நாஷுவா: ஜயேந்திரருக்குஇசை அஞ்சலி
மார்ச் 3, 2018 அன்று, அண்மையில் சித்தியடைந்த சங்கராச்சாரியார் பூஜ்யஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை ஆராதிக்கும் வகையில் பாஸ்டன் அருகே நாஷுவாவில் அமைந்துள்ள நியூ ஹாம்ப்ஷயர் இந்து ஆலயத்தில் இசையஞ்சலி ஒன்று நடைபெற்றது. இதனைச் சமர்ப்பித்தவர் புகழ்பெற்ற வயலின் வித்வான் திரு. விட்டல் ராமமூர்த்தி அவர்கள். இவரை ஜயேந்திரரே காஞ்சி காமகோடி மடத்தின் ஆஸ்தான வித்வானாக நியமித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. புதுப்பெரியவருடனான தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட விட்டல், அவர் முன்னிலையில் நவராத்திரி மற்றும் சாதுர்மாஸ்ய விழாக்கள் பலவற்றில் கச்சேரி செய்யும் வாய்ப்பைப் பெற்றது வாழ்க்கையில் தனக்குக் கிடைத்த பெரிய பாக்கியம் என்று நினைவு கூர்ந்தார். நிகழ்சிகளில் தான் வயலின் வாசிக்க, ஜயேந்திரர், முத்துஸ்வாமி தீட்சதர் இயற்றிய "அகிலாண்டேஸ்வரி", "கஞ்சதளாயதாக்ஷி" போன்ற பாடல்களைச் சேர்ந்து பாடுவார் என்ற ஆச்சரியமான தகவலை விட்டல் கூறினார்.

தியாகராஜரின் "ப்ரோவ பாரமா" பாடலுடன் அஞ்சலியைத் துவக்கிய விட்டல், குருமகிமையை விளக்கும் "குருலேக எதுவன்டி" என்ற பாடலை வாசித்தார். "அகிலாண்டேஸ்வரி" மற்றும் "கஞ்சதளாயதாக்ஷி" ஆகிய தீட்சதர் கிருத்திகளையும் வாசித்தார். இந்தியாவிலிருந்து வந்திருந்த பாடகி B.N. சின்மயி அவர்களின் வாய்ப்பாட்டும் இருந்தது. அவர் "ஸ்ரீ காந்திமதிம்", "விட்டலாசனஹோ ஸ்வாமி" என்ற பஜனைப் பாடல், மற்றும் காஞ்சி மகாப்பெரியவர் இயற்றிய "மைத்ரீம் பஜத" பாடல்களை இனிமையாகப் பாடினார். மிருதங்க வித்வான் கௌரீஷ் சந்திரசேகர் மற்றும் பாஸ்டனைச் சேர்ந்த இளம் மிருதங்கக் கலைஞர் ஹரி சண்முகம் சிறப்பாகப் பக்கவாத்தியம்வாசித்தனர்.

ஆலய நிறுவனர் வீரமணி ரங்கநாதன், பாரதீய வித்யாஸ்ரம அமைப்பாளர் லக்ஷ்மி முனுகூர் மற்றும் காஞ்சி காமகோடி சேவை நிறுவனத்தை சேர்ந்த ராஜேஷ் வைத்தீஸ்வரன் ஆகியோர் ஜயேந்திரரின் அன்பு, எளிமை, செயல்வேகம் மற்றும் அவர் மக்களுக்கு ஆற்றிய தொண்டைப் பற்றிப் பேசினர். ஜயேந்திரர் ஆற்றிய சொற்பொழிவின் ஒலிப்பதிவின் ஒலிபரப்புடன் அஞ்சலி நிறைவுபெற்றது.

நிகழ்ச்சியைக் காண

அரவிந்த் கிருஷ்ணமூர்த்தி,
நியூ ஹாம்ப்ஷயர்

© TamilOnline.com