SBTS: தமிழ்ப் போட்டிகள்
ஃபிப்ரவரி 24, 2018 அன்று தென்விரிகுடா தமிழ்ச் சங்கம் தென்கலிஃபோர்னியாவில் உள்ள தமிழ்ப் பள்ளிகளுக்கிடையே 'நான் பாரதி', 'தமிழோடு விளையாடு' ஆகிய போட்டிகளை நடத்தியது.

இதில் தென்கலிஃபோர்னியா தமிழ்ப்பள்ளி (இர்வின்), லாஸ் ஏஞ்சலஸ் தமிழ்ப்பள்ளி, பாரதி தமிழ்க்கல்வி, அறநெறி தமிழ்ப்பள்ளி, மேற்கு லாஸ் ஏஞ்சலஸ் தமிழ்ப்பள்ளி, தமிழ்ப் பள்ளிக்கூடம் (சிமி வேலி), செரிட்டோஸ் தமிழ்ச்சங்கம், மற்றும் தென்விரிகுடா தமிழ்க்கல்வி உட்படப் பல பள்ளிகளின் மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர் திரளாகப் பங்கேற்றார்கள்.

'நான் பாரதி' போட்டியில் குழந்தைகள் பாரதியார் வேடமணிந்து வந்து அவர்கள் காட்டிய பாவனை மற்றும் பாடிய திறமை அவ்வளவு அழகு!

'தமிழோடு விளையாடு' என்ற வார்த்தை விளையாட்டுப் போட்டியில் சிறுவர் சிறுமியர் 'கலாச்சாரம்', 'பண்பாடு' போன்ற கடினமான வார்த்தைகளைக்கூடக் கண்டுபிடித்து அசத்தினார்கள். போட்டிகள் வயதுவாரிக் குழுக்களாகப் பிரித்து நடத்தப்பட்டன.

பாரதியார் பாடல்களில் உச்சரிப்பு, ஏற்ற இறக்கம், பிழையின்மை போன்ற அம்சங்களிலும், வார்த்தை விளையாட்டில் சரியாகக் கூறிய வார்த்தைகளின் எண்ணிக்கை அடிப்படையிலும் மதிப்பெண் இட்டு முதல் மூன்று இடங்களைப் பிடித்த குழந்தைகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

பெற்றோர்கள் தமக்கும் இதே போட்டிகளை நடத்தவேண்டும் என்று கேட்கும் அளவிற்கு இவை விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் நடைபெற்று முடிந்தன.

ரெங்கராஜன் முத்துசாமி,
தென்விரிகுடா தமிழ்ச்சங்கம், டோரன்ஸ், கலிஃபோர்னியா

© TamilOnline.com