1991
அடர் இருட்டில் சிந்திய ஒரு ஒளித்துளி போல வீட்டில் சிமினி விளக்கின் வெளிச்சம். மருது அந்த வெளிச்சத்தில் புத்தகத்தைப் பிரித்து வைத்து, மல்லாக்கப் படுத்து படித்துக் கொண்டிருந்தான். அவனருகில், வேணியம்மாள் முறத்தில் அரிசியைக் கொட்டி, தூசி தும்புகளைப் பொறுக்கிக் கொண்டிருந்தாள். வெளிச்சம் தேடி கண்டடைந்த செந்நிற எறும்புகள், அங்கொன்றும் இங்கொன்றுமாய்ப் பறந்து, அலைந்து கொண்டிருந்தன. மருது, புத்தகத்தில் வழிதவறிய ஒரு எறும்பை எடுத்து விளக்கின் சுடரில் தலையைப் பொசுக்க எடுத்துச் சென்றான்.
"டேய்!" வேணியம்மாள் அதட்ட, மருது எறும்பைத் தூர எறிந்தான்.
"அப்பிடியெல்லாம் செய்யாதடா, முனியன் தூங்கும்போது கண்ணை எடுத்துடுவாரு" வேணியம்மாள் பயமுறுத்தினாள். மருதுவின் மிரண்ட விழிகளில் அசையாமல் எரியும் சுடர் தெரிந்தது. மருதுவுக்கு முனியனின் அத்துணை கதைகளும் தெரியும். பெரும்பாலும் பள்ளிக்கூடத்தில் முனியன் பற்றிய கதைகளே அதிகம் உலாவும். யாரோ கால்களை உரசிச் செல்வதுபோல இருக்க, சட்டென எழுந்து அமர்ந்துகொண்டான்.
வேணியம்மாள் கல்நீக்கிய அரிசியை முறத்திலிருந்து அருகிலிருந்த பாத்திரத்தில் கொட்டினாள். மருது, வேணியம்மாளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவள், மருதுவை "என்ன?" என்பதுபோல் பார்க்க, அவன் தலை குனிந்து புத்தகத்தைப் பார்த்தான்.
வெளியே யாரோ பேசும் சத்தம். வேணியம்மாளின் கைமட்டும் அரிசியைத் துழாவி கொண்டிருந்தது. பேச்சின் ஒலி தீவிரமடைய, வேணியம்மாள் வெளியே சென்று பார்க்க எழுந்தாள். "படி" என்று சொல்லிவிட்டு வெளிப்புற வாசலை நோக்கிச் சென்றாள்.
செல்லமுத்துதான் யாருடனோ பேசிக்கொண்டிருந்தான். நிலவின் வெளிச்சத்தில் அவனருகில் இருப்பதும் யாரென்று தெரிந்தது. வேணியம்மாள் வருவது தெரிந்தவுடன் செல்லமுத்து பேச்சின் தீவிரத்தை மட்டுப்படுத்த, துரைக்கண்ணுவும் திரும்பிப் பார்த்தான். சட்டென வேறொரு உருவம் சைக்கிளிலிருந்து இறங்கிச் செல்லமுத்துவிடம் எதோ மெல்லிய குரலில் சொல்ல, துரைக்கண்ணு சற்றுப் பதறி "அண்ணே, நீங்க வீட்டுக்குப் போங்க. நாங்க போய்ப் பார்த்துட்டு வறோம்" என்று கூற, செல்லமுத்து செய்வதறியாது நின்றார்.
பின்பு சுதாரித்து, "சரி, அதெல்லாம் வேண்டாம்னு சொல்லு. நான் முருகேசுகிட்ட பேசுறேன்", என்று சொல்லிக்கொண்டே வீட்டிற்குள் சென்றார். துரைக்கண்ணு வந்தவரின் சைக்கிளில் தொற்றிக்கொள்ள, அந்தக் கலவையான இருளில் சைக்கிள் முனியன் கோவில் பக்கம் சென்றது.
செல்லமுத்துவைத் தொடர்ந்து வேணியம்மாள் சிறு ஓட்டமாக வீட்டிற்குள் சென்றாள். செல்லமுத்து, நாற்காலியைத் தோள் துண்டால் தட்டிவிட்டு அமர்ந்தார்.
வேணியம்மாள் "என்னங்க, என்னாச்சி?" என்றாள்.
செல்லமுத்து, "அவன் சாப்பிட்டானா?" எனக் கேட்க, வேணியம்மாள் புரிந்துகொண்டவளாய், "மருது, வா சாப்பிடலாம்" என்று அடுப்பங்கரைக்குச் சென்றாள்.
மருது, செல்லமுத்துவைப் பார்த்தான். அவர் தீவிரமான சிந்தனையில் விளக்கை உற்று நோக்கிக்கொண்டிருந்தார். மருது அடுப்பங்கரைக்குச் சென்று பார்த்தான். வேணியம்மாள் தட்டில் சாதம், ரசம் போட்டு அவனிடம் கொடுத்தாள். மருதுவை அங்கேயே சாப்பிடச் சொல்லிவிட்டு வேணியம்மாள் சென்றாள்.
அடுப்படியை அடுத்து இருந்த கொல்லைப்புறத்திலிருந்து விதவிதமான ஒலிகள் வந்துகொண்டிருந்தன. சாதம் தொண்டையில் அடைக்க, தண்ணீரை எடுத்துக் குடித்தான். அவனுக்கு, செல்லமுத்துவின் முகம் கண்முன் வந்து போனது. ஏதோ நடந்திருக்கும் போல என்று அவனுக்குத் தோன்றியது. ஒருவேளை பள்ளிக்கூடத்தில் நான் ஜோதியுடன் சண்டை போட்டதை முருகேச மாமா அப்பாவிடம் சொல்லிவிட்டாரோ? ஆனால் நான் ஜோதியுடன் சண்டை போடுவது புதிதல்லவே. யாராவது இறந்து போய்விட்டார்களோ? வேலுத் தாத்தாவாக இருக்குமோ? இல்லை, பெரியம்மா? குழப்பத்துடன் சாப்பிட்டுக்கொண்டிருந்தான். புலன்கள் அனைத்தும் வெளிப்புறம் செல்லமுத்துவும், வேணியம்மாளும் என்ன பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பதிலேயே இருந்தன.
"என்ன சொல்றீங்க? இப்பிடியெல்லாம் பண்ணுவாங்களா?" என்ற வேணியம்மாவின் அதிர்ச்சியுடன் வந்த குரல் மட்டும் மருதுவுக்குக்கேட்டது. வெளியில் போய் பார்க்கலாமா என்று நினைக்க, வேணியம்மாள் சட்டென அடுப்பங்கரைக்கு வந்தாள். அவள் சற்று படபடபடப்பாக இருப்பதுபோல் மருதுவுக்குத் தோன்றியது. வேறு ஒரு தட்டில் சாதம் போட்டு, குழம்பு ஊற்றிச் செல்லமுத்துவுக்கு எடுத்துச் சென்றாள். "அம்மா" ,என்றான். வேணியம்மாள் திரும்பி மருதுவைப் பார்த்தாள். "என்ன ஆச்சி?" "ஒண்ணுமில்ல, சாப்பிட்டுவிட்டுப் போய் படுத்துக்கோ. அப்பா முருகேச மாமாவைப் பார்க்க போறாரு” என்று சொல்லிவிட்டுச் சென்றாள்.
ஜோதியுடன் போட்ட சண்டைதான் இத்தனைக்கும் காரணம் என்று நினைத்துக்கொண்டான். சாப்பிட்டுவிட்டு தாழ்வாரத்துக்கு வந்தபோது, இருவரும் அங்கு இல்லை. அப்பா சாப்பிட்ட தட்டு காய்ந்துபோய் இருந்தது. வாசலில் எட்டிப் பார்த்தான்.
வேணியம்மாள் பக்கத்து வீட்டு சரசுவுடன் பேசிக்கொண்டிருந்தாள். திரும்பி அறைக்குச் செல்ல எத்தனித்தபோது, "முனிவீரனக் காணுமாமுல்லா" என்று சரசு பெரியம்மா கூறியது மருது காதில் விழுந்தது.
மருதுவுக்கு ஒன்றும் புரியவில்லை. "முனியக் காணுமா?" என்று தனக்குள் பலமுறை கேட்டுக்கொண்டான். சாப்பிட்டது அவனுக்கு ஏதோ செய்தது. மூத்திரம் வேறு வயிற்றை முட்டியது. சிமினி விளக்கை எடுத்துக்கொண்டு கொல்லைப்புறம் செல்ல கதவைத் திறந்தான். மரங்கள் இருளுக்குள் பாதி அமிழ்ந்து மிதந்துகொண்டிப்பது போல இருந்தன. வேக வேகமாக மூத்திரம் இருந்துவிட்டு, சிமினி விளக்கைச் சட்டென்று எடுக்க அது அணைந்து போனது. பயம் உச்சந்தலையை அடைந்து வழிதெரியாமல் தடுமாற, யாரோ கையை பிடித்து இழுக்க "அம்மா" என அலறினான் மருது.
*****
2004
மருது ரயிலிருந்து இறங்கும்போது காலை ஐந்து மணி இருக்கும்.இருவர் இறங்கிப் போய்க்கொண்டிருந்தனர். ரயில் நிலையத்தில் அவ்வளவாகக் கூட்டமும் இல்லை. ஸ்டேஷன் மாஸ்டர் அரைத்தூக்கத்தில், பச்சை விளக்கைக் காட்ட, ரயில் நகர்ந்தது.
வெளியே வீரமுனியன் ஊருக்குச் செல்லும் முதல் பேருந்துக்குக் காத்திருந்தான். எதிரில் இருந்த டீக்கடை திறக்க ஆயத்தமாகிக் கொண்டிருந்தது. பேருந்து வர நேரமாகும் என்பதால் மருது, அங்கு இருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தான். மருதுவுக்கு கண் செருக, பெஞ்சில் சாய்ந்து கண்ணை மூடிக்கொண்டான்.
*****
1991
"டேய், நாந்தாண்டா" என வேணியம்மாள் குரல் கேட்டது. மருதுவுக்கு உயிர் வந்தது. அந்தக் கை அவனை இழுத்துக்கொண்டு வராந்தாவுக்குச் சென்றது. விளக்கின் அருகில் வந்தபின் மருது வேணியம்மாளின் முகம் பார்த்து உறுதிப்படுத்திக்கொண்டான். "இங்கேயே இரு" எனச் சொல்லிவிட்டு வேணியம்மாள் மீண்டும் இருளில் கரைந்தாள். சிமினி விளக்கின் ஓரத்தில் ஒரு செந்நிற எறும்பு மெதுவாக மேலேறி சுடரின் அருகில் சென்றது. அது நெருப்பைத் தொட்டு, பொசுங்கி விழும் கணத்தை மனதுக்குள் ஓட்டிப் பார்த்துக்கொண்டிருந்தான். சட்டென வீரமுனி ஞாபகம் வர, அந்த எறும்பைச் சுண்டிவிட்டான். அது இருளுக்குள் சத்தம் இல்லாமல் எங்கோ போய் விழுந்தது. பள்ளியில் இன்று கட்டையன் சொன்ன செய்தி ஏனோ வந்து போனது மருதுவுக்கு. "பக்கத்துத் தெரு செல்வி அக்கா வீரமுனிகிட்ட எழுதி வச்சதும், மறுநாளே வீரமுனி அடிச்ச அடியில சுருண்டு போய் விழுந்து கிடந்தாரு அய்யாதுரை அண்ணன்" என்று சொன்னபோது ஏனோ நம்பும்படியாக இருந்தது. அய்யாதுரை அண்ணனை அடிக்க வீரமுனியாலதான் முடியும்.
போனதடவை படையல் போட்டப்ப அம்மாச்சி சன்னம் வந்து ஆடினதை எப்போது நினைத்தாலும் மருதுவுக்கு பயம் தொற்றிக்கொள்ளும். எப்பவும் விபூதி வச்சிக்கிட்டு கன்னத்தில் குழிவிழ எல்லோருகிட்டயும் பேசுற அம்மாச்சிக்கு எப்படி முகம் அப்படி மாறிப்போச்சு என்பதைப் பலமுறை அவன் வேணியம்மாளிடம் கேட்டிருக்கிறான். கெட்டது செய்றவங்கள வீரமுனி பாத்துக்குவான் என்பது அசைக்க முடியாது நம்பிக்கை. மருதுவுக்கு வீரமுனி, அம்மாச்சியாகவும், பக்கத்துத் தெரு வீரப்பன் மாமாவாகவும் மட்டுமே தெரியும். எப்பிடி வீரமுனி காணாமல் போவார்? எங்கு போயிருப்பார்? வினாக்களுடனே சுவரில் சாய்ந்து உறங்கிப்போனான்.
***** 2004
"கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை..." திடீரென வந்த சத்தத்தில் பதறி எழுந்தான் மருது. எதிரில் டீக்கடை திறந்திருந்தது. கைகளால் முகத்தை அழுந்தத் துடைத்தான். எதிரில் இருந்த டீக்கடைக்குச் சென்று டம்ளரில் தண்ணீர் எடுத்து வாய் கொப்பளித்தான். டீக்கடைக்காரர், நெற்றி நிறைய விபூதிப் பட்டையுடன், தண்ணீர்த் தொட்டியில் நீர் நிரப்பிக்கொண்டிருந்தார். மருது "ஒரு டீ குடுங்கண்ணா" என்றான். அவர், தலைக்குமேல் இருந்த புகைப்படத்தை கும்பிட்டுவிட்டு, டீ போட ஆரம்பித்தார். அந்தப் புகைப்படத்தை உற்றுப் பார்த்தான். ‘வீரமுனி துணை’ என்ற வாசகம் இருந்தது. வீரமுனி பெரிய கண்களைத் துருத்தி, கையில் பெரிய அரிவாளுடன், விதவிதமான ஆபரணங்கள் அணிந்து, வெள்ளைக் குதிரையில் அமர்ந்திருந்தார்.
மருதுவுக்கு ஏதோ ஞாபகம் வந்துபோனது. இந்த மாதிரியான, வீரமுனியை அவன் கோவிலில் பார்த்தது கிடையாது. கரிய நிறத்தில், தலைப்பாகையுடன், கையில் அரிவாளுடன், கோரப் பற்கள் வெளியே தெரிய இருக்கும் வீரமுனியைத்தான் கற்பனை செய்து வைத்திருந்தான். "தட்" என்று டீக்கடைக்காரர் வைத்த டீ அவனை மீட்டது. டீக்கடைக்காரர், "அது இங்க நம்ம பையன் ஒருத்தன் கொடுத்தான்" என்றார். "ஆளாளுக்கு ஒரு உருவத்தை கொடுத்துக்குறானுங்க. இதுல சினிமால நடிக்கிற ஒருத்தர் மாதிரி இருக்காரு" என்று சொல்லிச் சிரித்தார். மருது சிரித்துக்கொண்டே டீயைக் குடித்தான். "அவர் எப்பிடி, எங்க இருந்தா என்ன? நம்பிக்கை மட்டும் போகல" என்றார் டீக்கடைக்காரர். மருதுவுக்கு ஆச்சரியமாக இருந்தது. வீரமுனி கோவிலிலிருந்து காணாமல் போய்ப் பத்து வருடங்களுக்கும் மேல் ஆகிறது. ஆனால், நம்பிக்கை மட்டும் ஒரு சுவடுபோல மிச்சம் இருந்தது. தொலைவில் வீரமுனியூர் பேருந்தைக் கவனித்துவிட்டான். அவசரமாக மிச்சமிருந்த டீயைக் குடித்துவிட்டு, காசு கொடுத்துவிட்டு ஓடிப்போய்ப் பேருந்தில் உட்கார்ந்தான்.
*****
1991
வேணியம்மாள், மருதுவைப் பாயில் படுக்க வைத்துவிட்டு, செல்லமுத்துவுக்காக காத்திருந்தாள். பயமும், கவலையும் ஒன்றுசேர ஏதோ ஒரு அசம்பாவிதம் நடப்பதற்குமுன் இருக்கும் சூழ்நிலை வெளியில் இருப்பதாக அவளுக்குத் தோன்றியது. வீரமுனியை மனதுக்குள் நினைத்துக்கொண்டாள். இரண்டு நாட்களுக்கு முன்னால் சரசுவுடன் வீரமுனி கோவிலுக்குச் சென்றது அவளுக்கு ஞாபகம் வந்தது.
பொழுது அடங்கியிருக்க, வேணியம்மாளும், சரசுவும் ஏதோ பேசிக்கொண்டு நடந்தே கோவிலுக்கு வந்திருந்தார்கள். வீரமுனி கோவில் ஊரிலிருந்து சற்றுத் தொலைவில் வயல்களின் நடுவில் ஒரு தோப்பில் இருந்தது. கோவிலில் வேறு யாரும் அப்போது இருந்ததாகத் தெரியவில்லை. வேணியம்மாளும், சரசுவும் கறுப்பதாயும், வெள்ளையம்மாளும் இருக்கும் இடத்தில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டுக் கண்மூடி நின்றார்கள். கறுப்பதாயின் கண்ணில் பொதிந்திருந்த அந்த வெள்ளிக் கண்களில் விளக்கொளி பிரதிபலித்தது. வீரமுனியைப் பார்ப்பதற்கு முன் கருப்பதாயையும், வெள்ளையம்மாளையும் வணங்கிவிட்டுத்தான் செல்லவேண்டும். இருவரும், வீரமுனியின் சகோதரிகள் என்ற ஒரு கதை இருந்தது. வீரமுனியின் சிலை சிறியதாக, கரிய நிறத்தில் இன்னெதென்று சரியாகத் தெரியாத உருவத்தில், ஒரு கையில் பெரிய அரிவாளைத் தூக்கியவாறும், மறு கையில் வேறொரு ஆயுதத்துடனும் இருந்தது. அதில், வெள்ளைநிறப் பட்டுத்துணி ஒன்று இடுப்பின் கீழ் கட்டியிருந்தது.
வேணியம்மாள் அருகில் இருந்த விளக்கில் எண்ணை ஊற்றி ஏற்றிவைத்தாள். வீரமுனி உக்கிரம் அடைந்ததுபோல வெளிச்சம் பிரதிபலித்தது. வேணியம்மாள் கண்மூடி தியானித்தாள். அவள் உடல் மெல்ல ஆடுவதுபோல் இருந்தது. சரசு, "அய்யா, எல்லாரையும் காப்பாத்து" எனக் கூற, வேணியம்மாள் விடுபட்டுக் கலைந்தாள். இருவரும் பேச்சியம்மாள் சிலை இருக்கும் இடம் நோக்கிச் செல்லும்போது, மணியரசு வாத்தியார் தூரத்தில் எதோ ஒரு புத்தகத்துடன் கோவிலை நோக்கி வந்துகொண்டிருந்தார்.
சட்டென, வாசலில் செருப்புச் சத்தம் கேட்டது. செல்லமுத்து தோள்துண்டால் முகத்தைத் துடைத்துக்கொண்டே நுழைந்தார்.
"என்னங்க ஆச்சி? முருகேச அண்ணனைப் பாத்தீங்களா?" "ம்... பார்த்தேன். ஆனா அதுக்குள்ள விஷயம் கைமீறிப் போயிடுச்சி," சொல்லிக்கொண்டே நாற்காலியில் அமர்ந்தார் செல்லமுத்து.
வேணியம்மாளுக்கு ஒன்றும் புரியவில்லை, ஆனால் பெரிதாக எதோ தப்பு நடந்துவிட்டதாக மட்டும் புரிந்தது. "நான் அங்க போறத்துக்குள்ள, நம்ம ஊரு பசங்க பேச்சியுருக்கறானுங்ககிட்ட போய், வீரமுனிய திருப்பி கொடுங்கன்னு சொல்லி சண்டை போட்ருக்கானுங்க. சண்டை முத்திப்போய் நம்ம ரத்தினம் பையன், அவங்க ஊர்க்காரன் கையை வெட்டிப்போட்டான்" எனச் செல்லமுத்து சொல்ல, வேணியம்மாளுக்கு நிலைமையின் உக்கிரம் புரிந்து, நடுங்கிப் போய் நின்றாள்.
*****
2004
பேருந்து ஒரு பள்ளத்தில் ஏறி இறங்கியது. மருது கண் விழித்துப் பார்த்தான். பேருந்து பஷீர் மாமாவின் வெற்றிலைத் தோட்டத்தைக் கடந்து போய்க்கொண்டிருந்தது. மருது, தோள்பையை எடுத்து மடியில் சரிசெய்து வைத்துக்கொண்டான். பேருந்தில் அவ்வளவாகக் கூட்டமில்லை. வார விடுமுறை என்பதால் பள்ளிக்கூடம் செல்லும் கும்பலும் ஏறவில்லை. பள்ளிக்கூடம் என்றதும் மருதுவுக்கு ஜோதியின் ஞாபகம் வந்தது. அவள் ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு, இருவரும் படித்த பள்ளியிலேயே வேலைபார்ப்பதாகக் கேள்விப்பட்டிருந்தான். ஒருமுறை, சந்தானம் மாமா பெண் கல்யாணத்திற்குச் சென்றபோது அவளை மருது பார்த்திருந்தான். அவ்வப்போது அவள் பற்றிய செய்திகள் மட்டும் யார் மூலமாவது தெரிந்துகொள்வான். இரு குடும்பமும் ஒன்றாக இருந்திருந்தால், இந்நேரம் வேறுமாதிரியாக இருந்திருக்கும் என்று நினைத்துக்கொண்டான்.
"வீரமுனி கோவில்" என்று சத்தம் கேட்க மருது நினைவிலிருந்து மீண்டான். மருது, ஜன்னல் வழியாக வீரமுனி கோவிலுக்குப் போகும் பாதையை பார்த்தான். அது, புற்களும் செடிகளும் நிறைந்து, ஒற்றையடிப் பாதையாக மாறியிருந்தது. தூரத்தில் வயல்பரப்பின் மத்தியில், மரங்கள் அடர்ந்த சோலையில் கோவில் இருந்தது. வீரமுனி காணாமல் போனதிலிருந்து, கூட்டம் குறையத் தொடங்க, சாலை ஓரத்திலிருந்த கடைகள் இடம்பெயர்ந்துவிட்டன. தூரத்தில் தெரிந்த கோவில் ஏதோ ஒரு ரகசியத்தைப் பாதுகாத்துக்கொண்டு நின்றது.
அடுத்த நிறுத்தத்தில், மருது இறங்கினான். வழியிலிருந்த டீக்கடையில் கூட்டம் அதிகமில்லை. இரும்புக் கதவைத் திறந்துகொண்டு வீட்டினுள் செல்ல வேணியம்மாள் வெளியில் வந்து பார்த்தாள். "நெனச்சேன், நீனாதான் இருக்கும்னு" என்று சொல்லிக்கொண்டே அவனை நோக்கி வந்தாள்.
செல்லமுத்து நாற்காலியில் அமர்ந்து டீ குடித்துக்கொண்டிருந்தார். மருது வருவதைப் பார்த்தவுடன், "வாப்பா, உன்னப் பத்திதான் அம்மாகிட்ட பேசிகிட்டு இருந்தேன்." என்றார். செல்லமுத்து காலையிலே எங்கேயோ கிளம்பி இருப்பதை மருது கவனித்தான். "வெளியே போறிங்களா?" எனக் கேட்டான். "ஆமாம்பா. மணியரசு வாத்தியார் காலமாயிட்டாரு. இன்னிக்கு கருமாதி."
"ஓ! எப்ப? என்ன ஆச்சி?" என்று பதட்டத்துடன் கேட்டான். "நல்லாத்தான் இருந்துருக்காரு. பட்டுன்னு ஒருநாள் காலையில் உசுரு போய்டுச்சு" என்றார் செல்லமுத்து. "சரி, நீ படுத்து கொஞ்சம் ஓய்வு எடு", என்று சொல்லிக்கொண்டே அவர் வெளியே சென்றார். வேணியம்மாள் காபியை ஆற்றி மருதுவிடம் கொடுத்தாள். அவன் குடித்துக்கொண்டே மணியரசு சார் பற்றி நினைத்துக்கொண்டிருந்தான். சார் நன்றாக வரலாற்றுப் பாடம் நடத்துவார். பள்ளியில் படிக்கும்போது அவருக்கு மருதுவைவிட ஜோதியின் மீதுதான் அதிகமான பிரியம். அவர், நிறையப் பத்திரிக்கைகளில் வரலாறு சம்பந்தமாக எழுதியும், நிறையப் புத்தகம் வெளியிட்டும் ஊரில் அனைவரும் மதிக்கக்கூடிய ஒருவராக இருந்தார். மருதுவுக்கு அசதியாக இருக்கவே, அறையில் போய்ப் படுத்துக்கொண்டான்.
*****
1991
கையை வெட்டிய விஷயம் பேச்சியூருக்குத் தெரிய வர, பெரிய கும்பல் ஒன்று வீரமுனி ஊருக்கு வந்து மிரட்டிவிட்டுச் சென்றது. இரு ஊர்க்காரர்களும் சண்டைக்குத் தயாராகினர். செல்லமுத்து இரண்டு ஊர்க்காரர்களிடமும் எவ்வளவு பேசித் தடுத்தும் யாரும் கேட்கவில்லை. செல்லமுத்து போலீசுக்குத் தகவல் கொடுத்துவிட, அவர்கள் பேச்சியூருக்கும், வீரமுனியூருக்கும் 144 தடை போட்டு யாரும் வெளியே வரக்கூடாது என்று கூறிவிட்டனர். இரண்டு நாட்கள் கழித்து, ஊர் பஞ்சாயத்து காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் நடந்தது. அதில், நடந்த வாக்குவாதத்தில் முருகேசனுக்கும், செல்லமுத்துவுக்கும் மனத்தாங்கல் வந்து இருவரும் பேசிக்கொள்வதே நின்று போனது.
காவல்துறை எவ்வளவு தேடியும் வீரமுனி சிலையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. வீரமுனி சிலை கிடைக்கும்வரை, திருவிழா எதுவும் நடத்தக்கூடாது என்று தடை போடப்பட்டது. பள்ளியில் மருது, ஜோதியுடன் பேச எவ்வளவு முயன்றும் ஜோதி அவள் அப்பாவிற்குப் பயந்து பேசாமல் இருந்தாள். அதன்பிறகு, ஜோதி மேல்படிப்புக்கு வேறு பள்ளிக்கு மாறிவிட, தொடர்பற்றுப் போனது.
*****
2004
மருது, எழுந்து குளித்து அம்மாவுடன் ஊர்க்கதை பேசிக்கொண்டிருந்தான். வேணியம்மாள், மருதுவை ஒருமுறை வீரமுனி கோவிலுக்குச் சென்றுவருமாறும், வீரமுனி இருந்த இடத்தில் விளக்கேற்றி வைத்துவிட்டு வருமாறும் கூறிக்கொண்டிருந்தாள். செல்லமுத்துவும், அதே நேரத்தில் வீட்டிற்குள் வந்தார். வேணியம்மாள் அவர் வருவதைப் பார்த்துவிட்டு, "வாங்க, நீங்களும் சாப்பிடுறீங்களா?" எனக் கேட்டாள். "இல்ல, வேண்டாம்." என்று சொல்லிக்கொண்டே மேசையின் மீது ஒரு ஒரு புத்தகக் கட்டை வைத்தார்.
"என்னப்பா இது?" எனக் கேட்டான் மருது.
"ஒண்ணுமில்லப்பா, இந்தப் புத்தகமெல்லாம் மணியரசு வாத்தியார் வீட்டில் இருந்தது. அவர் போனதுக்கு அப்புறம், இத வேற யாரும் படிக்கிறதில்ல. அதனால, நான் கொஞ்சம் உனக்காக எடுத்துக்கிட்டு வந்தேன். நீதான், எப்போதும் புத்தகம் படிப்பியே" என்று சொல்லிக்கொண்டே அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தார்.
மருது அந்தப் புத்தகங்களைப் பார்த்தான். பெரும்பாலும் வரலாறு சம்பந்தமான புத்தகங்கள்.
வேணியம்மாளும், செல்லமுத்துவும் வேறேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். மருதுவுக்கு, முருகேச மாமாவோ, ஜோதியோ அங்கு வந்தார்களா என்று கேட்கத் தோன்றியது, ஆனால், கேட்கத் தயக்கம். சாப்பிட்டுவிட்டு அந்தப் புத்தகங்களுடன் தன் அறைக்குச் சென்றான். புத்தகங்களை ஒவ்வொன்றாக எடுத்துப் பிரித்துப் பார்த்தான். பெரும்பாலும் முகலாயர்கள், சோழ, பாண்டிய மன்னர்களின் ஆட்சி பற்றி நிறையப் புத்தகங்களும், தமிழ்நாட்டில் நடந்த தொல்பொருள் ஆராய்ச்சியைப் பற்றிய புத்தகங்களும் இருந்தன. எதையும் படிக்கத் தோன்றவில்லை. அவன் எண்ணமெல்லாம் ஜோதியுடன் பேசுவதற்கான வாய்ப்புகள் பற்றியே இருந்தது. ஒருமுறை மணியரசு சார் வீடுவரை போய்ப் பார்க்கலாமா என்று தோன்றியது. மீண்டும் தயக்கம் தடுத்தது.
சிறிது நேரம் கழித்து, அந்தப் புத்தகங்களை நகர்த்தி வைக்கும்போதுதான் கவனித்தான். அதில் ஒன்று மணியரசு சார் எழுதியது. சார் எழுதுவார் என்று தெரியும். அவர் எழுதிய எதையும் படித்ததாக அவனுக்கு நினைவில்லை. ஆர்வம் மேலிட அதைப் படிக்க ஆரம்பித்தான். பெரும்பாலும், தமிழ்நாட்டில் நடந்த முகலாய மன்னர்களுடைய படையெடுப்பும், ஆக்கிரமிப்பும் அதனைப் பற்றிய விரிவான ஆய்வறிக்கைகளும் இருந்தன. அவர்களுக்குப் பயந்து, கோவிலில் இருந்த மதிப்பு மிக்க பொருட்கள் எவ்வாறு பாதுகாக்கப்பட்டன என்ற செய்திகள் இருந்தன. பல அழகிய சிலைகள் சேதமடையாமல் இருக்க, வேறு ஊர்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்ட தகவல்கள் இருந்தன. பாதி படிக்கையில் அப்படியே உறங்கிப்போனான். வேணியம்மாளின் கவலை மருதுவின் கல்யாணம் பற்றியே இருந்தது. சொந்த பந்தங்களில் எல்லா இடத்திலும் விசாரித்தும் அவளுக்குப் பெரிய திருப்தி இல்லாமல் போக, அவள் உள்மனதுக்குள் முருகேசன் மகள் ஜோதியைக் கேட்கலாம் என்ற ஆசை இருந்தது. ஆனால், அதை எப்படி செல்லமுத்துவிடமும், மருதுவிடமும் சொல்வது என்று குழம்பியிருந்தாள். வீரமுனி காணாமல் போனதிலிருந்து செல்லமுத்துவும், முருகேசனும் பேசிக்கொள்வதில்லை. அவர்கள் இருவரும் பேசுவது என்பது வீரமுனி திரும்பி வந்தால் மட்டுமே முடியும்.
வேணியம்மாளுக்கு முனி திரும்பி வருவார் என்ற நம்பிக்கை அறவே இல்லாமல் இருந்தாலும், அவள் தினந்தோறும் வேண்டிக்கொண்டேதான் இருக்கிறாள். ஏதோ நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை மட்டும் இருந்தது. மருதுவின் அறைக்குச் சென்று அவனை எழுப்பி, குளித்துவிட்டு வீரமுனி கோவிலுக்குப் போய்வருமாறு கூறினாள். மருது, எழுந்திருந்தான். அருகில், மணியரசு சார் எழுதிய புத்தகம் தலைகுப்புறக் கிடந்தது. வீரமுனி கோவிலில் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. வெயில் அடங்கி, பக்கத்து வயல்களில் வேலை செய்துகொண்டிருப்பவர்கள் எல்லோரும் கிளம்பியிருந்தார்கள். அவன், எப்போது கோவிலுக்கு வந்தாலும் அவனுடைய சிறுவயதில் நடந்த திருவிழா ஞாபகங்கள் வந்துபோகும். இப்போதெல்லாம் ஊரில் மிகப்பெரிய திருவிழா என்று எதுவும் இல்லை.
பெரிய திருவிழா என்றால் அது வீரமுனி கோவிலில் ஒவ்வொரு வருடமும் நடக்கும் 'படையல்' திருவிழாதான். ஒரு வாரம் முழுவதும் மிகப் பெரியதாக நடக்கும். சுற்று வட்டாரத்திலிருக்கும் எல்லா ஊரிலிருந்தும் வருவார்கள். ஒவ்வொரு நாளும் ஒரு பெரிய குடும்பம் எடுத்து மிக விமர்சையாக நடத்தும். இதில் யார் நன்றாக நடத்துகிறார்கள் என்ற போட்டி வேறு இருக்கும். பக்கத்து ஊரில் இருக்கும் முருகேச மாமா நடத்தும் படையல் இவனுக்கு ரொம்பப் பிடிக்கும். பக்கத்து ஊரிலிருந்து ராட்டினம், கறி விருந்து என்று பிரமாதப் படுத்துவார். இரவில் சினிமா பாட்டுக் கச்சேரி இருக்கும். ஒட்டுமொத்த ஊரும் சிவாஜி, எம்ஜிஆர் பாடல்களில் லயித்துப் போய் விடிய விடியப் பாட்டு கேட்கும். வருடத்தின் மற்ற நாட்கள் அனைத்தும் இந்த ஒரு வாரத்திருவிழாவை மையமாக வைத்தே நகரும். சோற்றுக்கும், சொந்தத்துக்கும் ஒரு பஞ்சமும் இருக்காது. பத்து வருடங்களாக இந்தத் திருவிழா இல்லை. என்றைக்கு வீரமுனி அந்தக் கோவிலிலிருந்து காணாமல் போனாரோ அன்றைக்கு நின்றுபோனது. மருது, வீரமுனி இருந்த இடத்தில் விளக்கேற்றி வைத்துவிட்டு, சற்றுத் தள்ளி இருந்த ஒரு மேடையில் அமர்ந்துகொண்டான். அரச மரங்களில் இருந்த சிறிய இலைகள் படபடக்க, காற்று மெல்ல அவனை வருடிச் சென்றது. எடுத்து வந்திருந்த புத்தகத்தை மீண்டும் படிக்க ஆரம்பித்தான். மணியரசு சாரின் எழுத்து நடை சற்று அயர்ச்சியை ஏற்படுத்தினாலும், தகவல்கள் சுவாரசியமாக இருந்தன. பல ஊர்களுக்குச் சென்று கோவில் சிலைகளை எல்லாம் சார் ஆராய்ச்சி செய்ததைப் படிக்க ஆச்சரியமாகவும், திகைப்பாகவும் இருந்தது. புகைப்படத்தில் இருந்த சிலைகள் பல நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் இருந்தன. யாரோ பேசும் சத்தம் கேட்க நிமிர்ந்து திரும்பிப் பார்த்தான். மரத்தின் பின்பக்கம் அமர்ந்திருந்த அவனுக்குச் சரியாகத் தெரியாததால் மேடையிலிருந்து இறங்கி எட்டிப் பார்த்தான்.
ஜோதியும், அவள் அம்மாவும் வீரமுனி இருந்த இடத்தில் விளக்கு ஏற்றிக்கொண்டிருந்தார்கள். மருதுவுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. சட்டென, எங்காவது ஒளிந்துகொள்ளலாமா என்று யோசிக்கும்போதே, அதற்கு அவகாசம் இல்லாமல், இருவரும் திரும்பிப் பேச்சியம்மாள் இருக்கும் இடத்தை நோக்கி வரும்போது, மருது நிற்பதைப் பார்த்துவிட்டார்கள். ஜோதியின் கண்களில் சட்டென வந்துபோன அந்த ஆச்சரியத்தை மருது கவனித்தான். பல நாட்கள் கழித்து ஜோதியை இன்று பார்க்கிறான். அதே, நெளிந்த நீண்ட கூந்தலும், விரிந்த கண்களும், குழிவிழும் கன்னங்களும் பெரிய மாற்றம் இல்லாமல் இருந்தாலும், எதோ ஒரு மாற்றம் தெரிந்தது.
அவனைக் கடந்து செல்கையில் ஜோதியின் அம்மா மருதுவைப் பார்த்து, "மருது, நல்லா இருக்கியாப்பா?" எனக் கேட்டாள்.
"ம்... நல்லா இருக்கிறேன். நீங்க அத்தை?" என்றான் மருது.
"நல்லா இருக்கிறேன். சென்னயிலதான வேலை பார்க்கிற?"
"ஆமா, அத்தை. மாமா எப்பிடி இருக்கிறாங்க?" எனக் கேட்டான் மருது.
"நல்லா இருக்காரு. அம்மாவைக் கேட்டதா சொல்லு" என்று சொல்லிவிட்டு அவள் நகர, மருதுவும், ஜோதியும் கண்களால் நலம் விசாரித்துக்கொண்டார்கள்.
சிறிது தூரம் சென்று, ஜோதி அங்கு இருந்த ஒரு சிலைக்கு விளக்கு ஏற்றி வைத்தாள்.
"ஏண்டி, மணியரசு சார் சொன்னாருன்னு, நீயும் இந்தச் சிலைக்கு விளக்கு ஏத்தி வைக்கிற. இது என்ன சிலைன்னு இதுவரைக்கும் தெரியல" என்று ஜோதியைப் பார்த்து கேட்டாள் அவள் அம்மா. "பேரு முக்கியமா? இது ஒரு சக்தி வாய்ந்த சிலைன்னு மணியரசு சார் சொல்லியிருக்காரு. இதப்பத்திகூட சார் நிறைய எழுதியிருக்காரு" என்று சொல்லிக்கொண்டே மருதுவின் கையில் இருந்த புத்தகத்தைப் பார்த்தாள் ஜோதி. அவள் அம்மா நடந்துபோக. ஜோதி சாமி கும்பிடுவது போல மீண்டும் திரும்பி மருதுவைப் பார்த்துச் சென்றாள்.
மருதுவுக்கு ஒரே சந்தோஷம். பல நாட்களுக்குப் பிறகும் ஜோதி அவன்மேல் பிரியமாக இருப்பதாக மருதுவுக்குத் தோன்றியது. சிரித்துக்கொண்டே அந்தப் புத்தகத்துடன் மீண்டும் அந்த மேடையில் அமர்ந்து படிக்க முயன்றான். கவனம் செலுத்தமுடியவில்லை. ஜோதி தூரத்தில் வயல்மேட்டில் ஏறிப் போய்க்கொண்டிருந்தாள். சிறு வயதில் ஜோதியுடன் விளையாடியதும், சண்டையிட்டதும் நினைவுக்கு வந்தன. சிரித்துக்கொண்டான். அப்போதுதான், ஜோதி சொன்னது ஞாபகம் வர அவன் மேடையிலிருந்து இறங்கி அந்தச் சிலையை மீண்டும் பார்த்தான். அது ஒரு பெண்ணின் சிலை. அந்தச் சிலையை இதுநாள் வரை அங்கு பார்த்த ஞாபகமில்லை. மிக நேர்த்தியான வேலைப்பாட்டுடன் பரதம் ஆடுவது போல ஒற்றைக் கைதூக்கி, மறு கை எதோ ஒரு முத்திரையுடன் இருந்தது. கை விரலில் இருந்த நகங்களும், கண்ணின் இமைகளும்கூட மிகத் தெளிவாக அந்த விளக்கின் வெளிச்சத்தில் தெரிந்தது. மருது, ஜோதி சொன்னது ஞாபகம் வர, கையில் இருந்த புத்தகத்தில் இதுபற்றி ஏதேனும் குறிப்பு இருக்கிறதா என்று பக்கங்களை புரட்டிப் பார்த்தான். சட்டென, ஒரு பக்கத்தில் இதன் புகைப்படம் தெரிய, அதனைப் படித்தான்.
இது பல்லவர்கள் காலத்துச் சிலையாம், எங்கோ புதையுண்டு இருந்ததாம். யாரோ ஒரு விவசாயி இதனைக் கண்டடைய, ஒரு கிராமத்தில் இதனை வழிபட்டுக் கொண்டிருந்தார்களாம். மணியரசு சார் இதனை மீட்டெடுத்து, மறைந்திருந்த அதன் உருவத்தினைக் கொடுத்ததாகவும் எழுதியிருந்தார். தன் கிராமத்தில் பல்லவர்கள் காலச் சிலை ஒன்று இருப்பதும், அது மணியரசு சார் மீட்டெடுத்தது என்பதையும் நினைத்துப் பார்க்க மருதுவுக்குப் பெருமையாக இருந்தது. அந்தச் சிலையையே உற்று நோக்கி அழகை ரசித்தான். இருட்ட ஆரம்பிக்கவே மேற்கொண்டு படிக்க இயலாமல் போக, வீட்டுக்குச் செல்ல முடிவெடுத்தான். தூரத்தில் ஒளி ஒன்று அவனை நோக்கி வருவதுபோல் இருந்தது. சிறிது நேரத்தில் அதன் உருவம் பெரிதானது, அது ஒளி அல்ல எனப் பட்டது. ஆபரணங்கள் அணிந்த ஓர் அழகிய பெண். சன்னமான தாளத்தில், அவள் மெல்ல ஆடிக்கொண்டே மருதுவை நோக்கி வருகிறாள். அருகில் வரும்போது தான் தெரிகிறது அது ஜோதி என்பது. கையில் ஒரு விளக்கு ஏந்தியிருக்கிறாள். மருது, அவள் இருக்கும் இடம்நோக்கிச் செல்ல முற்பட, அவள் வேறொரு பெண் உருவமாக மாறி, வேகமாக ஆடுகிறாள். இந்தப் பெண்ணை மருது எங்கோ பார்த்திருக்கிறான். அதுவும், செதுக்கியது போன்ற நீண்ட விரல்களும், கூர்மையான மூக்கும், கண்களில் தெரிந்த அந்தக் கனிவும், மெல்லிய உதட்டோரத்தில் ஒட்டியிருந்த அந்தப் புன்னகையும் மருது பார்த்திருக்கிறான்.
சட்டெனப் புலப்பட்டது. இது வீரமுனி கோவிலில் இருக்கும் அந்தச் சிலை பெண். ஆமாம், அவள்தான். மருது, பயந்து பின்வாங்கி ஓடுகிறான். அப்போது குதிரைச் சத்தம் கேட்க, திரும்பிப் பார்க்கிறான். வெள்ளைக் குதிரையில் பல வண்ண ஆடை உடுத்திய, கறுத்த உடல் கொண்ட, கையில் பெரிய அரிவாளுடன் வீரமுனி. மருது, பயந்து மீண்டும் ஓட முயற்சிக்க, அவன் கால் தரையில் படாமல் ஒரே இடத்தில் ஓடுவதுபோல இருந்தது. வீரமுனி அவனருகில் வந்து அரிவாளை ஒரு சுழட்டு சுழட்ட, "அம்மா" என்று கத்திக்கொண்டு எழுந்தான் மருது.
உடல் வியர்த்திருந்தது. என்ன இப்படி ஒரு கனவு! எழுந்து தண்ணீர் குடித்தான். வெளியில் செல்லமுத்துவின் குறட்டை. அவனுக்கு மணியரசு சார் எழுதியது அப்போது ஞாபகம் வந்தது. "மறைந்திருந்த அதன் உருவத்தினை மீட்டெடுத்தேன்". எதனுள் அது மறைந்திருந்தது? என்று கேட்டுக்கொண்டான். சட்டென அவனுக்கு ஏதோ புலப்பட, உடல் சற்று பதறிச் சிலிர்த்தது. தூக்கம் முற்றிலும் கலைந்து போனது.
அப்படி இருக்குமோ! அப்பாவை எழுப்பிச் சொல்லிவிடலாமா. வேண்டாம். என்ன விளைவு ஏற்படும் என்று யோசிக்கவே முடியவில்லை. மறுநாள் காலையில், அவசர அவசரமாக மருது வீரமுனி கோவிலுக்குச் சென்று அந்தச் சிலையை மீண்டும் ஆராய்ந்தான். அவன் நினைத்தது சரிதான். அப்பிடியானால், வீரமுனி சிலை எங்கும் தொலைந்து போகவில்லை. அது இங்குதான் இருக்கிறது.
இந்தச் சிலையைப் பல வருடங்களாக வீரமுனி என்று இந்தக் கிராமம் நினைத்து வழிபட்டிருக்கிறது. அதற்கு முன் பல வருடங்கள் மண்ணில் புதைந்திருந்ததால் மண் இறுகி அதன் உருவம் வேறொன்றாக மாறியிருந்திருக்கிறது. அதைத்தான் மணியரசு சார் ஆராய்ந்து, அதைச் சுத்தம் செய்து இந்தப் பெண் உருவச் சிலையை மீட்டெடுத்திருக்கிறார். மருதுவுக்குப் புரிந்துவிட்டது. சந்தோஷமாக இருந்தது. இதை அனைவரிடமும் சொல்லி, இரண்டு ஊருக்கும் இருந்த பகையை நீக்கி ஒன்றுசேர்த்துவிடலாம் என்று நினைத்துக்கொண்டான்.
ஆனால், இதைச் சொன்னால் மணியரசு சாரின் குடும்பத்துக்கு ஆபத்து ஏற்படும். சார் சேர்த்துவைத்திருந்த அத்துணை பேரும் புகழும் போய்விடும். இதைச் சொல்லாவிட்டால் இந்த இரு கிராமமும் இனி சேரவே சேராது, ஜோதியுடனான வாழ்க்கையும் சாத்தியமாகாது.
ஏதோ ஒரு யோசனை பிறக்க, சிலையை எடுத்துக்கொண்டு வீரமுனி இருந்த இடத்திற்குச் சென்றான்.
*****
இரண்டு வாரம் கழித்து மருது மீண்டும் ஊருக்கு வந்தான். அம்மாவும், அப்பாவும் கண்டிப்பாக வரவேண்டும் என்று கூறியிருந்தார்கள். பேருந்தினுள், எல்லோர் முகத்திலும் ஒரு நம்பிக்கையும், சந்தோஷமும் தெரிந்தது. வீரமுனி கோவில் நிறுத்தத்தில் பேருந்து நிற்க, ஒரு பெரும் கூட்டம் கோவிலை நோக்கிப் போய்க்கொண்டிருந்தது. இப்போது கோவிலுக்கு செல்லும் பாதை செப்பனிடப்பட்டு, புதியதாகக் கடைகள் முளைத்திருந்தன.
மருது, அடுத்த நிறுத்தத்தில் இறங்கி, வீட்டுக்குச் சென்றான். வீடு பூட்டியிருந்தது. பக்கத்து வீட்டுப் பெண் வந்து, "மருது, அப்பாவும், அம்மாவும் கோவில்வரை போயிருக்கிறாங்க. உன்ன அங்க வரச் சொன்னாங்க” என்று சொல்லிச் சாவியைக் கொடுத்தாள்.
கோவிலில், ஒலிபெருக்கியில் யாரோ "ஹலோ..ஹலோ..." என்று சோதனை செய்துகொண்டிருந்தார்கள். பெரிய பெரிய மாலைகள் தொங்க, பூக்கடை ஒன்று முளைத்திருந்தது. மருதுவைப் பார்த்தவுடன் கடைக்காரர், "வா மருது, செருப்பை இங்க விட்டுப் போ. அப்பாவும், மாமாவும் உள்ளதான் இருக்காங்க" என்றார். யார் அது மாமா என்று நினைத்துக்கொண்டே கோவிலுக்குள் போனான். அங்கே நிறையப் பேர். ஆளுக்கு ஒரு வேலையை எடுத்துச் செய்து கொண்டிருந்தார்கள். மருது சிறு வயதில் பார்த்து மகிழ்ந்த திருவிழா மீண்டும் வந்திருந்தது. "மருது", என யாரோ கூப்பிட திரும்பிப்பார்த்தான். அங்கு முருகேசனும், செல்லமுத்துவும் இருக்க, அவர்கள் அருகிலே வேணியம்மாளும், ஜோதியின் அம்மாவும் நின்றுகொண்டிருந்தார்கள். மருது ஒன்றும் புரியாமல் அருகில் சென்றான். செல்லமுத்து, "எப்ப வந்த? உனக்காக வீட்டில் காத்துகிட்டு இருந்தோம். நிறைய வேலை இருக்கிறதால கோவிலுக்கு வந்துட்டோம்" என்றார்.
"இல்ல மாமா, ரயில் கொஞ்சம் லேட்டு" என்று கூறிக்கொண்டே செல்லமுத்துவை பார்த்தான்.
"இன்றைக்கு நாமளும், மாமாவும் சேர்ந்து வீரமுனிக்குப் படையல்", என்றார் செல்லமுத்து.
இரண்டு குடும்பமும் சேர்ந்ததில் மருதுவுக்கு ஒரே சந்தோஷம். ஜோதியைத் தேடினான், காணவில்லை. வேணியம்மாள் புரிந்துகொண்டவளாய், "மருது, காலையில் செய்த படையல் சாப்பாடு அங்க இருக்கும். போய் ஜோதியிடம் சொல்லி வாங்கிச் சாப்பிடு" என்று கூறினாள்.
மருது அங்கிருந்த கூடாரத்தில் சென்று எட்டிப் பார்க்க. பின்பக்கம் ஏதோ ஒரு குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தான். "சாப்பிடுறீங்களா?" ஜோதி கன்னத்தில் குழிவிழச் சிரித்தாள்.
மருது சற்றுத் தடுமாறி "கண்டிப்பா" என்றான்.
ஜோதி ஓர் இலையில் பொங்கல் வைத்து மருதுவிடம் கொடுத்தாள்.
வாங்கிக்கொண்டே, "நல்லவேளை வீரமுனி திரும்பி வந்துட்டாரு" என்றான் மருது. ஜோதி, "அவர் எங்க திரும்பி வந்தாரு? இங்கதான இருந்தாரு" என்று சொல்லி மருதுவைப் பார்த்து பொருள்பொதிந்த சிரிப்பொன்றை உதிர்த்தாள்.
வெங்கடேசன் சுந்தரேசன், ஓ' ஃபாலன், மிசௌரி |