மார்ச் 18, 2018 அன்று மாலை 4 மணிக்கு, சான் ஹோசே Event Center அரங்கில், பத்மவிபூஷண் மேஸ்ட்ரோ இளையராஜாவின் இன்னிசை நிகழ்ச்சியை கலாலயா மற்றும் பாலிவுட் இவென்ட்ஸ் இணைந்து வழங்கின.
மேடையில் கிட்டத்தட்ட ஐம்பது இசைக் கலைஞர்கள் தங்கள் வாத்தியக் கருவிகளுடன்; அவர்களில் இருபதுக்கு மேற்பட்டோர் புடாபெஸ்ட் சிம்ஃபொனி ஆர்கெஸ்ட்ராவைச் சேர்ந்தவர்கள். சரியாக 5 மணிக்கு இளையராஜா மேடைக்கு வந்து 'ஜனனி, ஜனனி' பாடலை பக்திப் பரவசத்துடன் வழங்க, நிகழ்ச்சி ஆரம்பமானது. முதல் நான்கு பாடல்கள் வரிசையாக பக்திப் பாடல்களாகவே அமைந்தன.
'மடை திறந்து' பாடலை மனோ பாடும்போது இளையராஜாவின் உணர்வுகளைத் தன்னுடைய குரலில் மிகவும் அருமையாக வெளிப்படுத்திப் பாடினார். தொடர்ந்து 'இளைய நிலா', 'சுந்தரி கண்ணால்', 'காட்டு குயிலு', 'மாங்குயிலே' பாடல்களை பாடிக் கிறங்கவைத்தார்.
சின்னக்குயில் சித்ரா 'மாலையில் யாரோ'வில் தொடங்கி, 'நின்னு கோரி', 'வெட்டிவேரு வாசம்' பாடல்களால் ரசிகர்களைக் கட்டிப்போட்டார்.
தமிழ் பேசத் தெரியாத பாடகி விபாவரி 'செந்தூரப்பூவே' பாடலைப் பாடி நம்மைவிட்டு சமீபத்தில் பிரிந்த நடிகை ஸ்ரீதேவியை ஞாபகப்படுத்தினார். அவருடைய தமிழ் உச்சரிப்பு பிரமாதமாக இருந்தது. அவர் பாடிய 'ஆனந்த ராகம்', 'புத்தம்புது காலை' மற்றும் எல்லாப் பாடல்களும் சிறப்பாக இருந்தன.
இளையராஜா 'தென்பாண்டி சீமையிலே' பாடலைப் பாடி ரசிகர்களைத் தாலாட்டினார். திரைப்பட வரிகளோடு நிறுத்திவிடாமல், 'ஏழேழு கடல் கடந்து' என, வெளிநாட்டில் வாழும் தமிழர்களையும், இசையையும் குறிப்பிட்டுச் சில வரிகள் சேர்த்துப் பாடியது நிறைவாக இருந்தது.
பாடகர்கள் ராகுல் நம்பியார் உட்பட அனைவரும் மிகச்சிறப்பாகப் பாடி கைதட்டல் பெற்றனர். கோரஸ் பாடிய 8 பேரும் பிரமாதம்.
பெரும்பகுதிப் பாடல்களுக்கு புடாபெஸ்ட் சிம்பொனி ஆர்கெஸ்ட்ரா குழுவினரின் பங்களிப்பு அதிகமாகக் காணப்பட்ட போதுதான் 35 ஆண்டுகளுக்கு முன்னரே இளையராஜா எந்த அளவுக்கு இசை அமைத்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது.
அவர் இசையைக் கேட்டு விளையாடினோம், அதைக் கேட்டு வளர்ந்தோம், அதைக் கேட்டு காதலித்தோம், அதைக் கேட்டு குழந்தைகளை வளர்த்தோம், அதைக் கேட்டு உறங்கினோம், அமைதியுற்றோம். இப்படி நம் வாழ்வில் முழுவதுமாய் கலந்துவிட்ட அந்தப் பண்ணைபுரத்து 'ராகதேவன்' நடத்திய இசை வேள்வியில் அனைவரும் முழுகித் திளைத்தார்கள் என்பது நிச்சயம்.
கணேஷ் பாபு |