சிக்குன் - குனியா அரசியல்!
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெட்ரோல், டீசல் விலையை ஐந்து முறை ஏற்றிய மத்திய - மாநில அரசுகளை கண்டித்து அ.தி.மு.க தலைமையிலான எதிர்க்கட்சிகள் சென்னை யில் மிகப்பிரம்மாண்டமான பேரணியையும், பொதுக்கூட்டத்தையும் நடத்தியது. அ.தி.மு.க பொதுசெயலர் ஜெயலலிதா தலைமையில் நடைபெற்ற அப்போராட்டத்தில், ம.தி.மு.க பொதுசெயலர் வைகோ, விடுதலை சிறுத்தை இயக்கத் தலைவர் திருமாவளவன் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்று தங்களது ஒருமித்த எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக தமிழகம் எங்கும் பரவி வரும் சிக்குன் குனியா என்னும் ஒருவகை காய்ச்சலை கட்டுப்படுத்த ஆளும் தி.மு.க அரசு தவறி விட்டதாக கூறி, இப்போது மீண்டும் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து போராட்டம் ஒன்றை நடத்தியிருக்கின்றன.

சிக்குன் குனியா என்னும் ஒருவகை காய்ச்சலில் தமிழகத்தில் மட்டும் ஆயிரக் கணக்கானோர் பாதிக்கப்பட்டு பல்வேறு அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவ மனைகளிலும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்நோய்க்கு இதுவரை சுமார் 200 பேர் மரணமடைந்திருப்பதாக எதிர்க் கட்சி தலைவர் ஜெயலலிதா கூறியுள்ளார். அரசு இக்காய்ச்சலை கட்டுப்படுத்த எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அரசை குற்றம் சாட்டிய வைகோ, யாரும் இக்காய்ச்சலில் இறக்கவில்லை என்று அரசு பொய்ப்பிரச்சாரம் செய்கிறது என்று குற்றம் சாட்டினார். அதே போல் விடுதலை சிறுத்தை தலைவர் திருமாவளவனும் அரசின் மெத்தனப் போக்கே இந்நோய் பெருகுவதற்கு காரணம் என்று கூறினார்.

ஆனால் சிக்குன்குனியா நோய் பாதித்து இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை. 155 பேர் இறந்ததாக அ.தி.மு.க பொதுச்செயலர் ஜெயலலிதா கூறியிருப்பது தவறான தகவல் என்று மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி மறுப்பு தெரிவித்தார். அதுமட்டு மல்லாமல் இறந்த 155 பேர்களின் பெயரையும், விலாசத்தையும் எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதா வெளியிட முடியுமா என்று எதிர்கேள்வியும் எழுப்பினார்.

தேசிய முன்னேற்ற திராவிட கழகத் தலைவர் விஜயகாந்த் சிக்குன் குனியா குறித்து வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தியது மட்டு மல்லாமல், தங்கள் கட்சியின் மருத்துவ அணியைச் சேர்ந்த மருத்துவர்களின் தொலைபேசி எண்ணையும் பத்திரிகையில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் சிக்குன் குனியா நோயைக் கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சியர்கள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி ஆட்சியர்களை கேட்டுக் கொண்டார்.

ஆர்க்காடு வீராசாமிக்கு பதிலளிக்கும் விதத்தில் ஜெயலலிதா தமிழகத்தில் சிக்குன் குனியா நோயால் இறந்தவர்களின் பெயர் பட்டியலையும், விலாசத்தையும் வெளி யிட்டார். ஆனால் ஜெயலலிதா அரசியல் உள் நோக்கத்துடன் சிக்குன் குனியா விவகாரத்தைப் பெரிதுப்படுத்துகிறார் என்று தமிழக சுகாதார அமைச்சர் கே.கே.எஸ். எஸ்.ஆர் ராமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

கேடிஸ்ரீ

© TamilOnline.com