ஹில்லரியின் பதில் அருணை ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியது. அவன் அந்த மலைவாழ் பழங்குடி மக்களைப் பற்றி கேள்விப்பட்டதெல்லாம் முழுவதும் உண்மையல்ல என்று மெதுவாகப் புரிந்துகொள்ள ஆரம்பித்தான். ஹில்லரி ஏன் அவன் பயந்தபோது கலகலவென்று சிரித்தாள் என்று தெரிந்தது.
"என்ன நண்பா, இன்னும் சந்தேகமா? ஏன் ஒன்றுமே பேசாமல் இருக்கிறாய்?"
அருண் விளையாட்டாகத் தலையை ஆட்டினான். "ஒண்ணும் இல்லை… அச்சூ… என்னால்… அச்சூ… நம்பவே முடியலை…. அச்சூ" என்று தீபாவளிச்சரம் போல தும்மித் தள்ளினான்.
"நண்பா, மிகவும் கஷ்டப்படுகிறாய் போலிருக்கிறதே? கொஞ்சம் இரு, நான் உனக்கு நிவாரணம் கொடுக்க ஏற்பாடு செய்கிறேன்," என்று சொல்லி அங்கிருந்து வேகமாகச் சென்றாள்.
சில நிமிடங்களில் ஒரு கொத்து இலைகளோடு வந்தாள். அந்த இலைகளில் இருந்து வந்த வாசம் அருணுக்கு யூகலிப்டஸ் மாதிரி தோன்றியது.
"நண்பா, இந்தா, எங்களது இயற்கை நிவாரணம். இதை நன்றாக மென்று, அதில் இருக்கும் சாற்றைக் குடி" என்றாள். அருண் சற்றுத் தயங்கினான். என்னடா இது, இப்படி திடீரென்று இலைகளைக் கொடுத்து மாடுமாதிரிச் சாப்பிடச் சொல்கிறாளே என்று வியந்தான். அவனது தயக்கத்தை உடனடியாக கண்டு கொண்டாள் ஹில்லரி.
"நண்பா, உனக்கு ஒன்றும் கெடுதல் வராது. இதோ பார், நானும் சாப்பிடுகிறேன்," என்று அவள் மென்று காட்டினாள்.
"சாரி" என்று சொல்லி, அவனும் அவள் கொடுத்த சில இலைகளை மென்றான். "இது யூகலிப்டஸ் மாதிரி இருக்கு," என்றான்.
அதற்கு அவள், "இதை நாங்கள் 'Sneeze Snatcher' இலை என்று சொல்வோம்." "Sneeze Snatcher? வினோதமான பெயராக இருக்கே!"
"ஆமாம் நண்பா, ஆமாம். எங்களது பெயர்கள் எல்லாம் வினோதமாகப் பட்டாலும் அவை மிகவும் அர்த்தம் உள்ளவை. Sneeze Catcher என்பதை மிகவும் எளிமையாக நினைவில் கொள்ளலாம் பார்த்தாயா?" "Sneeze Catcher. The one that catches all the sneezes" என்று சொல்லி ஹை-5 கொடுத்தான் அவளுக்கு. "Wow! இந்த இலையோட சாறு ரொம்ப ருசியா இருக்கு. நான் அப்படியே ஒரு ஆடுபோல நாள்பூரா சாப்பிட்டுகிட்டே இருப்பேன் போலிருக்கு."
"நன்றாகச் சொன்னாய், நண்பா" என்று ஆமோதித்தாள். "பார், உனக்கு உடனடி நிவாரணம் கிடைத்துவிட்டது. நீ இதைக் கொதிக்கும் தண்ணீரில் போட்டு ஆவி பிடிக்கலாம். சாப்பாட்டில் கீரைபோலச் சாப்பிடலாம். இப்படிப் பலவழிகளில் நாம் எடுத்துக்கொள்ளலாம்."
"Wow!"
"எங்கள் கிராமத்தில் நாங்கள் சிறு குழந்தைகளாக இருக்கும் போதே இதை தினந்தோறும் எடுத்துக்கொள்ள ஆரம்பிப்போம். அதனால், எங்களுக்கு ஜலதோஷம் வரவே வராது. இப்பொழுது தெரிகிறதா, நான் ஏன் அப்படிச் சிரித்தேன் என்று?"
அருண் தலையசைத்தான். அருணுக்கு அந்த மூலிகையால் நிவாரணம் தெரிந்தது. அதற்குள் அங்கு மிஸ்டர். கிளென் அருணைத் தேடிக்கொண்டு வந்தார். அவர் முகத்தில் ஒரு எரிச்சல் தெரிந்தது.
"அருண், உன்னை எங்கெல்லாம் தேடறது? வா என்னோட" என்றார். அருணின் கையில் இருந்த இலைகளைப் பார்த்தவுடன் அவரின் எரிச்சல் இன்னும் கூடியது. "எதையும் தொடக்கூடாதுன்னு மிஸஸ் ரிட்ஜ் சொன்னாங்க இல்லை? இது என்னது கையிலே?" என்று சொல்லி அந்த இலைகளைப் பிடுங்கி எறிய முயன்றார்.
அவரை ஹில்லரி தடுத்தாள். "ஐயா, இந்த நண்பருக்கு நான்தான் கொடுத்தேன். அருண் ஏதும் தானாக எடுத்துக்கொள்ளவில்லை."
கிளென் அவசரத்தில் இருந்தார். "அருண், சரி சரி, வா."
"ஜயா, நீங்களும் இந்த இலையை ருசித்துப்பாருங்கள். உங்களுக்கு என்றைக்குமே ஜலதோஷம் துளிக்கூட வராது" என்றாள்.
அவசரத்தில் இருந்த கிளென்னின் முகத்தில் திடீரென்று ஒரு பிரகாசம் தெரிந்தது. அதை அருண் கவனித்தான். அவரிடம் ஏதோ ஒரு சூது இருக்கிறது என்று அருண் சந்தேகப்பட்டான்.
"நன்றி," என்று சொல்லி, கிளென் சில இலைகளை ஹில்லரியிடம் இருந்து வாங்கிக்கொண்டு நகர்ந்தார். "அருண், 5 நிமிஷம்தான். அதுக்குள்ளே வந்திரணும்," என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். அந்த இலைகளைப் பார்த்ததும் கிளென்னிடம் ஏற்பட்ட மாற்றம் அருணைக் குழப்பியது. "நண்பா, நாங்கள் வாரம் ஒருமுறை சந்தைக்கு வெளியே வருவோம். அப்பொழுது என்னை நீ வந்து சந்தித்தால் இன்னும் நிறைய இலைகள் கொண்டு தருகிறேன்" என்றாள் ஹில்லரி.
"வெளியே என்றால்?"
"எங்க கிராமத்துக்கு வெளியே. உங்கள் நகர்ப்புறங்களில்."
"எர்த்தாம்டன்?"
"இல்லை நண்பா, வொர்த்தாம்டன் அருகில்."
"ஓ? அது எர்த்தாம்டன் நகரைவிட ரொம்பத் தொலைவு ஆயிற்றே உங்களுக்கு. ஏன் எங்கள் ஊருக்கு வரலாமே?"
"இல்லை நண்பா, நாங்கள் எங்களது இலை, காய், கனிகளை உங்கள் ஊரில் விற்க முடியாதபடி தடை செய்துள்ளார்கள்."
"தடையா? என்ன? எப்படி? யார்?" அருணின் கேள்விகள் அடுக்கடுக்காக வந்தன.
"ஹோர்ஷியானா என்று ஒரு நிறுவனம். என்னவோ தெரியவில்லை. நாங்கள் உங்கள் ஊர் சந்தைக்கு வர முடியாதபடி பண்ணிவிட்டார்கள்."
அருணுக்கு ஹோர்ஷியானாவின் பெயரைக் கேட்டவுடன் தூக்கிவாரிப் போட்டது. இங்கேயும் அவர்களது விஷமம் இருக்கிறது என்று தெரிந்து கொண்டான்.
"ஏன் ஹில்லரி? எதற்காக?"
"அதெல்லாம் பெரியவங்க விஷயம், நண்பா. குழந்தைகளான எங்களுக்கு ஒன்றும் தெரியாது. நீ வா வொர்த்தாம்டன் நகரச் சந்தைக்கு இந்த வாரம். நான் உனக்கு ஒரு கூடை நிறைய Sneeze Snatcher தழை கொண்டு வருகிறேன். உன் நண்பர்கள் எல்லோருக்கும் அதைக் கொடு," என்றாள்.
அருண், ஹில்லரியிடம் இருந்து விடைபெறுமுன், தன் ஊரில் இருந்து மிகவும் தொலைவில் இருக்கும் Worthampton நகருக்கு தன் அம்மாவையோ, அப்பாவையோ அந்த வாரம் கூட்டிக்கொண்டு போகச் சொல்லமுடியுமா என்று யோசித்தான்.
(தொடரும்)
கதை: ராஜேஷ் படம்: Anh Tran |