை அடைய நான் லாயக்கானவன் என நிலைநாட்ட வேண்டியதாயிற்று. அப்பாவிடம் பேசும்போது ஏதோ ஒரு வழியில் சைக்கிள் பேச்சை கட்டாயமாகக் கொண்டுவந்து, அவரது மனோநிலையை ஒரு மனோதத்துவ நிபுணர் போல் ஆராய்ந்து, சைக்கிள் முதலீடு ஈட்டக்கூடிய வர்த்தக லாபங்களை ஒப்புவித்து, இடையிடையே அம்மாவிடம் செல்லச்சண்டை பிடித்து, அந்த சண்டைகளின் தாக்கம் அப்பாவை அடைகிறதா என ஆய்வுகள் மேற்கொண்டு, அப்பப்பப்பா, அந்த சைக்கிளை அடைய நான் பட்டபாடு!

ஒரு வழியாக ஒரு அற்புதமான திங்கட்கிழமை அன்று சைக்கிள் கொழும்பில் இருந்து வந்திறங்கியது! சைக்கிள் சாதாரணமானதானாலும், சின்னச்சின்ன விசேஷங்கள் அந்த சைக்கிளை மொத்தத்தில் முதன்மை ஆக்கின. மற்றவர்கள் கண்களுக்கு ஒரு சாதாரணமான சைக்கிளாக காணப்பட்டிருக்கலாம், ஆனால் எனக்கு அதன் கேபிள்பிரேக், ஸ்போர்ட்ஸ் ஃப்ரேம் மற்றும் இரவு ஃப்ளூரசெண்ட் விளக்கில் நீலநாவலாக மாறும் அதன் வண்ணப்பூச்சு எல்லாம் அந்த சைக்கிளை மிகச் சிறப்பாக்கின.

சைக்கிளை பத்திரமாக பாதுகாத்து, பழைய துணியினால் தினமும் துடைத்து, சிங்கர் தையல் மெஷின் எண்ணையை உராய்வு ஏற்படும் இடங்களில் ஊற்றி அசாதாரணமான சத்தங்களை ஆராய்ந்து பொத்திப் பாதுகாத்து வந்தேன்.

தினமும் பாடசாலைக்கு அந்த சைக்கிளில் செல்வது ஒரு மகிழ்ச்சியையும் உத்வேகத்தையும் தந்தது.

ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை மணி அண்ணையிடம் சைக்கிள் சேர்விசுக்காக எடுத்து செல்லப்படும். சில பல பாகங்கள் கழட்டப்பட்டு கழுவிப் பூட்டப்படும். சேர்விஸ் முடிந்த சைக்கிள் பளிச்சிடும். அலங்காரமூட்டும் நாலு வர்ண பிளாஸ்டிக் பூ சில்லுகளின் அச்சாணிகளில் மிளிரும். இந்தப் பூக்கள் மீதியாயிருந்த எண்ணையை உறிஞ்சி வைத்திருக்குமாம் என விஞ்ஞான விளக்கம் வழங்கப்படும்.சேர்விஸிலிருந்து வந்த வண்டியைச் சில நாட்கள் பார்த்துப் பார்த்து அனுபவித்த பின்னர்தான் புழுதியூட்டும் தெருக்களில் மீண்டும் செலுத்துவேன்.

பாரமான பொருட்களை எடுத்துவர எனது சைக்கிளை உபயோகப்படுத்த அனுமதிக்க மாட்டேன். அண்ணாவிடம் ஒரு ஹீரோ சைக்கிள் இருந்தது. அதன் பார்வையே என்னில் பாரமான காஸ் சிலின்டர் மற்றும் அரிசி மூடை ஏற்று என்றதுபோல அமையும். கனம்கூடிய வண்டி. அதை விளம்பரப்படுத்தி பாரமான வேலைகளை அதன் பக்கம் திருப்பிவிடுவேன்.

இந்த நீல சைக்கிளில் நான் வைத்த பட்சத்தினால் காலப்போக்கில் இந்த சைக்கிள் எனது அடையாளங்களில் ஒன்றானது.

இந்த சைக்கிளை நான் அடைய இரண்டு வருடங்கள் கனாக்கண்டு மேலும் ஒருவருடம் போராட வேண்டியதாயிற்று. சைக்கிளை அடைந்ததும் நான் பெற்ற ஆனந்தம், அதை நான் அனுபவித்த ஆனந்தம் அழகானவை.

பச்சை விளக்கு விழுந்தது. வாகனத்தைச் சற்று வேகமாகவே செலுத்தினேன். மகளின் சங்கீத வகுப்பிற்கு சற்றுத் தாமதமாக போனாலும் அதிக தாமதமாகாது என்ற திருப்தி.

"அப்பா..." பின்னிருக்கையில் இருந்த மகள் அமெரிக்க ஆங்கிலப் பாணி கலந்த அழகு தமிழில் அழைத்தாள்.

அவள் அழைப்பில் ஒரு அவசரமும் ஒரு முறையீடும் தென்பட்டன. அந்த "அப்பா"வில் ஒரு அதிகாரமும் ஏமாற்றமும் காணப்பட்டன.

"என்னம்மா?" என்றேன். முறையீட்டை அறியும் முன்னதாகவே அன்பை ஒரு ஆயுதமாக்கிச் சமாதானத்தை உண்டாக்க முயன்றேன்.

"Can we get a car with WiFi?"

சாம் குமார்,
கிரேய்ஸ்லேக், இல்லினாய்ஸ்

© TamilOnline.com