கேவலம் மனிதர்கள்
கிடங்குகள் போன்ற மிகப்பெரிய அறைகள். அவற்றுள் நீண்ட வரிசை வரிசையான சிமெண்ட் பெஞ்சுகள். அதில் முண்டியடித்து நிறைந்து கிடக்கும் மனிதக் கூட்டம்.

இந்தத் தர்ம தரிசன வரிசையில் நிற்பதற்குக் கடந்து வந்த தூரத்தையும், பட்ட அவஸ்தையையும் எண்ணிப் பிரமித்தவாறே அலுப்புத் தீரப் பெஞ்சியில் அமர்ந்தேன். அப்பாடா! இன்றைய பொழுதுக்குள் வேங்கடவனின் தரிசனம் நிச்சயம் உண்டு! அந்தத் தரிசனம் காணத்தான் எத்தனை கூட்டம்!

விடியற்காலையில் சுப்ரபாதம் ஓதும் சுகந்த வேளையில் விழித்து, பனியாகச் சிலீரிட்ட நீரை மேலே கொட்டிக்கொண்டு, குளிரில் வெடவெடக்க வந்து நின்ற நான், விடிந்து வெயில் ஏறி மணி எட்டாகும் போது, கொட்டடிக்குள் அமர்ந்திருக்கிறேன். பசி வயிற்றை நெருடுகிறது. அருகில் மசால்வடைக் கூடைகளும், இட்லிக் கூடைகளும் ஆசை மூட்டுகின்றன. இந்தச் சமயத்தில் சுகாதாரத்தைப் பார்த்தால் வயிறு என்னாவது?

உணவுப் பொருளை விழுங்கிவிட்டு டீயும் சாப்பிட்டேன். முதல் இரண்டு கொட்டடிகள் திறந்து, அதனுள்ளிருந்த மக்கள் தரிசனம் பண்ண உள்ளே சென்றவாறிருந்தனர்.

என் பக்கத்தில் இத்தனை நேரமும் அசையாமல், ஆடாமல் உட்கார்ந்திருந்தவர் மீது என் பார்வை பட்டது. வேங்கடேசுவர சுப்ரபாதப் புத்தகத்தைப் பார்த்தவாறே, மனனம் செய்வதில் மெய்ம்மறந்திருந்தார் அவர். இந்தச் சூழ்நிலையில் அவர் ஏனோ கலக்கவில்லை. அவர் சென்று தரிசிக்க வேண்டிய இடத்தின் தெய்வீகப் பிம்பத்தைத் தியானித்தவாறே சுலோக சுகத்தில் மூழ்கியிருந்தார். எனக்கு ஒரே பிரமிப்பாக இருந்தது. எல்லாருந்தான் புத்தகம் படிக்கிறோம்! சுலோகம் மனனம் பண்ணுகிறோம்! தொழுகிறோம்! ஆனாலும் இப்படி ஒரு லயிப்பா!

'கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா' என்று சுலோகத்தை ஆரம்பித்துத் தொடராமலேயே என் அம்மா வேறு ஒரு பேச்சுப் பேசுவாள். பின் அடுத்த வரி, அடுத்த வரி என்று போகும்போதே ஆயிரம் குறுக்கீடுகள் வரும். தன் வேலைகளையும் கவனித்துக்கொண்டு அவள் தோத்திரம் செய்வாள்.

"சார்! மணி என்ன?" என் பக்கத்திலிருந்தவர்தாம் கேட்டார்.

"மணி ஒன்பதாகப் போகிறது" என்று கூறிய நான், அவர் புத்தகத்துள் லயித்து விடுவாரோ என்ற பயத்தோடு, உடனே, "சாருக்கு எந்த ஊர்?" என்றேன்.

"தஞ்சாவூர்ப் பக்கம்."

"எனக்கும் அந்தப் பக்கந்தான். பிரார்த்தனையா?"

"பிரார்த்தனைன்னு தனியா நேர்ந்துக்கிறதில்லை. ஆனால் வீட்டிலே தினசரி பாராயணம். புரட்டாசி சனிக்கிழமை விரதம். வருஷத்திலே ஒரு தடவை பயணம். இதை மாத்தவோ, நிறுத்தவோ மனசு ஒப்பறதில்லை. நீங்க?"

"நான் நினைச்சபோதெல்லாம் வருகிறவன். நேர்ந்துக்கற சந்தர்ப்பங்கள் நிறைய வரும். நேர்த்திக்கடன் கழிக்க அப்பப்போ வந்துட்டுப் போவேன். ஆனா பாராயண பலம் எனக்கு இல்லை. ஆபீஸிலே முதுகொடிகிற வேலை."

"அதனாலே என்ன? அடிக்கடி திருப்பதிக்கு வரும் பயண பலம் இருக்கே! அந்தப் பக்திக்குப் பகவான் கருணை நிச்சயம் கிடைக்கும்."

"ஆனாலும் பாராயணம் பண்றபோது மனசு நிலைக்கறமாதிரி ஒரு நேரம், தினசரி கிடைக்கிறதே ஒரு பாக்கியமில்லையா? நீங்க புத்தகத்தை உருவேத்தினப்புறமும், அதையே பார்த்துப் படிக்கிறீர்களே?"

"அதிலே ஒரு ரகசியம் இருக்கு, ஸார். சுலோகங்கள் மனனமானப்புறமும் அதைச் சும்மாவானும் சொல்லிக் கொண்டிருந்தால் வறட்டுப் பாடம் நாவில் ஒலிக்கும். மனசுபாட்டிலே எங்கோ காற்றிலே அலைஞ்சு நம் பிரச்னைகளையே குழப்பியடிக்கும். அதனாலேதான் தெரிஞ்சிருந்தாலும், புத்தகத்தை வச்சுப் படிச்சா எழுத்துக்கள் நம்ப மனசைக் கட்டுப்பாடா அழைச்சிக்கிட்டுப் போவுது!"

எத்தனை அருமையான விளக்கம்! என் அம்மா மனனம் செய்து விட்டதால், அதைச் சொல்லிக்கொண்டே ஆயிரம் வேலைகளுக்கு உத்தரவிடுவதும், தியானக் கோலமே பூண முடியாமல் நித்தியக் கடமைகளில் மனசு லயிப்பதுமாக இருக்கிறாளே!

எங்கள் கொட்டடி திறக்கப்பட்டது. பிலுபிலுவென்று எல்லாரும் எழுந்து முண்டியடித்துக் கொண்டு போக ஆரம்பித்தனர். ஒழுங்கான வரிசைக்கு வழியிருந்தால்கூட, அதைக் குலைத்துவிடும் மக்களைக் காவலர்கள் கவனித்து அனுப்புகின்றனர். கோயில் வெளிப் பிராகாரச் சுவரோடு வரிசை முன்னேறி உள்ளே சென்று பலபல திருப்பங்களைக் கடந்தது.

எனக்கு அடுத்தவர் சுப்ரபாதம் புத்தகத்தில் லயித்தவாறே நடந்து வந்தார். "கோவிந்தா! கோவிந்தா!" என்ற குரல்கள் பக்தி வெள்ளத்தைக் கோயில் முழுவதிலும் ரீங்காரமாக அனுப்பி வைத்தன. உணர்ச்சிவசப்பட்டவாறே அனைவரும் சந்நிதிக்குள் சென்றனர்.

பார்வைக்குப் படுவதிலிருந்து கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டே நடந்தேன். இறைவனின் முழு உருவையும் ஒரு நிமிஷத்தில் கண்குளிரக் கண்டு, மனச்சிறையில் அடைத்துக் கொண்டேன். உடம்பெல்லாம் புல்லரிக்க, 'சீனிவாசா, வெங்கடேசா' என்ற தியானங்களோடு திரும்பும்போது கையில் விழுந்த துளசி தீர்த்தமோ, தலையில் வைக்கப்பட்ட சடாரியோ, வெளியில் வந்ததும்தான் அனுபவித்த உணர்வாகப் புரிகிறது. ஐயனைக் காணக் கிடைக்கும் நேரத்தின் குறைவுதான் நெஞ்செல்லாம் நிறைந்தது. அந்த நினைவின் தாபத்தோடு வெளியே வந்தேன்.

உண்டியல் அருகே மீண்டும் அவரைச் சந்தித்தேன். ஒரு புன்னகைப் பரிமாற்றம். பிரசாதம் விற்கப்படும் இடத்தில் மூன்றாம் அறிமுகம். பிறகு கீழ்த்திருப்பதியில் ஒரு புன்னகை. அதன்பின் பிரயாணத்தில் சந்திக்க நேரும் எத்தனையோ மனித முகங்களை ஞாபகம் புறக்கணித்துவிடும் மறதி.

ஊருக்குத் திரும்பியதும் சக்கரச் சுழற்சியாகப் பழைய வாழ்வு. நன்மை, தீமைகளை வகுக்காமலேயே ஓடும் அவசரம். எனக்குப் பஸ்ஸில் இடம் கிடைக்க வேண்டும் என்ற சாதாரண விருப்பத்திலிருந்து, எனக்குப் பதவி உயர்வு வரவேண்டும், என் பெண்ணுக்கு வரதட்சிணை வாங்காத மாப்பிள்ளை வரவேண்டும், என் பையனுக்கு நிறைய வரதட்சிணையுடன் வீடும், காருமாக ஒரு பணக்காரப் பெண் வரவேண்டும், பங்களா கட்ட வேண்டும் என்றெல்லாம் ஆசைக்கனவுகள் தொடர்கின்றன.

இப்போதெல்லாம் இந்த நினைவுகளூடே திருப்பதியில் சந்தித்த அந்தப் பக்தரின் உருவமும், அவருடைய பேச்சுக்களும் என் நினைவில் அலை அலையாகப் பொங்கிவரும். அதன் பலன் நான் சுப்ரபாதம் முழுவதையும் தினசரி படிப்பதும், அது என்னையறியாமல் என் நாவில் எந்த நேரமும் ஒலிப்பதுமாக ஆகி நன்மை நல்கியது.

"பக்தி முத்தித்தான் போச்சு!" என்று என் மனைவி குமுதா இடித்துக் கூறுவதைக்கூட நான் பொருட்படுத்தவில்லை. ஆபீசிலேகூட இரண்டொருவர் என்னைக் கேலி பேசத் தவறவில்லை.

அன்றுதான் என் பெண்ணைப் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வருவதாக இருந்தது. அதற்குரிய எல்லா ஏற்பாடுகளையும் கச்சிதமாகச் செய்திருந்தேன்.

வீட்டில் விரத நாட்கள் இல்லாதபோது விருந்தில் அசைவப் பதார்த்தம் கலப்பதுண்டு. அதிலும் பெண் பார்க்க வருகிறார்கள் என்றால் கேட்கவா வேண்டும்?

"இரண்டு கிலோவாவது வேண்டும்!" என்று என் மனைவி கூறினாள்.

"நீங்களே போய் வாங்கிவந்து விடுங்கள்."

'இந்தக் கல்யாணம் கூடிவர வேண்டும்!' என்று மனத்துக்குள் நேர்ந்து கொண்டு நான் புறப்பட்டேன்.

"எலும்பு அதிகமில்லாமல் நல்லதாக இரண்டு கிலோ!" என்று கூறும்போதே என் நா உள்ளுக்கு இழுத்தது. என் எதிரே ஆடுகளை மனிதருக்கு இரையாக்கித் தரும் பீடத்தில் அவர். திருப்பதியில் கண்ட அந்தப் பக்தர். அவரா? அவரா இந்த இடத்தில்?

என் மனம் பதறியது. "சார்! நீங்கள்..." தடுமாறினார்.

"திருப்பதியில் சந்தித்தோமில்லையா?"

முகத்தின் வேர்வையை அழுந்தத் துடைத்துக் கொண்டார். என்னைக் கண்டதில் அவரிடமும் ஒரு பதற்றம் ஏற்பட்டிருந்தது.

"ஆமாம்! நீங்கள் இந்தத் தொழிலில்...?" என் அதிர்ச்சியை மறைக்க முயலாமல் கேட்டேன்.

"நீங்கள் பையுடன் இந்தக் கடையில் நிற்கும்போது... என் தொழிலை மட்டும் ஏன் சார் கேவலமாக எடை போடுகிறீர்கள்?" அவர் குரலில் கடுப்பேறியிருந்தது.

"நான் கேவலப்படுத்தவில்லை சார். உங்கள் பக்தி, பண்பு எதற்கும் ஒத்து வராத தொழிலாயிற்றே இது என்பதனால் கேட்டேன்."

"என்ன செய்வது? என் பரம்பரையை அவன் படைத்தான்! என் பசிக்கு நான் இதை வெட்டுகிறேன். உங்கள் பசிக்கு நீங்கள் வாங்குகிறீர்கள். உங்களுக்கு 'இந்தப் பசி' இல்லாவிட்டால் எங்கள் பரம்பரையே இந்தத் தொழிலை நிச்சயம் மேற்கொண்டிருக்காது."

"சார்!"

அவர் ஆவேசம் மனிதகுலத்தின் மீதே ஏற்பட்டாற்போல் இருந்தது. "இந்தத் தொழிலைச் செய்கிறோமே என்ற தாபந்தான் சார் என்னைத் தெய்வ சந்நிதிக்கு விரட்டுகிறது. அங்கேதான், அந்த நாட்களில்தான் என் கைகள் தூய்மையுடன் இருக்கின்றன. அவனைத் தொழும் தகுதியையும் அடைகின்றன. எனவேதான் வருஷத்துக்கு ஒருமுறையாவது வேங்கடவனின் சந்நிதியில் நின்று என் கைகள் புனிதமடைய வேண்டி நிற்கிறேன்." அவர் ஆவேசம் படிப்படியாகக் குறைந்தது. நொந்துகொண்டே அவர் முறையிட்டார்.

"இவ்வளவு தெரிந்த நீங்கள், இதை விட்டுவிட்டு வேறு தொழில் செய்யலாமே?" என்று கேட்டேன்.

"ஒன்று கேட்கட்டுமா சார்? இவ்வளவு தெரிந்த நீங்கள் இதை உண்பதை ஏன் நிறுத்த மாட்டேன் என்கிறீர்கள்? உண்பவர்கள் இருக்கும்வரை ஒருவர் இந்தத் தொழிலைச் செய்துதானே தீர வேண்டும்? அது நானாகத்தான் இருந்தால் என்ன?" அவர் குரலில் மீண்டும் ஆவேசம் ஏறிக்கொண்டது.

'நறுக்'கென்று என் பொறியில் தட்டினாற் போலிருந்தது. உண்மை! எவ்வளவு பெரிய உண்மை!

அவரை இவ்வளவு தூரம் கேட்டும் நான் ஏன் ஜீவஹிம்சையின் பலனை ருசிக்கவேண்டும்?

"சார்! உங்களைப் புண்படுத்தியிருந்தால் மன்னிச்சிடுங்க. தீமைகூட இரண்டு பக்க ஆதரவால்தான் வளருகிறது! நான் இந்தத் தொழிலைத்தான் செய்கிறேன். இதை உண்பதில்லை. அது வரையிலுமாவது கடவுளுக்கு உகந்தவனாக நடக்கிறேன் என்கிற திருப்தி எனக்கு உண்டு."

"எனக்கு அந்தத் திருப்திகூட இல்லைதான்!" என்று முணுமுணுத்தேன் நான்.

"சார் என்னை மன்னிக்கணும்! என்ன இருந்தாலும் நாம் மனிதர்கள். கேவலம் மனிதர்கள்தாம் சார்! ஏதேதோ செய்கிறோம். பிறகு கடவுள் கிட்டே நின்று கொண்டு உருகி மன்னிப்புக் கேட்கிறோம். அப்புறமும் அதை விட முடியறதில்லை. இது உலகம் முழுமைக்கும் பொதுவானதுதான். ஆனால் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உட்பட்டு ஒன்றைச் செய்துவிட்டு, அதற்காக வருந்தி வாடுவதிலேயும் ஒரு சுகம் இருக்கு சார்! அந்தப் பாரத்தை, அவன் பாதத்திலே இறக்கி வைக்க ஓடுகிறோமே, அதிலேதான் ஓர் ஆத்மசுகம் கிடைக்கிறது. கர்ப்பூர ஜோதியிலே ஜிகுஜிகுன்னு தெரியற அந்த முகத்தைக் கண்ணாரக் கண்டு, அந்த உத்தரணி தீர்த்த ஜில்லிப்பை நாவிலே உணர்ந்து, சடாரியின் கனத்தைத் தலையிலே உணருகிறபோது மெய்ம்மறக்கிறோமே, அப்போது நாம் செய்யற தப்பெல்லாம் மன்னிக்கப்படுகிறாற் போன்ற ஒரு பிரமை எனக்கு ஏற்படுகிறது. அது பொய்யாகவும்கூட இருக்கலாம். ஆனால் நிஜமாக நினைச்சு ஸ்தம்பிச்சுப் போகறதிலே உள்ள ஆசை, வேறே எதிலேயும் எனக்கு ஏற்படறதில்லே சார்! உம். நான் பாட்டுக்குப் பேசிக் கொண்டிருக்கிறேனே. சாருக்கு நேரமாச்சு, இரண்டு கிலோதானே கேட்டீர்கள்."

"வேண்டாம், சார்! நான் கறிகாய் மார்க்கெட்டுக்குப் போகிறேன். நம்மாலே மாற்றிக்கொள்ள முடியறதைக்கூட மாத்திக்காமல் கடவுளைத் தொழறதிலே அர்த்தம் என்ன இருக்கிறது?"

"செய்யுங்க, சார்!" கசாப்புக் கடைக்காரர் கையெடுத்துக் கும்பிட்டார். "நீங்க மனசு மாறினதிலேதான் எனக்குச் சந்தோசம். என் வியாபாரம் கெட்டுப் போனால்கூட எனக்குக் கவலை இல்லை சார்."

என் உடம்பு புல்லரித்தது. கசாப்புக்கடைக் கல்லாவில் எனக்குக் கீதோபதேசமே கிட்டினாற் போல் இருந்தது. அவருக்கு எதிரே நான் சிறியவனாக நிற்பது புரிந்தது. அவருக்கு ஒரு வெளிச்சமிட்ட பாதை வழிகாட்டுவது போன்ற ஆனந்தத்தில் நானும் கறிகாய் மார்க்கெட்டுக்குப் புறப்பட்டேன்.

கோமகள்

© TamilOnline.com