சத்குரு ஸ்ரீ ஞானானந்த சுவாமிகள்
"தபோவனத்திற்கு என்னை நாடி வருபவர்களின் வாழ்க்கையை நான் பார்த்துக் கொள்ளுவேன்"

"கலியுகத்தில் இறைவனை அடைவதற்கு எளிய வழி, பக்தி யோகமும், கர்மயோகமும் தான்"

"கலியுகத்தில் நாம சங்கீர்த்தனமே முக்திக்கு வழி"

இதுபோன்று எண்ணற்ற அமுத மொழிகளைத் தம்மை நாடி வந்த பக்தர்களுக்கு உபதேசித்து நல்வழிப்படுத்திய மகான் ஸ்ரீ ஞானானந்த கிரி சுவாமிகள். கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகள்வரை வாழ்ந்ததாகக் கூறப்படும் இம்மகானின் இயற்பெயர் சுப்ரமணியம். சிறுவயது முதலே இவர் ஆன்மிக நாட்டம் கொண்டிருந்தார். ஒருநாள் தியானத்தின் போது பேரொளியின் தரிசனம் கிட்டியது. அவ்வொளியின் வழிகாட்டலின் பேரில் குடும்பத்தைத் துறந்து தலயாத்திரை மேற்கொண்டார். இறுதியில் பண்டரிபுரத்தை அடைந்தவர் அங்கேயே வசிக்கத் துவங்கினார். அப்போது அவருக்கு வயது 12.

ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட 12 ஜோதிர்லிங்க பீடங்களுள் காஷ்மீரிலுள்ள ஜோதிர்லிங்க பீடமும் ஒன்று. அந்தப் பீடத்தின் மடாதிபதியாக விளங்கியவர் ஸ்ரீ சிவரத்தினகிரி சுவாமிகள். அவர் ஒருநாள் பண்டரிபுரத்திற்கு வந்திருந்தார். அவரைப் பார்த்தான் சிறுவனான சுப்ரமணியன். ஓடிச்சென்று அவர் பாதங்களில் வீழ்ந்து வணங்கினான். சுப்ரமணியத்தின் ஞான வைராக்கிய நிலையைப் பார்த்தவுடனேயே உணர்ந்து கொண்ட சிவரத்தினகிரி சுவாமிகள், அவனைப்பற்றி விசாரித்தார். அவன் ஞானதீட்சை பெற பரிபக்குவம் உடையவன் என்பதை உணர்ந்து, தனது பிரதம சீடனாக ஆக்கிக் கொண்டார். காஷ்மீரில் இருக்கும் தனது மடத்திற்கு அழைத்துச் சென்றார்.

தீட்சை
வேதம், உபநிஷதம், சங்கரரின் பாஷ்யங்கள், பிரம்ம சூத்திரம், வியாகரணம் என அனைத்தையும் நன்கு கற்றுத் தேர்ந்தான் சுப்ரமண்யம். நைஷ்டிக பிரம்மச்சாரியாக வளர்ந்து பெரியவனான். தகுந்த நேரம் வந்ததும், சுப்ரமண்யத்திற்கு, ஞானதீட்சை அளித்து, 'ஞானானந்தகிரி' என்ற நாமம் சூட்டி அருளினார் சிவரத்தினகிரி சுவாமிகள்.

கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் தனது குருநாதருடனே காலம் கழித்தார் ஞானானந்தகிரி. அவரிடமிருந்து அனைத்து வித்தைகளையும் கற்றுத் தேர்ந்தார். தெரியாததே எதுவுமில்லை என்னும் அளவிற்கு அனைத்தையும் அறிந்துகொண்டார். தமக்கு அந்திம காலம் நெருங்குவதை உணர்ந்த சிவரத்தினகிரி சுவாமிகள், ஞானானந்தகிரியை தமக்கு அடுத்த பீடாபதியாக நியமித்தார். பின் சித்ரா பௌர்ணமி தினத்தன்று சிவரத்தினகிரி சுவாமிகள் விதேக முக்தி அடைந்தார். அதன் பின்னர் மடத்தின் நிர்வாகப் பொறுப்பை ஞானானந்தகிரி சுவாமிகள் ஏற்று நடத்தினார். சுமார் இரண்டு ஆண்டுகள் மடத்தின் பொறுப்பில் அவர் இருந்தார் என்றாலும் தாயும் தந்தையுமாக விளங்கிய குருநாதர் இல்லாத இடத்தில் அவரால் வெகுகாலம் இருக்க முடியவில்லை. யாத்திரை செய்து பல புண்ணியத் தலங்களையும், மகான்களையும் தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம் தீவிரமானது. அதனால் மடத்துப் பொறுப்பைத் தமக்கு இளையவரான 'ஆனந்தகிரி' என்பவரிடம் ஒப்படைத்து விட்டு இமயமலைக்குப் புறப்பட்டுச் சென்றார்.

இமயத்தில் தவம்
இமயத்தில் பல முனிவர்களையும் ரிஷிகளையும் சந்தித்தார். தனித்திருந்து தவம் செய்தார். தவத்தின் விளைவால் பல்வேறு அற்புதச் சித்துக்கள் கைவரப்பெற்றார். மூப்பையும், பிணியையும் அகற்றி நீண்ட காலம் வாழவல்ல காயகல்ப மூலிகையை அம்முனிவர்களின் ஆசியோடு பெற்றுக்கொண்டார். பின் மீண்டும் தல யாத்திரை மேற்கொண்டவர், இலங்கை உட்படப் பல இடங்களுக்கும் சென்று, இறுதியில் தமிழகம் வந்தடைந்தார். தமிழகத்தில் சேலம், கொல்லிமலை, போளூரில் உள்ள சம்பத்கிரி மலை, திருவண்ணாமலை ஆகிய இடங்களில் தங்கித் தவம் செய்தார். பின் திருக்கோவிலூர் வந்து சேர்ந்தார்.

தபோவனம்
திருக்கோவிலூருக்குச் சற்றுத் தொலைவில் உள்ள சித்தலிங்க மடத்தில் தங்கினார். முதலில் அங்கு ஸ்ரீ ஞானானந்தகிரி சுவாமிகளை பங்காரு ஐயர் என்ற அன்பர் ஆதரித்தார். பின்னர் சுவாமிகள் அங்குள்ள வியாக்ரபுரீசுவரர் ஆலயம் சென்று தங்கினார். அங்கு சிலகாலம் தவம் செய்தார். பின்பு அவருக்கு அன்பர்களால் தனித்த ஓர் இடம் அமைத்துக் கொடுக்கப்பட்டது. அங்கு தனியே தங்கியிருந்து தவம் செய்து வரலானார். அங்கு ஓர் ஆசிரமம் அமைத்த ஞானானந்தர், அதனையே தனது இருப்பிடமாக அமைத்துக் கொண்டார். கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள்வரை அங்கு தங்கி இருந்த ஞானானந்தர், தம்மை நாடி வந்த பலருக்கும் பல்வேறு ஞான உபதேசங்கள் செய்தார். பின்னர் திருக்கோவிலூர் - திருவண்ணாமலை சாலையில் அமைந்திருந்த 'தபோவனம்' என்ற இடத்தை வாழ்விடமாக மாற்றிக்கொண்டார்.

எப்பொழுதும் சிரித்த முகம், எளிமையான காவியுடை. கருணை பொங்கும் கண்கள், அனைவரையும் அரவணைக்கும் தாயுள்ளம் என ஸ்ரீ சுவாமிகள் அன்பின் மறு உருவாய் இருந்தார். தம்மை நாடி வந்தோரின் மன இருளை நீக்கி அவர்களின் உள்ளத்தில் ஆன்மஜோதியை ஏற்றி வைத்தார். வந்திருப்பவர்களின் பக்குவ நிலைக்கேற்ப அவர்களுக்கு நல்வழி காட்டி உயர்த்தினார். சுவாமிகளின் புகழ் பல இடங்களிலும் பரவியதால் அவரை நாடி வயது, இன, மத பாகுபாடின்றிப் பலர் வரத் தொடங்கினர். பக்குவம் உடையவர்களுக்கு ஆதிசங்கரரின் 'அகம் பிரம்மாஸ்மி' தத்துவத்தையும், 'கைவல்ய நவநீதம்', 'ஞான வாசிட்டம்' போன்றவற்றையும் உபதேசம் செய்தார். ஒவ்வொருவரும் தன்னைத் தான் உணர்வதே முக்கியம் என்பதை அறிவுறுத்தினார்.

கலியுகத்தில் இறைவனை அடைவதற்கு எளியவழி, பக்தி யோகமும், கர்மயோகமும் தான் என்று சுவாமிகள் வலியுறுத்தினார். அகண்ட நாம பஜனை ஒருவனை ஆண்டவனிடம் கொண்டு சேர்க்கும் என்பதும், நான், எனது என்ற அபிலாஷைகளை விடுத்து ஒருவன் தன் கடமைகளைச் செய்யும்போது அதுவே யோகமும், தியானமும், தவமும் ஆகிறது என்பதும் சுவாமிகளின் அருள் வாக்காகும். சுவாமிகள் வலியுறுத்திய மிக முக்கிய மற்றொரு விஷயம் அன்னதானம். ஆசிரமத்திற்கு வருபவர் யாராயினும் பசியோடு இருத்தல் கூடாது என்று கருதிய ஸ்ரீ சுவாமிகள், தாம் இருக்கும் பொழுதே நித்ய அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்தார். சுவாமிகளின் அக்கருணைச் செயல் இன்றளவும் தொடர்கிறது. 'அன்ன விசாரம் அதுவே விசாரம்' என்று கூறும் சுவாமிகள், எப்பொழுது, எந்த நேரத்தில் யார் நாடி வந்தாலும், வந்தவரின் வயிற்றுப் பசியை முதலில் நீக்கிவிட்டே, ஆன்மப்பசிக்கு உணவளிப்பார். அப்படிப்பட்ட கருணாநிதியாக, அன்னபூரணியாக, அன்ன தாதாவாக ஸ்ரீ ஞானானந்த கிரி சுவாமிகள் விளங்கினார்.

"இறைவன் வைகுண்டத்திலோ, கைலாயத்திலோ, அல்லது வேறு எங்கேயோ இல்லை. எங்கே மனம் நெக்குருகி, அவன் நாமம் எங்கே பாடப்படுகிறதோ, எங்கே அவன் பெயர் பஜனை செய்யப்படுகிறதோ, அங்கேயே, அதைக் கேட்டுக்கொண்டே, ஆனந்தக் கூத்தாடிக் கொண்டிருக்கிறான் இறைவன்" என்று ஸ்ரீ ஞானானந்தகிரி சுவாமிகள் அன்பர்களிடம் அடிக்கடி சொல்லுவார். "கலியுகத்தில் நாமசங்கீர்தத்தனமே முக்திக்கு வழி" என்பது அவரது அருள்மொழி. "தொடர்ந்து இறைவன் நாமாவளியைப் பஜனை செய்வதால் பாவங்கள் தொலைவது மட்டுமல்லாது, ஆத்மாவும் பரிபூரணமடையும்" என்பது அவரது கருத்து.

ஸ்ரீ ஞானானந்தகிரி சுவாமிகள் கபீர்தாஸ், ஷீரடி சாயிபாபா, ராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர், ராமலிங்க வள்ளலார், சத்குரு சுவாமிகள், சேஷாத்ரி சுவாமிகள், விட்டோபா சுவாமிகள், ஸ்ரீ அரவிந்தர், ரமண மஹரிஷி எனப் பல மகான்களைச் சந்தித்திருக்கிறார். இவர்கள் அனைவரும் பல்வேறு காலகட்டங்களில் 18, 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்களாவர். இதன்மூலம் அவர் சுமார் 200 ஆண்டுகளுக்கும் மேல் வாழ்ந்தவர் என்ற கருத்து உறுதியாகிறது. சுவாமிகளுக்கு பலமுறை பற்கள் முளைத்து விழுந்தன என்றும், ஒரே சமயத்தில் பல இடங்களில் காட்சி அளித்திருக்கிறார் என்றும் அவரது வரலாறு தெரிவிக்கிறது.

யார் தம்மை நாடி வந்தாலும், அவர்கள் கூறும் பிரச்சனைகளைக் காது கொடுத்துக் கேட்பார். இறைவனிடம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் என்று இன்முகத்தோடு ஆறுதல் கூறுவார். அன்பர்களுக்கு நல்லுரை கூறி வழி நடத்துவதையே தமது முக்கிய பணியாகக் கொண்டிருந்தார். தம்மை நாடி வருவோரின் தேவை அறிந்து, அதற்கேற்றவாறு ஆற்றுப்படுத்துவார். சுவாமிகளிடம் பல்வேறு அற்புதங்கள் செய்யும் ஆற்றல் இருந்தது என்றாலும் அவற்றை அவர் அதிகம் வெளிக்காட்டிக் கொண்டதில்லை. அவை ஆன்ம முன்னேற்றத்தின் படிநிலைகள் என்பது அவரது கருத்து. ஆயினும் சமயங்களில் தம்மை நாடி வந்த பக்தர்கள் சிலருக்கு அவர்கள் எதிர்காலம் குறித்து, வேலை, தொழில், திருமணம், குழந்தைகள் குறித்து, பின்னால் நடப்பதை முன்னரே தனது ஞான திருஷ்டியால் சுவாமிகள் கூறியிருக்கிறார். துன்பங்களில் இருந்து காப்பாற்றி இருக்கிறார்.

சுவாமிகளின் முக்கிய சீடராக விளங்கியவர் சுவாமி ஹரிதாஸ்கிரி. இவர் தமது குருநாதருக்கு அருள்புரிந்த பாண்டுரங்கனுக்கு தென்னாங்கூரில் ஓர் அற்புத ஆலயம் அமைத்தார். பண்டரிபுர ஆலய அமைப்பில் அமைக்கப்பட்டுள்ள இக்கோயில் கலையழகும், சிற்ப நயமும் கொண்டு விளங்குகிறது. குருநாதரின் உத்தரவுப்படி, பஜனைப் பாடல்கள் மூலமும், அன்பர்கள் மூலமும் நிதி திரட்டி இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. (ஸ்ரீ ஹரிதாஸ் கிரி சுவாமிகள், தாம் முன்னரே அன்பர்களுக்கு அறிவித்திருந்தபடி) கங்கையில் குளிக்கும்பொழுது 'ஜல சமாதி' ஆகி விட்டார். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஹென்றி லே சௌக்ஸ் என்பவர் "அபிஷிக்தானந்தா" என்ற பெயரில் தீட்சா நாமம் பெற்று ஸ்ரீ ஞானானந்தகிரி சுவாமிகளின் சீடரானார். இவர் சுவாமிகளைப் பற்றி ஒரு நூலும் எழுதியுள்ளார். மேலும் ஸ்ரீ அரவிந்தரின் அன்பர்களுள் ஒருவராக விளங்கிய எம்.பி. பண்டிட் போன்றோரும் ஞானானந்தகிரி சுவாமிகளைக் குறித்த தமது அனுபவங்களை நூலாக்கியுள்ளனர்.

ஞானானந்தரின் அருளுரைகள்
உன் மனதிற்கு நீ அடிமையானால் உலகிற்கு நீ அடிமையாவாய். உன் மனம் உனக்கு அடங்கினால் உலகம் உனக்கு அடங்கும்.

ஒவ்வொரு மனிதனின் லட்சியமும் ஆத்ம தரிசனத்தை அடைவதே ஆகும். புலனடக்கம், தியானம், நாம சங்கீர்த்தனம், பொறுமை இவையே அதற்கு உதவி செய்யும்.

ஒவ்வொருவனும் தன்னை யார் என ஆராய்ந்து அறிவது மிகவும் அவசியம். ஒவ்வொருவனும் ஆனந்தத்தைத் தேடி அலைகிறான். ஆனால் அது தனக்குள்ளே தான் இருக்கிறது என்பதை அறியாமலேயே காலம் கழிக்கிறான். அது அறிந்தால் அவனுக்கு துக்கம் தான் ஏது? துயரம்தான் ஏது?

உண்மையான ஆன்ம உணர்வு உடைய ஒருவன் குருவைத் தேடி சதா சர்வ காலமும் அலைய வேண்டியதில்லை. குருவே அவனைத் தேடி வருவார். ஆனால் குருவின் அருள் இல்லாமல் ஒருவன் இறை அனுபூதி பெறுவது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும். கடலில் பயணம் செய்ய படகு மட்டும் போதாது. துடுப்பும் வேண்டும். அது போல சம்சாரமாகிய கடலைக் கடந்து, ஞானமாகிய இறைநிலையை ஒருவன் அடைய குருவின் ஆசி அவசியம் தேவை.

ஒரு மனிதனின் மூன்று தீய குணங்களான ஆணவம், கர்மம், மாயை என்பது விலகினால் கடவுளை அடையும் பாதை அவனுக்கு எளிதாகிறது.

ஒருவன் புண்ணிய நதியில் குளிப்பதால் அந்த நதிக்கு எந்தப் பயனுமில்லை. ஆனால் அவன் உடலில் உள்ள அழுக்குகளும், மாசுக்களும் அதனால் விலகுகின்றன. அது போல குரு தரிசனம் செய்வதாலும், மகான்கள், புண்ணிய சீலர்களைத் தரிசிப்பதாலும் ஒருவனின் பாவங்கள், குற்றங்கள், குறைகள் மன மாசுக்கள் விலகி அவனுக்குத் தான் நன்மை உண்டாகின்றதே அன்றி அந்த குருவிற்கு அல்ல.

இவ்வாறு ஸ்ரீ ஞானானந்த கிரி சுவாமிகள் வலியுறுத்திய தத்துவங்கள் பலவாகும். பல சிறப்புகள் பெற்றிருந்த இம்மகான் ஜனவரி மாதம் 9ம் தேதி 1974ம் ஆண்டு தபோவனத்தில் மகாசமாதி அடைந்தார். திருமந்திர முறைப்படி அவரது உடல் சமாதி செய்விக்கப்பட்டு அங்கே சிவலிங்கப் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

சமாதி அமைவிடம்
சுவாமிகளின் சமாதி ஆலயம் திருக்கோவிலூரில் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து நேரடியாகப் பேருந்து வசதி உள்ளது. விழுப்புரத்தில் இருந்தும் நிறையப் பேருந்துகள் உள்ளன. திருவண்ணாமலையில் இருந்தும் எளிதில் அடையலாம். திருக்கோவிலூர் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் மூன்று கி.மீ. தொலைவில் சுவாமிகளின் மகாசமாதி ஆலயம் அமைந்துள்ளது. ஆன்மஞானம் தேடி வருவோர்க்கு அமுதூட்டும் ஆலயமாக இன்றளவும் விளங்கி வருகிறது.

பா.சு.ரமணன்

© TamilOnline.com