2014ம் ஆண்டில் தொடங்கப்பட்டு 2017ம் ஆண்டுவரை விரிகுடா கலைக்கூடம் என்ற பெயரில் நடைபெற்று வந்த திருக்குறள் போட்டி இவ்வாண்டு விரிகுடா குறள்கூடமென உருவெடுத்தது.
ஐந்தாவது வருடத் திருக்குறள் போட்டி எண்பதுக்கும் மேற்பட்ட தன்னார்வத் தொண்டர்களின் உதவியுடன் மார்ச் 10, 2018 அன்று ஃப்ரீமான்ட் ஹார்னர் ஜூனியர் உயர்நிலைப் பள்ளியில் காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை நடத்தப்பட்டது. கிட்டத்தட்ட 250க்கும் மேற்பட்ட குழந்தைகள் குறட்பாக்களை ஒப்பித்தனர்.
ஒரு குறளும் அதற்குப் பொருளும் கூறும் குழந்தைகளுக்கு ஒரு டாலர் வீதம் பரிசு வழங்கிவரும் விரிகுடாக் குறள்கூடத்தின் பணி தொடரப் புரவலர் பலர் உதவினர்.
பரிசளிப்பு விழா மார்ச் 24ம் நாள் சனிக்கிழமை அன்று டப்ளின் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக பெர்க்கலி பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியை திருமதி. பாரதி சங்கர ராஜுலு மற்றும் 2016ம் ஆண்டின் குறளரசி திருமதி. ஈஸ்வரி பாண்டியன் வந்திருந்தனர்.
போட்டிகளில் 250 குழந்தைகள் 9500 முறை குறட்பாக்களை ஒப்பித்தனர். பெரியவர்கள் பிரிவில் திருமதி. சுகன்யா கல்யாணிசுந்தரம் 1330 குறள்களையும் ஒப்பித்து 'குறளரசி' பட்டம் வென்றார். கல்யாணிசுந்தரம் சென்ற ஆண்டு 600 குறள்களை ஒப்பித்து பெரியவர்களுக்கான முதல் பரிசைப் பெற்றார் என்பது குறிப்பிடத் தக்கது.
பரிசளிப்பு விழாவில் திரு. சாலமன் பாப்பையா, திரு. சிவக்குமார் ஆகியோரின் வாழ்த்துரைகளையும், திருக்குறள் சார்ந்த கட்டுரைகளையும் தாங்கிய விழாமலரை வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றத் தலைவர் திரு. தயா வெளியிட்டார். பாரதி தமிழ்ச் சங்கச் செயலாளர் திரு. முரளி ஜம்பு பெற்றுக்கொண்டார். வெற்றிபெற்ற குழந்தைகளுக்குச் சான்றிதழ்களும் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.
கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இவற்றில் முத்தாய்ப்பாக அமைந்தது விரிகுடாப் பகுதியில் இளையர்களை வைத்து இசைநிகழ்ச்சி நடத்தி வரும் திரு. ப்ரதீப் சுவாமிநாதன் இசையமைப்பில் குழந்தைகள் பாடிய திருக்குறள் பாடல்தான். |