தெரியுமா?: தமிழ்நாடு அறக்கட்டளை: நியூ ஜெர்சி மாநாடு
தமிழ்நாடு அறக்கட்டளையின் 44வது மாநில மாநாடு நியூ ஜெர்ஸியில் மே 26, 27 தேதிகளில் (மெமோரியல் வீக் எண்ட்) நடைபெறவுள்ளது. பட்டிமன்றப் பேச்சாளர்கள் திருமதி பாரதி பாஸ்கர், திரு. ராஜா ஆகியோரின் சிறப்புரை, திருமதி நித்யஸ்ரீ மஹாதேவனின் இசை விருந்து, மதுரை முரளிதரன் அவர்களின் பிரம்மாண்டமான 'கர்ணன்' நாட்டிய நாடகம், திருமதி சுமித்ரா ராம்ஜி அவர்களின் பெண்மையைப் போற்றும் 'சக்தி' உள்பட இரண்டு நாட்களுக்கு இயல், இசை, நாடக விருந்துகள் வழங்கப்படும் என்கிறார் மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் திரு. பாலாஜி பிரகாஷ் ராவ்.

சத்யபிரகாஷ், பூஜா ஆகியோர் கலந்து கொள்ளும்
'மெர்சல்' மனதைத் தொடும் மெல்லிசை இரவு, தொழில் முனைவோருக்கான AETA அமைப்புடன் நடத்தப்பெறும் கருத்தரங்கம், தமிழ்நாடு அறக்கட்டளை தமிழகம் தோறும் நடத்திவரும் சேவைத் திட்டங்கள், இந்தியாவில் சேவை செய்வது பற்றிய இளையோருக்கான பட்டறைகள் ஆகிய நிகழ்ச்சிகள், மாநாட்டின் முத்தாய்ப்பாக அமையும் என்கிறார் செய்தித் தொடர்புக் குழுத் தலைவர் திருமதி. கவிதா ராமசாமி.

தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும் தொடர்ந்து கல்வி, பெண்கள் முன்னேற்றம், மருத்துவம் மற்றும் சுகாதாரம் தொடர்பான திட்டங்களை அமல்படுத்த ஒவ்வொரு மாவட்டத்திலும் வைப்புநிதி தொடங்கப் பெற்று அதிலிருந்து வரும் வட்டியை வைத்து ஆண்டுதோறும் திட்டங்கள் அந்தக் குறிப்பிட்ட மாவட்டங்களில் நடத்தப்பெறும் என்றும், நியூஜெர்ஸி மாநாட்டில் திரட்டப்படும் நிதி, இந்த மாவட்டங்களுக்கான வைப்பு நிதிக்கும், காரைக்குடி அருகில் உள்ள 'கனவகம்' என்ற ஆதரவற்ற பெண் குழந்தைகள் காப்பகத்திற்கும் பயன்படுத்தப்படும் என்றும் கூறுகிறார் தமிழ்நாடு அறக்கட்டளையின் தலைவர் சோமலே சோமசுந்தரம்.

நீங்கள் பிறந்த, வளர்ந்த மாவட்டத்திற்கு நன்கொடையை வழங்கி "ஊரு நம்ம ஊரு" என்று மகிழ்ந்து, மாநாட்டில் பங்கேற்றுச் சேவை மனப்பான்மையோடு இரண்டு நாட்கள் குடும்பத்தோடு சந்தோஷமாக இருந்து, திருவிழா உணர்வோடு திரும்புங்கள்.

பதிவு செய்ய: convention.tnfusa.org
மின்னஞ்சல்: convention@tnfusa.org
தொலைபேசி: 781-486-3872

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com