புற்றுநோய்க் கழக அறக்கட்டளை (Cancer Institute Foundation) இவ்வாண்டு நிதி திரட்டும் நிகழ்வாக 'வெள்ளோட்டம்' என்ற சரித்திர நாடகத்தை ஃபிப்ரவரி 18, 2018 அன்று டப்ளின் உயர்நிலைப்பள்ளி அரங்கத்தில் நடத்தியது.
நாடகத்திற்குக் கதை, வசனம் எழுதி இயக்கிய திருமதி. பாகீரதி சேஷப்பன் ஒரு சவாலான, அதிகம் அறியப்படாத தகவல்களைத் திரட்டி, சரியான பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து, அருமையான காட்சி அரங்குகளை அமைத்து அருமையாக 'வெள்ளோட்ட'த்தை நிகழ்த்திக் காட்டினார்.
மதுரை பூச்சொரிதல் விழாவில் மக்கள் ஆட்டம் பாட்டம் என்று மகிழ்ச்சியாக இருக்கும் காட்சி, பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் மதுரையை ஆளும் அழகை நமக்குக் காண்பிப்பதாக நாடகம் ஆரம்பிக்கிறது. முதல் இரண்டு காட்சிகளும் நெடுஞ்செழியனின் ஆளுமை, ராஜதந்திரம் இவற்றைக் காட்டி விரிகிறது. கதையின் நாயகனாகிய உக்கிரவழுதியின் வீரத்தோள்களின் துடிப்பையும், அவர் நெடுமாற வள்ளுவருடன் கொண்ட நட்பையும் தமிழ்மேல் கொண்ட காதலையும் சொல்லிக் கதை மேலே செல்கிறது. மெல்ல, கதை நம்மை நெடுமாற வள்ளுவர் பக்கம் பார்க்க வைக்கிறது. அவரின் இருவரி கவிதைகள் மூலம் இவர்தாம் திருவள்ளுவர் என்று நயமாக உணரவைக்கிறார் நாடக ஆசிரியர். அடுத்து அறிமுகமாகிறார் வாசுகி. அறிமுகக் காட்சியிலும், வாசுகி, வள்ளுவர் கவிதை எழுத விளக்குக் கொண்டு வந்து கொடுக்கும் காட்சியிலும் ஒரு பண்பட்ட காதலைக் காட்டி, நம் இதயத்தை மெல்லிய தென்றல் வருடுவது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறார்.
மதுரை மன்னன் நெடுஞ்செழியன் மகனைக் கொலை செய்ய அண்டை நாட்டினர் சூழ்ச்சி செய்கின்றனர். அதை உக்கிரவழுதி தன் சகோதரர்கள் மற்றும் நண்பன் நெடுமாற வள்ளுவனுடன் சேர்ந்து எவ்வாறு முறியடித்தார்கள் என்பதைக் காட்டி ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஒருங்கே கொடுக்கிறது நாடகம்.
காலம் ஓட, வளர்ப்பு மகன் பூவழுதியின் சூழ்ச்சியினால் நெடுஞ்சழியன் கொல்லப்படுகிறான். உக்கிரவழுதி முடிசூடுகிறான். உக்கிரவழுதி தன் நண்பர் நெடுமாற வள்ளுவரின் பாக்களைத் தொகுத்து வெள்ளோட்டம் செய்ய விரும்புகிறார். அதற்கு, தமிழ்ச் சங்கப் புலவர்கள் நக்கீரர், கபிலர், ஔவை ஆகியோரிடம் அனுமதி கோருகிறார். அவர்களுக்குள் நடக்கும் ஆரோக்கியமான விவாதம், அவர்களின் புலமையையும் விட்டுக்கொடுக்கும் தன்மையையும் படம் பிடித்துக் காட்டுகிறது.
புலவர்களின் அனுமதியுடன், வள்ளுவரின் திருக்குறள், பூச்சொரிதல் விழா சமயத்தில், சங்கப்புலவர் நடுவே 'வெள்ளோட்டம்' செய்வது இவர்களது நட்புக்கு மகுடம் சூட்டுவதாக அமைகிறது. நாடகம், ஒரு பூச்சொரிதல் விழாவில் ஆரம்பித்து அடுத்த பூச்சொரிதல் விழாவில் முடிவதாக அமைத்தது மிகச் சிறப்பு.
திரு. ஸ்ரீதரன் மைனரின் பின்னணி இசையும், அவர் எழுதிய பாடல்களும் அருமை. பூச்சொரிதல் விழாவைக் கண்முன் கொண்டு வந்த அரங்க அமைப்புக் குழுவினரின் உழைப்பைப் பாராட்டாமல் இருக்கமுடியாது.
30 பாத்திரங்களைக் கொண்ட இந்த நாடகத்தில் ஒவ்வொரு நடிகரும் உணர்ந்து சிறப்பாக நடித்தது கண்கூடாகத் தெரிந்தது. ஒப்பனை, நடன அமைப்பு, அரங்க அமைப்பு எல்லாமே வெகுநேர்த்தி. உலகத் தமிழ்மறையை வையகத்திற்குத் தந்த வள்ளுவரின் வாழ்வை நாடகமாக அளித்தது நாடக இலக்கியத்திற்குப் பெருமை.
இந்த நாடகத்தின் மூலம் திரட்டப்படும் நிதி, தமிழ் நாட்டில் நாமக்கல், திருவண்ணாமலை நகரங்களில் ஏழைகளிடையே புற்றுநோயை முன்கூட்டிப் பரிசோதனை செய்து, கண்டுபிடித்து உதவப் பயன்படுத்தப்படும்.
சங்கர் நடராஜன், சான் ரமோன் |