மிருகங்கள் ஒருமுறை மாநாடு ஒன்றைக் கூட்டின. இந்த மனிதன் தான்தான் படைப்பின் மகுடம் என்றும், மண்ணில் காண்பன அனைத்துக்கும் நானே பேரரசன் என்றும் கூறிக்கொள்கிறானே, அது சரியா என்று விவாதித்துத் தீர்மானிப்பது இந்த மாநாட்டின் நோக்கம். சிங்கம் தலைமை தாங்கி, மனிதனின் கூற்றை மறுத்துப் பேசியது. சிறுத்தை அதை ஆமோதித்துப் பேசுகையில் "எல்லா மிருகங்களுக்குமே அவன் ஓர் அவமானச் சின்னம். அவன் உயிர்க்கொல்லி விஷத்தைத் தயாரித்துக் குடிப்பதுடன் அந்த முட்டாள்தனத்துக்கு அவன் பெருமையும் படுகிறான். அவன் தன் இனத்தையே ஏமாற்றுகிறான். தனது சகோதர சகோதரிகளைக் கொல்வதற்குக் கொடுமையான ஆயுதங்களை உருவாக்கத் தனது ஆற்றலையும் சொத்துக்களையும் பயன்படுத்துகிறான். குதிரைகளையும் நாய்களையும் ஓட ஓட விரட்டி, அவற்றின்மீது பணயம் வைத்துச் சூதாடுகிறான். குரூரம், பேராசை, ஒழுக்கமின்மை, திருப்தியின்மை, வெட்கமின்மை ஆகியவற்றின் மொத்த உரு அவன். மிருக உலகத்துக்கே அவன் ஒரு மோசமான முன்னுதாரணம். மிகவுயர்ந்த உணர்வுகளும் அறிவும் வாய்க்கப் பெற்றிருந்தும் அவனுடைய நடத்தை அருவருக்கத் தக்கதாகவும், அவமானகரமாகவும் இருக்கிறது" என்று வலுவாகத் தாக்கியது.
"அடுத்த வேளை உணவு கிடைக்குமா, கிடைத்தாலும் எங்கே கிடைக்கும் என்பதுகூட நமக்குத் தெரியாது. தலைசாய்க்க நமக்கென்று ஓர் இடம் கிடையாது. நமது மேல்தோலைத் தவிர வேறோர் ஆடை கிடையாது. ஆனால் நம்மில் மோசமானவன்கூட மனிதன் என்கிற ராட்சசனைவிட, இறைவனின் குழந்தையாக இருக்க அதிகத் தகுதி கொண்டவராக இருக்கிறோம்" என்று சிறுத்தை சொல்லிமுடித்தது.
அப்போது நரி எழுந்தது. "கலவிக்கென நமக்கொரு காலம் உண்டு. ஆனால் மனிதனோ எல்லாச் சட்டதிட்டங்களையும் உடைத்துவிட்டான், அவனுக்குச் சுயகட்டுப்பாடே கிடையாது என்பதைச் சொல்ல எனக்கு வெட்கமாக இருக்கிறது. தான் வைத்ததுதான் சட்டம் என்று நினைக்கும் அவன் பிற எல்லாவற்றுக்கும் பெருங்கேடாக அமைந்துவிட்டான்" என்றது நரி.
அந்த வாதங்களையெல்லாம் தொகுத்தளித்தது சிங்கம். தன்னை மிகவுயர்ந்தவன் என்ற மனிதர்கள் கூறிக்கொள்வதை எதிர்த்து மற்ற மிருகங்கள் மனிதர்மீது சுமத்துகிற எல்லாப் பழிகளும் சரிதான் என்று பொதுவாக ஒப்புக்கொண்டது. ஆனால் எல்லா மனிதர்களையும் ஒரேயடியாகப் பழித்துவிட முடியாது என்றது. மிருகத்தனமானவர்களும் மோசமானவர்களும் மனிதர்களில் உண்டு. அதே நேரத்தில், விவேகம் வைராக்கியம் என்னும் இரண்டு விசேஷ குணங்களைச் சரியாகப் பயன்படுத்தித் தமது கடந்தகால மிருகத்தனத்தை விட்டு அகன்றவர்களும் இருக்கிறார்கள் என்று சுட்டிக் காட்டியது. இதில் பின்னவர்களை எல்லா மிருகங்களும் சான்றோர்கள் என ஏற்கவேண்டும்; அதே சமயம் முன்னவர்களைப் பழிக்கவும் தூற்றவும் வேண்டியதுதான் என்று சிங்கம் கூறி முடித்தது.
- ஸ்ரீ சத்திய சாயிபாபா |