'அனுபவம் புதுமை', 'கலாட்டா கல்யாணம்', 'சுமதி என் சுந்தரி', 'நில்.. கவனி.. காதலி..', 'திக்குத் தெரியாத காட்டில்', 'சங்கிலி', 'நவாப் நாற்காலி', 'ராஜா', 'நீதி', 'சிவகாமியின் செல்வன், 'உல்லாச பறவைகள்', 'சின்னப்பதாஸ்' போன்ற படங்களின் இயக்குநரான சி.வி. ராஜேந்திரன் (81) சென்னையில் காலமானார். அரசுப்பணியில் இருந்த ராஜேந்திரன், இளவயதிலேயே திரைப்பட ஆர்வம் கொண்டவராக இருந்தார். சகோதரர் சி.வி. ஸ்ரீதர் மூலம் திரையுலகிற்கு நுழைந்தார். 'மீண்ட சொர்க்கம்' துவங்கி, 'நெஞ்சம் மறப்பதில்லை', 'காதலிக்க நேரமில்லை', 'கலைக்கோவில்', 'வெண்ணிற ஆடை' எனப் பல படங்களுக்கு ஸ்ரீதரிடம் இணை இயக்குநராகப் பணியாற்றினார். 'அனுபவம் புதுமை' இவரது முதல் படம். சிவாஜி ஃபிலிம்ஸின் ஆஸ்தான இயக்குநர் ஆனார். சிவாஜியின் நடிப்பில் மட்டும் பதினான்கு படங்களை இயக்கிய பெருமை உடையவர். 'ஒன்ஸ்மோர்', 'வியட்நாம் காலனி' போன்ற படங்களைத் தயாரித்தார். தமிழக அரசு இவருக்குக் கலைமாமணி விருதளித்தது. இவருக்கு ஜானகி என்ற மனைவியும் பத்மஜா என்ற மகளும், ராஜீவ் என்ற மகனும் உள்ளனர். மகன், மகள் இருவருமே அமெரிக்காவில் வசிக்கின்றனர்.
|